ஆன்மிகம்

தோஷங்கள் போக்கும் மருதாந்த நாதேஸ்வரர் + "||" + DOSHAS Will go Marutanta Natesvarar

தோஷங்கள் போக்கும் மருதாந்த நாதேஸ்வரர்

தோஷங்கள் போக்கும் மருதாந்த நாதேஸ்வரர்
திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மருதாந்த நாதேஸ்வரர். இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது.
சாரத்வதம் என்று ஒரு ஊர். அங்கு வருமான ககோளர் என்பவர் இருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்தவர்; சிவபக்தி மிகுந்தவர். அவருடைய மனைவி லீலாவதி. கண்டவர் மயங்கும் அழகு கொண்டவள். இவர்களுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். தனது ஞான திருஷ்டியால் தனது மகன் பெரிய பாவம் செய்யப்போகிறான் என்பதை ககோளர் அறிந்தார். அதனால் அவனுக்கு மருதாந்தன் என்று பெயரிட்டார்.

காலம் ஓடியது. லீலாவதி தடம் மாறினாள். பிற ஆடவர் பழக்கம் அவளுக்கு உண்டானது. அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள். கோதாவரிக் கரையில் உள்ள உத்தமபுரத்தில் வசித்தபடி, பல ஆண்களிடம் பொன், பொருள் பெற்றுக்கொண்டு சுகவாழ்வு வாழ்ந்தாள்.

அவள் மகன் மருதாந்தன் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றான். அவன் தேச யாத்திரை செய்து வரும் போது, உத்தமபுரம் வந்தான். அவனது அறிவுத் திறமையை நேரில் கண்ட அவ்வூர் மன்னன், அவனுக்கு மந்திரி பதவி வழங்கினான்.

தவறான நண்பனின் வழிகாட்டுதலால், லீலாவதியின் வீட்டிற்கு சென்றான் மருதாந்தன். அங்கு சென்றதும் தான் அது அவனது தாய் என்பது தெரிந்தது. இருவரும் வேதனை அடைந்தனர். லீலாவதி தன் மகனிடம், “நீ தர்ம சாஸ்திரங்கள் கற்ற மகான்களிடம் கூறி பிராயச்சித்தம் அறிவாய்” எனக் கூறினாள்.

கோதாவரி கரைக்குச் சென்ற மருதாந்தன், சந்தியா வந்தனத்திற்காக அங்கு கூடிய வேத விற்பன்னர்களிடம் நடந்ததை கூறி, பிராயச்சித்தம் அருளும்படி வேண்டி நின்றான்.

அவர்கள் “கருப்பு நிறமுள்ள இரும்பினால் செய்யப்பட்ட மணிகளை கழுத்தில் கட்டி கொண்டு கிராமங்கள் தோறும் போய் பிச்சை எடு. நீ செய்த பாவங்களை அவர்களிடம் கூறு. இறைவனுக்கு பூஜை செய். உன் கழுத்தில் உள்ள மணிகள் ரத்தினமாக மாறும் வரை இப்படிச் செய். இரும்பு மணிகள் ரத்தினமாக மாறியதும், உன் பாவம் நீங்கி விட்டதாக அறிந்துகொள். அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்” என்று கூறினர்.

அதன்படியே செய்தான் மருதாந்தன். 12 ஆண்டுகள் பல ஊர்களைச் சுற்றி வந்த அவன், ஓரிடத்தில் கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அப்போது அவன் கழுத்தில் இருந்த இரும்பு மணிகள் ரத்தினமாக மாறின. தன் பாவம் விலகிய அகம்ஹரம் என்ற இடத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த ஊர் தற்போது ஆங்கரை என்று அழைக்கப்படுகிறது. மருதாந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கமே, மருதாந்த நாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமர்ந்திருந்தாலும், தெற்கு திசை வாசலே பயன்படுத்தப்படுகிறது. முகப்பை கடந்ததும் அகன்ற பிரகாரம். மகாமண்டபத்தில் நத்தியம்பெருமான் வீற்றிருக்க, இடதுபுறம் தண்டபாணியின் திருமேனி உள்ளது. அர்த்தமண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் வலது மற்றும் இடது கரங்களில் தாமரை மலர்களை தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் வீற்றிருக்கிறாள். அம்மனை தரிசித்துவிட்டு வலதுபுறம் வந்தால் மருதாந்த நாதேஸ்வரர் சன்னிதி உள்ளது.

தினசரி மூன்று கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மாத்ரு கமன என்ற மகாதோஷத்தை மருதாந்தனுக்கு போக்கிய இத்தலத்து இறைவனையும், இறைவியையும் வணங்குவதால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து தோஷங்களும் விலகும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக ஆங்கரை உள்ளது.

ஜெயவண்ணன்