லிங்கத்துக்கு பின்புறம் நந்தி


லிங்கத்துக்கு பின்புறம் நந்தி
x
தினத்தந்தி 1 Feb 2019 10:47 AM GMT (Updated: 1 Feb 2019 10:47 AM GMT)

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வலியசாலா என்னும் ஊர். இங்கு மகாதேவர் கோவில் அமைந்துள்ளது.

 இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை, சாஸ்தா, விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன. பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் கருவறை சிவலிங்கத்திற்கு முன்பாகத் தான் நந்தி சிலை இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு பின்புறம் நந்தி சிலை அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக இருக்கிறது.

உருவமில்லாத அன்னை

குஜராத்- ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் அரசூரி அம்பாஜி கோவில் அமைந்துள்ளது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அன்னையின் உடல்கள் சிதறி விழுந்த இடங்களில் சக்தி பீடங்கள் உருவாகின. அதில் இதயம் விழுந்த இடம் இது என்று சொல்லப்படுகிறது. பனஸ்கந்தா மாவட்டத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் அம்மனுக்கு விக்கிரகம் கிடையாது. தாமிர தகட்டில் ‘ஸ்ரீ யந்திரம்’ போல வரையப்பட்டுள்ள ‘ஸ்ரீவியாச யந்திரம்’ இங்கு வழிபாட்டிற்குரியதாக இருக்கிறது. கருவறை சுவரில் 51 எழுத்துக்களைக் கொண்டு பொறிக்கப்பட்டுள்ள இந்த யந்திரமே பூஜிக்கப்படுகிறது. பவுர்ணமி தோறும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

வித்தியாசமான முருகர்

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருமுருகன்பூண்டி. இங்கு திருமுருகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. கருவறையில் இருக்கும் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாவார். கருவறைக்குள்
முருகப்பெருமான் வழிபட்ட சிவலிங்கம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஈசனை வழிபாடு செய்த தலம் என்பதால், கருவறையில் உள்ள முருகனுக்கு வேலும், மயிலும் இல்லை. இந்த ஆலயத்தில் இருக்கும் ஆறுமுகப்பெருமானுக்கு முன் பக்கத்தில் ஒரு திருமுகமும், பின்பகுதியில் ஐந்து திருமுகங்களும் அமைந்திருக்கும் அபூர்வ வடிவத்தைக் காணலாம்.

கடன் தீர்க்கும் பைரவர்


திருப்பூர் மாவட்டம் நல்லூர் என்ற இடத்தில் விஸ்வேஸ்வரர் கோவில் இருக்கிறது. இங்குள்ள பைரவர் விசேஷமானவர். இந்த பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், அதில் இருந்து விடுபடுவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. பைரவரின் இடது மற்றும் வலது காதுகளில் புணுகு சாத்தி வழிபாடு செய்தால், கடன் பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈசனை வணங்கும் ஆமை

குஜராத் மாநிலம் கிர்நார் மலையடிவாரத்தில் பவநாத் மகாதேவர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கருவறையில் பவநாத் என்ற பெயரில் இறைவன் சின்னஞ்சிறு லிங்கத் திருமேனியுடன் நாகம் குடைப் பிடிக்க காட்சியளிக்கிறார். இவருக்கு எதிரில் ஆமை ஒன்று, ஈசனை வணங்கிய நிலையில் காணப்படுகிறது.

- தொகுப்பு:- நெ.ராமன்

Next Story