வானவர்களை நம்புவது


வானவர்களை நம்புவது
x

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறைநம்பிக்கைகளில் ஒன்றான வானவர்களை நம்புவது குறித்த தகவல்களை காண்போம்.

வானவர்களை நம்புவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று. இதுவும் இறை நம்பிக்கைகளில் ஒரு பகுதி. அவர்களை நம்புபவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் எனும் பெயரை பெறுகிறார்கள். அவர்களை நம்பாமல் இறைநம்பிக்கை பரிபூரணமாகாது.

‘(இறைத்)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளர்களும் நம்புகின்றனர். இவர்கள் யாவரும் இறைவனையும், அவனது வானவர்களையும் நம்புகிறார்கள்’ என்று திருக்குர்ஆன் (2:285) குறிப்பிடுகிறது.

வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டதாக பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது.

‘வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)

மனித இனம் படைக்கப்படுவதற்கு முன்பே வானவர்கள் படைக்கப்பட்டிருப்பதாக சில விவரங்களை இறைவன் திருக்குர்ஆன் வாயிலாக உலக மக்களுக்கு சேதி சொல்கிறான்.

“(நபியே!) இன்னும் உமது இறைவன், வானவர்களை நோக்கி ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப்போகிறேன்’ என்று கூறியபோது, அவர்கள் ‘(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, ரத்தம் சிந்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக, உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.

அதற்கு இறைவன், ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்’ என்று கூறினான்.’ (திருக்குர்ஆன் 2:30)

இவர்கள் ஆணுமல்ல, பெண்ணும் அல்ல. அவர்களுக்கு ஊண், குடிப்பு, உறக்கம், நோய் எதுவும் கிடையாது. காலமெல்லாம் இறைவனுக்கு மாறுசெய்யாமலும், பாவங்கள் புரியாமலும் இருப்பார்கள். இறைவன் இட்ட பணிகளை ஆற்றும் இறை அலுவலர்கள் இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி வைக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள்.

‘வானவர்கள் தமக்கு இறைவன் ஏவியதில் மாறுசெய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.’ (திருக்குர்ஆன் 66:6)

வானவர்கள் குறித்து திருக்குர்ஆன் ஏராளமான இடங்களில் பலதரப்பட்ட தகவல்களைத் திரட்டித் தருகிறது. அவர்களின் பெயர் ஒருமையில் 13 இடங்களிலும், இருமையில் 2 இடங்களிலும், பன்மையில் 73 இடங்களிலும் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது.

அவர்கள் இறைவனின் மிக பிரமாண்டமான படைப்பு. அதிசயித்துப் போகும் அளவுக்கு அவர்களின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியைக் காண்போம்.

‘வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.’ (திருக்குர்ஆன் 35:1)

‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக்கைகள் இருக்க அவரின் நிஜத்தோற்றத்தில் அவரைப் பார்த்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) புகாரி)

‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), புகாரி)

ஜாபிர் (ரலி) அறிவித்தார்: ‘என் தந்தை அப்துல்லாஹ், உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த போது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரின் முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபித்தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபியவர்கள் தடுக்கவில்லை. மேலும், நபியவர்கள் ‘அவருக்காக நீ அழவேண்டாம். பிரேதம் (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும் வரை வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.’ (புகாரி)

வானவர்களும், மனித சமுதாயத்தைப் போன்று பலதரப்பட்ட அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்டு. அவர்களின் எண்ணிக்கையை உறுதியாக சொல்லமுடியாது. அதை அறிந்தவன் இறைவன் மட்டுமே.

‘இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள்.’ (திருக்குர்ஆன் 74:31)

‘பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இவ்விடம் வரமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: புகாரி)

எனினும், அவர்களில் மிக முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.

1) ஜிப்ரீல் (அலை): இவரின் பணி நபிமார்களுக்கு இறைச்செய்திகளை கொண்டு வருவது.

2) மீகாயீல் (அலை): இறைவனின் அனுமதியுடன் மழையைக்கொண்டு வருவது.

3) இஸ்ராபீல் (அலை): இவர்தான் உலகம் அழியும்போது ‘சூர்’ எனும் ஊதுகுழலை ஊதுபவர்.

4) மாலிக் (அலை): நரகின் பாதுகாவலர்.

5) ரிஸ்வான் (அலை): சொர்க்கத்தின் பாதுகாவலர்.

6) முன்கர், 7) நகீர்: இருவரும் மண்ணறையில் கேள்வி கேட்பவர்கள்.

8) ஹாரூத் (அலை)

9) மாரூத் (அலை)

10) மலக்குல் மவ்த்: உயிர்களை கைப்பற்றும் வானவர்.

11) ரகீப், 12) அதீத் -இவர்கள் மனிதனின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து அவனின் செயல்களை பதிவு செய்யக்கூடியவர்கள். இவ்விரண்டும் பெயர்ச்சொல் அல்ல, பண்புச்சொற்கள்.

இவ்வாறே பெயர்கள் குறிப்பிடாமல் பலவிதமான பணிகள் செய்யக்கூடிய வானவர்களும் உண்டு. மனிதர்களோடு வானவர்களின் தொடர்பு நிலையானது. உலக இயக்கத்தோடு வானவர்களின் பங்கு மிக முக்கியமானது. மனித வாழ்வில் வானவர்களின் பங்கில் சில...

முதல் மனிதர் படைக்கப்பட்டபோது, அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் சிரசை தாழ்த்தியவர்கள்-

தாயின் வயிற்றில் குழந்தை கருவாகி உருவாகி வளர்ச்சி அடையும்போது, 42 -ம் நாளில் அதற்கு கண், காது, தோல், சதை, எலும்பு ஆகியவற்றை அமைத்துக் கொடுத்து, தமது கண்காணிப்பில் பாதுகாப்பவர்கள்-

இறைவா! அது ஆணா? பெண்ணா? என்று விவரம் கேட்டு, பாலினத்தை தேர்வு செய்கிறார்கள்-

குழந்தையாகப் பிறந்து, வாழ்ந்து முடிக்கும் வரை இறைவன் கட்டளைப்படி அவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறார்கள்-

அவனின் தவணை முடிந்துவிட்டால், அவனது பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, இறைவனின் அனுமதியுடன் உயிரையும் கைப்பற்றுகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற பணிகளை இறைவனின் கட்டளைப்படி வானவர்கள் செய்துவருகிறார்கள்.

இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். இறைவனின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்’. (திருக்குர்ஆன் 13:11)

இவ்வாறே வானவர்களின் பங்களிப்பு மகத்தானது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மரணமான போது அவரது உடலை குளிப்பாட்டியவர்கள் வானவர்கள். உலகில் காற்றை வீசச்செய்யும் பணியும், இடி இடிக்கச் செய்யும் பணியும் அவர்களுடையதே.

சிலர் வானங்களிலும், சிலர் பூமியிலும், சிலர் மலைகளிலும், சிலர் கடல்களிலும், சிலர் கரையிலும், சிலர் வணக்கத்தலங்களிலும் இருப்பார்கள். எனினும், அவர்களின் பிரதான குடியிருப்புகள் வானங்களே.

அவர்களின் பூலோக வருகை ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

ரமலானில் லைலத்துல்கத்ர் இரவு அன்று வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் தலைமையில் வானவர்களின் பெரும் பட்டாளமே பூமிக்கு வந்து, அதிகாலை வரைக்கும் சாந்தியை பரப்புகிறார்கள்.

‘வானவர்களும், பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீல்) அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (அந்த இரவின்) சாந்தி அதிகாலை வரை நிலவியிருக்கும்’. (திருக்குர்ஆன் 97:4,5)

வானவர்களின் பயண வேகம் ஒளியை விட அதிவிரைவானது. நபியவர்களிடம் யாராவது ஒருவர் கேள்வி கேட்பாரானால், அவர் கேட்டு நிறைவு செய்வதற்குள், அதற்குரிய பதிலை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் உடனே கொண்டு வந்து விடுவார்கள்.

நியாயவான்களுக்கு அவர்கள் உதவியும், அநியாயக்காரர்களுக்கு உதையும் கொடுப்பார்கள்.

ஒரு சில உருவங்களை தவிர்த்து பலவிதமான உருவங்களாய் மாறும் ஆற்றல் பெற்றவர்கள். அழகான மனித தோற்றத்தில் அதிகமாக வருவார்கள். அவர்கள் இறைவனின் தூதுவர்கள், தேவதைகள் அல்ல. இறைபடைப்புகளில் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள் என்பதையும், இறைவனின் கட்டளைப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே.

Next Story