அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன்


அற்புதங்களை நிகழ்த்தும் அனுமன்
x
தினத்தந்தி 1 Jan 2019 12:10 PM GMT (Updated: 1 Jan 2019 12:10 PM GMT)

மகாவிஷ்ணு, ராமனாக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்தவர்கள் பலர். அப்படி உதவி செய்தவர்களில் முதன்மையானவராக இருந்து, ராமனுடனேயே தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டவர் அனுமன். அவரது பிறப்பும், வாழ்வும், ராமன் மீது கொண்டிருந்த அளவற்ற பக்தியுமே அவரை வழி பாட்டுக்கு உரியவராக மாற்றின.

5-1-2019 அனுமன் ஜெயந்தி

‘ஹனுமான்’ என்ற வடமொழிப் பெயரில், ‘ஹனு’ என்பது ‘தாடை’ என்றும், ‘மன்’ என்பது ‘பெரியது’ என்றும் பொருள்படும். தாடை பெரிதான தோற்றம் கொண்டவர் என்பதால் ‘ஹனுமான்’ என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரில் தமிழ் வடிவமே ‘அனுமன்.’ வானர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் ‘மாருதி’ என்றும், அஞ்சனை-கேசரி மகன் என்பதால் ‘ஆஞ்சநேயர்’ என்றும் பெயர் பெற்றார்.

ராமாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கு, அனைத்து ஜீவராசிகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதைப் பார்த்த சிவபெருமான், தன் பங்குக்கும் ஏதாவது செய்ய நினைத்தார். அதன்படி தன்னுடைய சக்தியை எடுத்துச் சென்று ஒரு பெண்ணிடம் தருமாறு வாயுதேவனை பணித்தார். அந்த நேரத்தில் தான் அஞ்சனை தனக்கு பார் போற்றும் மைந்தன் வேண்டும் என்று இறைவனை நினைத்து தவம் செய்தாள். அவளிடம் அந்த சக்தியைச் சேர்த்தார் வாயுதேவன். அதன்படி சிவபெருமானின் சக்தியாக அவ தரித்தவரே ஆஞ்சநேயர் என்ற கூற்று ஒன்று உள்ளது.

மகாபாரதத்தில் வரும் அர்ச்சுனன்- கிருஷ்ணனின் நட்பைப் போன்றது, ராமாயணத்தில் வரும் அனுமன்- ராமரின் நட்பு. ராமரின் மூலமாக வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்குக் கொண்டு வந்தார். இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை கண்டு வந்து ராமருக்கு ஆறுதல் அளித்தார். அசோக வனத்தில் இருந்த சீதையால் சிரஞ்சீவியாக இருப்பாய் என்று ஆசீர்வதிக்கப்பட்டவர் அனுமன். ராவணனுடனான யுத்தத்தில் இந்திரஜித் செலுத்தி அம்பு பட்டு மூர்ச்சையான லட்சுமணனை காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்தார். 14 ஆண்டுகள் வனவாசம் முடிந்து ராமர் வர தாமதமானதால், தீக்குளிக்கச் சென்ற பரதனை காற்றை விட வேகமாக சென்று தடுத்து நிறுத்தி காப்பாற்றினார். ராமாயணம் முடிந்து மகாபாரத காலம் வந்தது. அப்போது நடந்த குருசேத்திர யுத்தத்தில் கிருஷ்ணர் ஓட்டிய தேரின் மேல் கொடியாக இருந்து அனைத்து பாரங்களையும் தாங்கிக்கொண்டிருந்தவர் அனுமன்.

இப்படி பல பெருமைகளை கொண்ட அனுமனை, மகாவிஷ்ணு தனது வாகனமான கருடனுக்கு அடுத்த நிலையில் வைத்திருந்தார். அதனால் இவரை மகாவிஷ்ணுவின் சிறிய திருவடியாக கூறுவர். அதே சமயம் கருடாழ்வாருக்கு கிடைக்காத ஒரு பெருமையும் அனுமனுக்கு கிடைத்தது. அதாவது பெரிய திருவடியான கருடனுக்கு இல்லாத அளவில் தனிக் கோவில்கள் அனுமனுக்கு பல அமைந்திருக்கின்றன.

அனுமன் வழிபாடும், அவருக்கு தனி கோவில்கள் எழுப்புவதும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் இருந்து தொடங்கியதாக வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அனுமனுக்கான ஆலயங்களில் வீரக் கோலம், நின்றகோலம், யோகக் கோலம் என மூன்று நிலைகளில் அனுமன் அருள்பாலிப்பார். அனுமன் ‘சிரஞ்சீவி’ என்ற பட்டத்தைக் கொண்ட எழுவரில் ஒருவர்.

அனுமனை வழிபாடு செய்தால், திருமால், சிவன், ருத்ரன், பிரம்மா, இந்திரன், கருடாழ்வார் ஆகியோரை வழிபட்ட பலன் கிடைக்கும். அவரது வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால், அவரை வழிபடுவோருக்கு நவக்கிரகங்களால் பாதிப்பு ஏற்படாது. அனுமன் வழிபாட்டினால் அறிவு கூர்மையாகும், உடல் வலிமை பெருகும். மனஉறுதி ஏற்படும். அச்சம் அகலும். நோய் நொடிகள் விலகும். தெளிவு உண்டாகும். வாக்கு வன்மை அதிகரிக்கும். உடல் மனநலம் குன்றியவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொழில் நஷ்டம் அடைந்தவர்கள், பில்லி சூனியம் ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள், ஊழ்வினையால் துன்புறுகிறவர்கள் அனுமனுக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, எலுமிச்சைப்பழ மாலை, துளசி மாலை சாத்தி வழிபட்டால் மேன்மை பெறுவார்கள். வெண்ணெய் சாத்தி வழிபட்டால், நம் துன்பங்கள் அனைத்தும் வெப்பம் பட்ட வெண்ணெய் போல கரைந்து போகும் என்பது நம்பிக்கை.

பீமனும்.. அனுமனும்..

வனவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பினர். அப்போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள். அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப் படுக்குமாறு கூறினான். அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.

முடிவில் மாருதி பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்சநேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. பீமன் பிரமித்தான். “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்தியா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.


செந்தூரம் அணிவது ஏன்?

ஒரு முறை சீதாதேவி தனது நெற்றி யில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே! தாங்கள் நெற்றில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார். அதற்கு சீதாதேவி, “எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடு கிறேன்” என்று பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என் பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழு வதும் பூசுகின்றனர். அதை பக்தர்கள் இட்டுக் கொள்ள தருகின்றனர்.

அனுமனுக்கு அணிவிக்கப்படும் மாலைகள்

ராமரை பிரிந்த ஏக்கத்தில் இறக்கும் முடிவுக்கு சென்ற சீதாதேவி, ராம நாமம் கேட்டு நின்றார். அப்போது மரத்தில் இருந்து குதித்த அனுமன், தான் ராமனின் தூதுவன் என்று கூறி ராமர் கொடுத்த கணையாழியை கொடுத்தார். அதைப் பார்த்ததும் ராமரையே பார்த்தது போல் மகிழ்ந்த சீதாதேவி, அங்கிருந்து வெற்றிலை ஒன்றை பறித்து அனுமனின் தலைமீது போட்டு ஆசி வழங்கினார். இதனால் அவருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கப்படுகிறது.

வானரங்களுக்கு வாழைப்பழம் என்றால் மிகவும் பிரியம். அதன் காரணமாக அனுமனுக்கும் வாழைப்பழ மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

ராமருக்கு (திருமால்) துளசி என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அனுமனுக்கும் துளசி மாலை சாத்துகின்றனர். தனது பக்தனுக்கு செலுத்தும் மரியாதை தனக்கு செலுத்துவதைப் போன்றது என்ற எண்ணம் கொண்டவர் ராமர்.

போர்க்களத்தில் அனுமன் தன் வீரதீரத்தால், கொழுத்த அசுரர்களை அடித்து உதைத்து வடை போல் கையில் வைத்து தட்டி துவம்சம் செய்தார். அதனால் கொழுப்பு அதிகம் உள்ள உளுந்தினால் வடை செய்து மாலையாக்கி அதை அனுமனுக்கு சாத்துகிறார்கள். அசுரர்களை போல் தீயவற்றில் இருந்து தங்களையும் காத்தருள வேண்டும் என்றும் வடைமாலை சாற்றப்படுகிறது.


16 வகை அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் பெரிய ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருந்து அனுமன் ஜெயந்தி அன்று சுசீந்திரம் வந்து இவரை வழிபடுகிறார்கள். அனுமன் ஜெயந்தி அன்று காலை ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெறும். மேலும் நல்லெண்ணெய், தயிர், நெய், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், கரும்புச் சாறு, மாதுளை சாறு, எலுமிச்சை பழச்சாறு, களபம், கஸ்தூரி, மஞ்சள்தூள், சந்தனம், குங்குமம், விபூதி, பன்னீர் என 16 வகையான ஷோடஷ அபிஷேகமும் நடத்தப்படும். பின்னர் கழுத்தளவு நிறையும் அளவுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகமும் நடைபெறும்.

-நெய்வாசல் நெடுஞ்செழியன்

Next Story