ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் + "||" + Vaigunda Egadasi Perumal temples Opening ceremony Many devotees worship the Sami

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஒன்றாகும்.
கிருஷ்ணகிரி,

வைகுண்ட ஏகாதசியையொட்டி, பரமபதவாசல் என்று அழைக்கப்படும் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த ஆண்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாடவீதியில் உள்ள ஸ்ரீநவநீத வேணுகோபால சாமி கோவிலில், சொர்க்கவாசல் திறப்பை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. காலை 4.30 மணிக்கு பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்தார். இதில் பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து சீதேவி, பூதேவி சமேத நவநீத வேணுகோபால சாமி கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் லட்டு, அன்னதானம் வழங்கப்பட்டன.

சூளகிரி அருகே கோபசந்திரத்தில் உள்ள வெங்கடேஸ்வர சாமி கோவிலில் அதிகாலை மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், சொர்க்கவாசல் வழியாக சாமி எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி, சாமி, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அமைச்சருக்கு கோவில் அறக்கட்டளை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதேபோல், சூளகிரி வரதராஜ சாமி, பாகலூர் அருகே குடிசெட்லு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சாமி கோவில், ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள லட்சுமி வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஊத்தங்கரையில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வெங்கட்ரமண கோவில், லட்சுமி நாராயண சாமி கோவில் களில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை யொட்டி பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

மத்திகிரி பஸ் நிலையம் அருகேயுள்ள கோதண்டராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் சொர்க்கவாசல் வழியாக வலம் வந்தார். டி.வி.எஸ். நகரில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மர் மற்றும் பக்த அனுமன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் கோவில் அறங்காவல் குழுத்தலைவர் பி.ஆர்.வாசுதேவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேஷ்வர சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. சாமிக்கு விசேஷ பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு லட்டு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பிரசாத் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தில் உள்ள கோதண்ட ராமசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யதனர். விழாவையொட்டி இரவு சாமி திருவீதி உலா நடைபெற்றது.