ஆன்மிகம்

புராண கதாபாத்திரங்கள் + "||" + Mythological characters

புராண கதாபாத்திரங்கள்

புராண கதாபாத்திரங்கள்
மார்க்கண்டேயன்: மிருகண்ட மகரிஷி, வெகு காலமாக புத்திர பாக்கியம் இன்றி தவித்து வந்தார். அவருக்கு புத்திர பாக்கியம் அளித்த சிவன் “உனக்கு அறிவில் சிறந்த இறை பக்தி கொண்ட, 16 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழும் குழந்தை வேண்டுமா? அல்லது அறிவிலியாக இறைபக்தி அற்று பல ஆண்டு உயிர்வாழும் குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார்.
அதற்கு மகரிஷி, ‘அறிவில் சிறந்த குழந்தையை வரமாக பெற்றுக் கொண்டார். அந்தக் குழந்தைக்கு மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு வளர்த்தார். அவனுக்கு 16 வயது நெருங்கியதும் மகரிஷிக்கும் அவரது மனைவிக்கும் கலக்கம் உண்டானது. அப்போது தன்னுடைய இறப்பை அறிந்த மார்க்கண்டேயன், “பக்தர்களின் வேண்டுதலுக்கு இறைவன் செவி சாய்ப்பார். நான் சிவனை வழிபடப் போகிறேன்” என்று கூறிவிட்டு ஒவ்வொரு சிவாலயமாகச் சென்று வழிபட்டான்.

அவனது ஆயுள் முடியும் கடைசி நாளில், உயிரைப் பறிக்க எமன் வந்தான். மார்க்கண்டேயனோ, சிவலிங்கத்தை தழுவிக்கொண்டான். எமதர்மன் வீசிய பாசக் கயிறு, மார்க்கண்டேயனோடு, சிவலிங்கத்தையும் பற்றி இழுத்தது. அப்போது லிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட ஈசன், எமனை சம்ஹாரம் செய்ததோடு, மார்க்கண்டேயனை என்றும் 16 வயதுடன் இருக்க ஆசி வழங்கினார்.

மாதளி
இந்திரனின் தேரோட்டியாக இருப்பவர் மாதளி. அவர் இந்திரனின் தேரோட்டியாக ஆனது எப்படி தெரியுமா? தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்தப் போரில் இந்திரனின் மன ஓட்டத்தை அறிந்து, போரின் போக்கை கருத்தில் கொண்டு தேரைச் செலுத்தும், சமயோசித புத்தி கொண்டவர் இல்லாமல் இந்திரன் தவித்துப் போனான். தனக்கு தகுதியான தேரோட்டி கிடைப்பதற்காக அவன் வெகு காலம் காத்திருந்தான்.

இந்த நிலையில் சமிக்யா என்ற முனிவரின் மனைவி, ஒரு ஜோதிடரின் பேச்சைக் கேட்டு, தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் ஒன்றை வீதியில் விட்டு விட்டாள். அந்தக் குழந்தை, தேவலோக தலைவனான இந்திரனைச் சென்றடைந்தது. அந்தக் குழந்தையின் மதிநுட்பத்தை அறிந்த இந்திரன், குழந்தைக்கு ‘மாதளி’ என்று பெயரிட்டு வளர்த்தான். அதோடு பல கலைகளையும் கற்றுக் கொடுத்து, தன்னுடைய தேரோட்டியாக வைத்துக் கொண்டான்.

மந்தரை
கேகய நாட்டு மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை. மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். கைகேயியை தசரத சக்கரவர்த்தி மனம் முடித்து அயோத்தி அழைத்து வரும் போது, கைகேயிக்கு துணையாக மந்தரையும் அயோத்தி வந்து விட்டாள். மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு. அதனால் அவளுக்கு கவுசல்யாவின் மகனான ராமனின் மீது வெறுப்பு உண்டானது. மந்தரை கூன் விழுந்தவள் என்பதால் அவளை ‘கூனி’ என்றும் அழைப்பார்கள். ஒரு முறை சிறுவனாக இருந்த ராமன், மந்தரையின் கூனை நேராக்க மண் உருண்டைகளை அவள் மீது வீசினான். அதில் மந்தரை நிலைதடுமாறி கீழே விழுந்தாள். அதைப் பார்த்து அங்கிருந்த பணிப்பெண்கள் பலரும் சிரித்துவிட்டனர். இதனால் ராமனின் மீதான மந்தரையின் வெறுப்பு அதிகமாகிவிட்டது. மந்தரை செய்த சூழ்ச்சியின் காரணமாகவே, ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டிய நிலை உருவானது.

மாரீசன்
ராவணனுக்கு மாமன் முறை கொண்டவன், மாரீசன். இவன் தாடகை என்ற அரக்கியின் மகன் ஆவான். ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரன். மாரீசனும் அவனது சகோதரன் சுப்பாவும் வனத்தில் இருந்த முனிவர்களிடம் இருந்து போர்க் கலையையும், மாய மந்திரங்களையும் கற்றறிந்தனர். ஒரு முறை ராமன் வைத்திருந்த வில்லுடைய நாணின் ஓசையைக் கேட்டு மிரண்ட மாரீசன் பல அடி தூரம் சென்று விழுந்தான். தன்னிடம் இருந்த மாரீசனை, சீதையை கடத்துவதற்காக ராவணன் பயன் படுத்தினான். அதன்படி பொன் மான் உருவம் கொண்டு, சீதையின் முன் சென்றான். அந்த மாய மானின் அழகில் மயங்கிய சீதை, அதைப் பிடித்து தரும்படி ராமனிடம் கேட்டாள். அவளது விருப்பத்தை நிறைவேற்ற சீதைக்கு காவலாக லட்சுமணனை நிறுத்தி விட்டு சென்றார் ராமன். தப்பி ஓடிய மானை நோக்கி ராமன் அம்பு வீசினார். அதில் மான் அடிப்பட்டு விழுந்தது. அது இறக்கும் தருவாயில் ‘லட்சுமணா..’ என்றது. அப்போது தான் ராமனுக்கு அது மாயை என்பது புரிந்தது. அதற்குள் சீதை அச்சம் அடைந்து லட்சுமணனை அனுப்பி வைத்தாள். அந்த நேரத்தில் தான் ராவணன், சீதையை இலங்கைக்கு தூக்கிச் சென்றான். சீதையை கடத்திச் செல்வதற்கு உதவியாக இருந்தவன் மாரீசன்.