ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள் + "||" + Mythological characters

புராண கதாபாத்திரங்கள்

புராண கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புத பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக...

கற்பக விருட்சம்

அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்த போது, வெளிப்பட்ட பொருட்களில் இந்த கற்பக விருட்சம் என்ற மரமும் ஒன்று. இதனை கற்பகத் தரு, கல்ப தரு என்றும் அழைப்பார்கள். பாற்கடலில் இருந்து வெளிவந்த இதனை, தேவர்களின் தலைவனான தேவேந்திரன், தன்னுடைய இருப்பிடத்தில் கொண்டு போய் வைத்தான். இந்த மரத்தின் அடியில் நின்றபடியோ, அமர்ந்தபடியோ, நாம் எந்த ஒரு பொருளை வேண்டும் என்று நினைத்தாலும் அது நமக்கு கிடைக்கும். அதே போல் கற்பக விருட்சத்தின் கீழ் நின்று நாம் நினைக்கும் அனைத்தும் நடந்தேறும். இது தேவலோகத்தில் இருப்பதாக புராணக் கதைகள் சொல்கின்றன.

காமதேனு

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். அப்போது பல பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றுதான் காமதேனு என்னும் பசு. இது தேவலோகத்தில் உள்ள பசுவாகும். கற்பக விருட்சத்தைப் போல, கேட்டதைக் கொடுக்கும் சக்தி படைத்தது இந்த காமதேனு. இதனை ‘சுரபி’ என்று அழைப்பார்கள். பசுக்கள் அனைத்துக்கும் முன்னோடியாக இந்த காம தேனுவே விளங்குகிறது. இந்த பசுவானது, சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்ட முனிவருக்கு உதவிகரமாக இருந்தது. கவுசிகன் என்ற மன்னன், தன் நாட்டினை வளப்படுத்துவதற்காக காமதேனுவை வசிஷ்டரிடம் கேட்டான். அவர் மறுத்ததால் வலுக்கட்டாயமாக காமதேனுவை இழுத்துச் செல்ல முயன்றான். ஆனால் காமதேனுவிடம் இருந்து வெளிப்பட்ட போர்வீரர்கள், கவுசிகனையும் அவனது படைகளையும் விரட்டியடித்தனர். இதையடுத்து கவுசிகன், தானும் தவம் செய்து மிகப்பெரிய ரிஷியாவதாக சபதம் செய்தார். அவரே பின்னாளில் விஸ்வாமித்திரர் என்ற மாபெரும் முனிவராக மாறினார்.

கம்சன்

மதுராவை தலைநகராக கொண்ட விருசினி ராஜ்ஜியத்தின் மன்னன்  உக்கிரசேனர். இவருக்கும் பத்மாவதிக்கும் பிறந்தவன் கம்சன் என்ற கொடுங்கோலன். இவன் தனது தந்தையை சிறையில் அடைத்து விட்டு ஆட்சியை கைப்பற்றியவன். கம்சனின் தங்கை தேவகி. இவளுக்கு பிறக்கப்போகும் 8-வது குழந்தையால் கம்சனுக்கு ஆபத்து என்று சொல்லப்பட்டது. இதனால் தங்கையையும், அவளது கணவனையும் சிறையில் அடைத்தான். அவர்களுக்குப் பிறந்த 6 குழந்தை களைக் கொன்றான். அடுத்து பிறந்த இரண்டு குழந்தைகளை கம்சனால் கொல்ல முடியவில்லை. அவர்கள் கோகுலத்தில் யசோதாவிடம் வளர்ந்தனர். குழந்தையாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல கம்சன் பல அரக்கர்களை அனுப்பினான். ஆனால் கிருஷ்ணனை எதுவும் செய்ய முடியவில்லை. முடிவில் மல்யுத்தம் ஒன்றை நடத்தி, அதில் கிருஷ்ணனை பங்கேற்கச் செய்து கொல்ல நினைத்தான் கம்சன். ஆனால் அந்த மல்யுத்தத்தின் வாயிலாக கம்சனையும், அவனது சகோதரர்களையும் கிருஷ்ணனும், பலராமனும் கொன்றனர்.

காசியபர்

காசியபர் என்ற முனிவர் பிரம்ம தேவனின் சந்ததியில் வந்தவராவார். இவர் வேத காலத்து முனிவர் என்றும், அனைத்து உயிர்களையும் படைப்பதற்கு இவர் உதவியாக இருந்தார் என்றும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இவருக்கு 21 மனைவிகள் இருந்தார்கள். அவர்களுள் அதிதி முக்கியமானவர். காசியப முனிவரால் தான், தேவர்கள், கருடர்கள், நாகர்கள், அசுரர்கள் தோன்றினர் என்பதாகவும் புராணங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.