ஆன்மிகம்

புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம் + "||" + Near Pudukottai Upper zone After 146 years Sunailinga Darishanam

புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம்

புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்க தரிசனம்
புதுக்கோட்டை அருகே மேலமலை பகுதியில் 146 ஆண்டுகளுக்கு பிறகு சுனைலிங்கத்தை பொதுமக்கள் நேற்று தரிசனம் செய்தனர்.
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலையை சுற்றி மேலமலை, கோட்டைமலை, கடம்பர்மலை, உவச்சன்மலை, ஆளுருட்டிமலை, பொம்மாடிமலை, மண்மலை, பொன்மலை என பல மலைகள் உள்ளன. இந்த மலைகளில் சுனைலிங்கம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று நினைவு சின்னங்கள் உள்ளன. இந்த பகுதி தொல்லியல் துறையின் பொறுப்பில் இருந்து வருகிறது.


இங்கு மேலமலை பகுதியில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் கோவிலுக்கு கீழ் ஒரு சுனை உள்ளது. சுனையின் மேல் பகுதியில் தொண்டைமான் மன்னர் குறித்த 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இந்த சுனையில் ஒரு லிங்கம் உள்ளது. அந்த லிங்கத்தை 1872-ம் ஆண்டு மக்கள் வழிபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த கல்வெட்டும் அங்கு உள்ளது. இந்த சுனை எப்போதும் நீர்நிரம்பியே காணப்படும். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, வறட்சியின் காரணமாக விவசாயத்துக்கு பயன்படுத்தும் பொருட்டு இந்த சுனை நீரை இரைக்க ஆரம்பித்தனர். ஆனால் தொல்லியல் துறையினர், அதனை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில் தற்போது தொல்லியல் துறை அனுமதியோடு மோட்டார்களை கொண்டு சுனை நீரை இரைக்கும் பணி, கடந்த 30-ந் தேதி தொடங்கியது. இதில் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழம் கொண்ட சுனையில் இருந்து நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. கடந்த 1-ந் தேதி புத்தாண்டு அன்று பணிகள் முடிந்து, லிங்க தரிசனமும், வழிபாடும் நடைபெறும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் சுனையில் இருக்கும் லிங்கத்தை பார்க்க குவிந்தனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்தனர். ஆனால் சுனையில் இருந்த தண்ணீர் சேறும், சகதியுமாக இருந்ததால் தண்ணீரை வெளியேற்றும் பணி அன்று முடியவில்லை. இதனால் தொடர்ந்து நடைபெற்ற பணி, நேற்று முடிவடைந்தது. மேலும் நேற்று காலை தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்ட பின்னர், லிங்கம் வெளியே தெரிந்தது. இதையடுத்து சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. இதைத்தொடர்ந்து மதியம் சுனைலிங்கத்தை பொதுமக்கள் தரிசனம் செய்தனர். மேலும் சுனைலிங்கம் பற்றி தகவல் அறிந்து உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அங்கு குவிய தொடங்கினர்.

146 ஆண்டுகளுக்கு பிறகு வெளிப்பட்ட சுனைலிங்கத்தை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் தரிசனம் செய்து வருகின்றனர். தொல்லியல் துறை அனுமதி மற்றும் வழிபாடு வரையிலான செயல்களை, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘ அமைப்பை சேர்ந்த பார்த்திபன், முருகன், எடிசன் ஆகியோர் செய்துள்ளனர். 2 மாதங்களுக்கு முன்பு, சித்தன்னவாசலில் இதே போன்ற ஒரு சுனைலிங்க வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.