ஆன்மிகம்

சிறப்பு மிகுந்த சிவாலயங்கள் + "||" + The great Shiva temples

சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்

சிறப்பு மிகுந்த சிவாலயங்கள்
இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் ஏராளமான சிவன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் அவற்றில் பாடல்பெற்ற சிவ ஸ்தலங்களாக போற்றப்படும் 274 ஆலயங்களில், 264 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. இந்த ஆலயங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் கொண்டவை. இவற்றில் பல கோவில்கள் சுயம்பு லிங்கங்களை மூலவராக கொண்டது என்பது சிறப்புக்குரியது. சிறப்பு மிக்க சிவாலயங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
காஞ்சீபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல், லிங்கமே மூலவராக இருக்கிறது. அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன், மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார். வெள்ளத்தில் லிங்கம் அடித்துச் சென்று விடாமல் இருக்க அம்மன், லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இப்போதும் இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கைத் தடம் இருப்பதைக் காணலாம். இங்குள்ள ஒற்றை மாமரம் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த மரத்தில் இருந்து நான்கு வகையாக (வேதங்கள்) சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன.

பாஸ்கரேஸ்வரர் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில். சிவபெருமானின் சன்னிதிக்கு எதிரில் நின்று சூரிய பகவான் தரிசனம் செய்யும் கோலத்தை, இந்த ஆலயத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள். இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள், சிம்ம லக்னம், சிம்ம ராசி, சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள், வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும், சூரிய பகவானையும் வழிபட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் நீண்டநாள் நோய் நீங்குமாம். இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்றும் கூறுகிறார்கள்.

புஷ்பவனேஸ்வரர் ஆலயம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது, புஷ்பவனேஸ்வரர் கோவில். இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசி நகரை விடவும், 16 மடங்கு புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது. இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தியை கரைத்து, மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மூலவருக்கு எதிராக உள்ள நந்தி சற்று விலகியிருப்பது தனிச் சிறப்பாகும். திருமணத் தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம். சரியாக பேச்சு வராதவர்களுக்காகவும், கலைகளில் சிறந்து விளங்கவும், ஆயுள் விருத்திக்காகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

சதுரகிரி மலைக்கோவில்
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோவில் தான், சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும், தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும், நவபாஷண முருகனின் சிலையை, சதுரகிரி மலையில் தங்கியிருந்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது. இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்குள்ள மலை அருவி நீரும், மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள்.

கும்பேஸ்வரர் திருத்தலம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ளது கும்பேஸ்வரர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம், கீழே பருத்தும், மேல செல்லச் செல்ல ஊசி போன்ற வடிவிலும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் கல் நாதஸ்வரம் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா இங்கு நடைபெறும் விழாக்களில் பிரசித்திப் பெற்றதாகும். புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள், குபேர வாழ்வு வேண்டுபவர்கள், இத்தலத்தில் அருள்பாலிக்கும் மங்களநாயகி அம்மனுக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டிய பலன் கிடைக்கும்.

சோமஸ்வரர் திருக்கோவில்

கும்பகோணத்தில் இருந்து உடையாளூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் கீழ்ப்பழையறை என்ற ஊர் இருக்கிறது. இங்கு சோமகலாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோழ மன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கிய திருத்தலம் இதுவாகும். வடதளியில் மற்றொரு மதத்தவரால் மறைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை, அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர், உண்ணா நோன்பிருந்து மீட்ட சிறப்புக்குரிய திருத்தலம். மங்கையர்கரசியார், அமர்நீதி நாயனார் ஆகியோர் சிவனடியார்களுக்கு அருள்பணி புரிந்த தலம் இது. இந்த ஆலய இறைவனை, சோமன் என்று அழைக்கப்படும் சந்திரனும், குரு பகவானும் பூசித்து பேறு பெற்றுள்ளனர்.

திருமேனிநாதர் ஆலயம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ளது திருமேனிநாதர் திருக்கோவில். இங்கு இறைவன் திருமணக் கோலத்தில் அருள்வதால், இந்த ஆலயத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வது சிறப்புக்குரிய விஷயமாகும். மேலும் திருமண வரம் கிடைக்கவும் இத்தல இறைவனை வழிபடலாம். பிரளய காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தை தடுத்த இடம். இங்கு சிவபெருமானே, ‘கயிலாயத்தை விட சிறந்த இடம் இது’ என்று கருதி அருள்பாலிப்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் சிவராத்திரி அன்று வில்வ இலையைக் கொண்டு இறைவனை அர்ச்சித்து வழிபட்டால், அனைத்து தலங்களிலும் உள்ள சிவபெருமானை ஆயிரம் வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

சுவேதாரண்யேஸ்வரர் கோவில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தியாவில் காசிக்கு நிகரான தலங்கள் ஆறு இருப்பதாகவும், அதில் ஒன்று இந்த ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருந்து அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் 1008 நடனங்களையும் ஆடிய திருத்தலம் இது என்பதால், ‘ஆதி சிதம்பரம்’ என்றும் இந்த ஆலயம் போற்றப்படுகிறது. சிவபெருமானின் 64 வடிவங்களில் 43-வது வடிவம் அகோரமூர்த்தியாகும். இந்த ஆலயத்தின் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது. 21 தலைமுறைக்கான சாபத்தை நீக்கும் வல்லமை இத்தல இறைவனுக்கு உண்டு. இங்குள்ள புதன் பகவானை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும்.

தொகுப்பு: திருவேங்கடம், சென்னை.