மீட்பர் பிறந்தார்
இயேசு கிறிஸ்து மண்ணகத்தில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து மரித்தது எல்லாமே மானுட மீட்புக்குக்காகத்தான்.
‘மீட்பு’ என்பதற்கு உண்மையான பொருளே ‘முழுமையான விடுதலை’ என்பது தானே?
‘உறவுக்குக் கை கொடுத்தார், மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத்தார், அன்புக்கு ஒளி கொடுத்தார், உலக அமைதிக்கு வழி வகுத்தார், மீட்புக்கு உயிர் கொடுத்தார், இறை ஆட்சிக்கு விதை விதைத்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பு அளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்’ என்கிறது யோவான் 3-வது அதிகாரம் 14-17 வசனங்கள்.
இறைத்தூதராக மண்ணில் பிறப்பெடுத்த இயேசு அரச குலத்திலேயே அவதரித்திருக்க முடியும். ஆனால், ஆடம்பர வாழ்க்கைச் சிந்தனையில் இருந்து மக்களை மீட்பதற்காகத்தான், ஏழைப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார். எளிய மனிதர்களின் தோழனாகவும் வாழ்ந்து காட்டினார்.
அறியாமை இருளிலிருந்து மீண்டு, மனிதர்கள் ஞான ஒளி பெறவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே, குறுக்குப் புத்தியுடன் கேள்வி கேட்ட சதுசேயர்களுக்கும், பரிசேயர்களுக்கும் தனது 12-வது வயதிலேயே ஆலயத்தில் வைத்து பதிலடிகொடுத்தார்.
பெண் விடுதலையை மீட்டெடுக்கவே, ஓர் விபசாரப் பெண்ணை அவர் முன் நிறுத்தி, தண்டனை வழங்கக் கோரிய பரிசேயர்களுக்கு, ‘உங்களில் பாவம் செய்யாதவன், இவள் மீது கல் எறியட்டும்’ என்று கண்டனம் தெரிவித்தார்.
தான் யூதகுலம் என்ற உயர்குடியில் பிறந்தாலும் அடிமைத் தளையிலிருந்து, மனிதர்களை மீட்டெடுக்கவே ஒடுக்கப்பட்ட புறவினத்தாரோடும், ஒதுக்கி வைக்கப்பட்டத் தொழுநோயாளிகளோடும் நெருங்கிப் பழகி இயைந்த வாழ்க்கை நடத்தினார்.
இறைவன் உறையும் ஆலயத்தை வியாபாரி களிடமிருந்து மீட்கவே அன்று கோவிலைச் சந்தையாக்கிய அந்த கொள்ளையர்களுக்கு சாட்டையடி கொடுத்து சரித்திரம் படைத்தார் இயேசு கிறிஸ்து.
பகைமை, வெறுப்பு வேற்றுமைகளில் இருந்தெல்லாம் மனித குலத்தை மீட்டு, அவர்களிடையே அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நற்பண்புகளை தழைக்கச் செய்யத்தானே அன்று மலைப்பிரசங்கம் முழங்கினார்.
மலைப்பிரசங்கம் வழியாகப் பொதுவுடமைச் சிந்தாந்தத்தை முழங்கிய முதல் புரட்சியாளன் இயேசு கிறிஸ்து தான் என்பதை யாரும் மறுக்க முடியுமா?
பசியிலிருந்தும், பட்டினியிலிருந்தும் மனிதர்களை மீட்கவே அன்றொரு நாள் அப்பத்தையும், மீனையும் ஆசீர்வதித்து அதை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளிக்கச் சொன்னார்.
அவரது பிறப்பு இயற்கை அமைத்த ஒரு குகையில். இறப்பு இயற்கையினால் கிடைத்த சிலுவை மரத்தில். ஞானஸ் நானம் யோர்தான் நதியில். தனது சீடர் களைத் தேர்ந்தெடுத்து கடற்கரையில் தான்.
கெத்சேமெனித் தோட்டத்தில் தான் ஜெபித்தார். கெடுதலான அலகையை மலையில் தான் சபித்தார். வானத்துப் பறவைகளைப் பார்க்கச் சொன்னார். வளர்ந்து நிற்கும் நெற்கதிரை நோக்கச் சொன்னார்.
இயற்கைப் பேரழிவிலிருந்து உலகை மீட்கவே, இயற்கையை நேசித்து அவற்றோடு ஒன்றிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார் இயேசு.
அநீதிகள், அக்கிரமங்களின் பிடியிலிருந்து நீதியையும், நேர்மையையும், நியாயத்தையும் மீட்கத்தானே, அன்று அதிகாரத்தின் உச்சத்திலிருந்த பிலாத்து அரசன் கன்னத்தில் அறைந்தபோது, நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யவில்லையெனில் ஏன் என்னை அறைந்தாய் என்று போர்க்குரல் எழுப்பினார்?.
கயவர்களின் நயவஞ்சகங்களைச் சந்திக்கிறபோது, பொறுமை உணர்வை மீட்டெடுக்கவே கொடூரமான முள் முடியையும், அவமானகரமான சிலுவைச்சாவையும் ஏற்றுக்கொண்டார், நம்மைப் பாவங்களிலிருந்து மீட்க.
இதைத்தான் எசாயா 53:4-6 வசனங்களில் ‘அவர் நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
குறைந்த வயதிலேயே மரணத்தை எய்தினாலும், குறிக்கோள் மாறாத ஆன்மிக நாயகனாகவும், உயர்ந்த சமூகப்போராளியாகவும் குவலயத்தில் வாழ்ந்து காட்டி விட்டுப் போனவர் இயேசு கிறிஸ்து.
எனவே அவர் காட்டிய மீட்பின் வழி நடப்போம். அனைத்து ஆனந்தங்களையும் பெறுவோம்.
கவிஞர் எல்.பிரைட், தேவகோட்டை.
Related Tags :
Next Story