ஆன்மிகம்

குறைகளை தீர்க்கும் தேவன் + "||" + God will resolve the grievances

குறைகளை தீர்க்கும் தேவன்

குறைகளை தீர்க்கும் தேவன்
வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர். உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது (சங்.65:11)
கிறிஸ்துவில் அன்பானவர்களே, இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதத்தின் வருடம். அவர் நடத்தும் வழிகள் யாவும் செழிப்புள்ளதாக அமையும். ஆசீர்வாதத்திற்கு தடையாக இருக்கும் காரியங்களை நீக்கிப்போடுவார். நமக்கு நடக்கும் பல காரியங்கள் தீமைபோன்று தோன்றலாம். இறுதியில் நன்மையாகவே முடியும்.

தேவனிடத்தில் உண்மையாய் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் சம்பூரணமாய்க் கொடுக்கிறார். வானத்திலிருந்து மழையையும், பனியையும், செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தருகிறார். பூமியின் ஆகாரத்தினாலும், தண்ணீரினாலும், காற்றினாலும் ஆசீர்வதித்து, வருடம் முழுவதும் எல்லா ஆசீர்வாதத்திலும் நம்மை நடத்துவார். அவர் நன்மை செய்கிறவராயும், அனைவரின் வியாதிகளை குணமாக்கும்படியாக கிருபை செய்தார்.

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை, அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (மத்.6:26)

ஆகையால் எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுப்போம் என்று உங்கள் சரீரத்தில் கவலைப்படாதிருங்கள். காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளர்ந்து மலரையும் வாசனையும் கொடுக்கிறது என்று கவனித்துப் பாருங்கள். ஆகாயத்து பட்சிகளை போஷிக்கும் தேவன் தினமும் உன்னைப் போஷியாமல் இருப்பாரோ? அவர் பார்வைக்கு ஆகாயத்து பட்சிகளை விட நீ விசேஷித்தவன் அல்லவா?

எல்லா ஜீவன்களின் கண்களும் இறைவனையே நோக்கிக் கொண்டு இருக்கிறது. பூமியில் உள்ள மிருக ஜீவன்களும், ஜீவராசிகள் அனைத்தையும் போஷிக்கும்விதம் அற்புதம். ஏற்ற வேளையிலே உணவு கொடுக்கிறார். அவர் ஆவியை அனுப்பும்போது அவைகள் அனைத்தும் சிருஷ்டிக்கப்படும். அவர் கொடுக்க, வாங்கிப் புசிக்கும். தம்முடைய கையைத் திறக்க, நன்மையால் திருப்தியாகும்.

பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். (சங்.104:14)

கர்த்தர் பூமியை விசாரித்து அதற்கு மழைநீர் பாய்ச்சுகிறார். பூமியிலே தண்ணீரை நிறைத்து செழிப்பாக்குகிறார். மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்களை முளையச்செய்து, தானியத்தை விளைவிக்கிறார்.

பூமியிலே எல்லாருக்கும் எல்லா விதமான ஆகாரம் உண்டாகும் படி ஆசீர்வதிக்கிறார். எல்லா தானியத்திலிருந்தும் உணவு வகைகளை தருகிறார். உலகத்தில் உள்ள எல்லா ஜனங்களையும் போஷிக்கிறார்.

நாளைய தினம் போஜனத்திற்காய், உடைக்காய் ஏன் கவலைப்படுகிறாய்? அருள்நாதர் உன் தேவையை முன் கூட்டியே அறிந்திருக்கிறார். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார். உன் நாவில் இருந்து சொல் பிறவாததற்கு முன்னே உன் தேவை எது என்று அறிந்திருக்கிறார்.

தகப்பனைப் போன்று அன்பு உள்ள பிதா நம்பேரில் கரிசனையுடையவராக இருக்கிறார். தம்மை முழுவதுமாக அர்ப்பணித்தவர்களின் காரியங்களை அவரே பார்த்துக்கொள்வார். எல்லா மனிதருடைய இருதயங்களையும் ஆராய்ந்து நமது நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறவர்.

பரம தேவனின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து எல்லோரையும் பார்க்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை. சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறது.

கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். (உபா.28:8)

நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார். உனக்கு பரிபூரண நன்மை உண்டாகத் தமது நல்ல பொக்கிஷ சாலையாகிய வானத்தைத் திறப்பார். நீ குடியிருக்கும் இடத்தில் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மிருக ஜீவன்களின் பலனும் ஆசீர்வாதமாக இருக்கும்.

நீ போகின்ற இடத்தில் எல்லாம் அவர் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை. உச்சிதமான எல்லா ஆகாரத்தினாலும் உன்னை போஷித்து திருப்தியாக்குவார். நீ இந்த வருடம் முழுவதும் ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆமென்.

- சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50