ஆன்மிகம்

மனிதர்களிடம் இருக்கவேண்டிய நற்பண்பு-‘சகிப்புத்தன்மை’ + "||" + Intolerant

மனிதர்களிடம் இருக்கவேண்டிய நற்பண்பு-‘சகிப்புத்தன்மை’

மனிதர்களிடம் இருக்கவேண்டிய நற்பண்பு-‘சகிப்புத்தன்மை’
சகிப்புத்தன்மை மனிதரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளில் முதன்மையானதாகும். சகிப்புத்தன்மையால் சூழப்பட்டதுதான் இந்த தேசம்.
சகிப்புத்தன்மை தான் ஒருவனை முழுமனிதனாக வாழச்செய்கின்றது. ஒருவன் தனக்கு தீங்கு இழைக்கும் சூழலிலும், அவனை மன்னித்து அவனிடம் அன்பு செலுத்தினான் என்று சொன்னால் அவனிடம் சகிப்புத்தன்மை மிகுந்துள்ளது என்று அர்த்தம். அதனால் அவன் மனிதர்களில் சிறந்தவராக இருக்கிறான்.

இஸ்லாம் சகிப்புத்தன்மை குறித்து பல இடங்களில் பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால் சகிப்புத்தன்மை பற்றி அதிகம் பேசுகின்ற மார்க்கமாகவும் இஸ்லாம் இருக்கின்றது.

இஸ்லாத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஐந்து வழிமுறைகளில் சகிப்புத்தன்மை முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. நபியவர்களை பின்பற்றுபவர்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது அவர்களின் கடமை என்று இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

சகிப்புத்தன்மை உடையவரை இறைவன் நேசிப்பதாக நபியவர்கள் சுட்டுகிறார்கள். ஒரு சமயம் அஷஜ் கைஸ் அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

‘தோழரே, உம்மிடம் இரண்டு குணங்கள் இருக்கிறது; அவ்விரு குணங்களையும் அல்லாஹ் நேசிக்கின்றான். 1. சகிப்புத்தன்மை 2. நிதானம்’ என்றார்கள்.

சகிப்புத்தன்மை, நிதானம் இல்லாதவர்களிடம் பகைமை, பொறாமை, விரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்றவை மிகுந்திருக்கும். இது இஸ்லாம் வெறுக்கும் தீய பண்பாக இருக்கின்றது. ஆதலால் சகிப்புத்தன்மையை கைவிட்டால் இஸ்லாம் குறிப்பிடும் அந்த தீய பண்பில் சிக்கிக்கொள்ள நேரிடும்.

இஸ்லாத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல வந்த பல நபிமார்களும் சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து மக்களுக்கு முன் உதாரணமாக விளங்கிருக்கிறார்கள்.

உதாரணமாக, நூஹ் நபி அவர்களை பற்றி கூறலாம். நூஹ் நபியவர்கள் 950 வருடங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அவர்கள் அழைப்பு தரும் சமயம் அம்மக்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக் கொண்டார்கள். மேலும் நூஹ் நபியைப் பார்த்து ‘பைத்தியக்காரர்’ என்று எகத்தாளமிட்டனர்.

இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நூஹ் நபியவர்கள் சகிப்புத்தன்மையை கொண்டு கடந்து சென்றார்கள். நம்மை ஒருவர் எவ்வளவு கேவலப்படுத்த முனைந்தாலும் அவற்றை இறைவனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிருக்கிறார்கள் நூஹ் நபியவர்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தளவு சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டார்கள் என்பதற்கு பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.

நபியவர்களுக்கு தாயிப் நகர மக்கள் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எந்தளவு கொடுமைகள் என்றால் வானவர்களே வருத்தம்கொண்டு அந்த மக்களுக்கு எதிராக இறைவேதனையை இறக்கித்தர நபியவர்களை பிரார்த்திக்கச் சொல்லும் அளவிற்கு இருந்தது.

இருந்தும் நபியவர்கள் அவ்வாறு வேண்டவில்லை. இறைவனிடம் என்ன வேண்டினார்கள் என்றால், “இறைவா, என் கூட்டத்தாரை மன்னித்தருள்வாயாக. ஏனெனில் அவர்கள் (நல்வழியை) அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று வேண்டினார்கள்.

இதுதான் நபிகளாரின் பெருந்தன்மை; சகிப்புத்தன்மை. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக்கூட மறந்து அந்த மக்களுக்காக மன்னிப்பை வேண்டினார்கள் என்று சரித்திரச் சான்றுகள் சொல்கின்றன. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.

சகிப்புத்தன்மை பேணியும், பிறரை மன்னித்தும் வாழ்ந்ததால்தான் அவர் மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்து வருகிறார்.

ஒருமுறை மதினாவிற்கு ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் கஅபாவில் தொழுதுவிட்டு செல்ல நபிகள் முடிவு செய்தார்கள். அதற்காக சாவிக்காப்பாளர் உஸ்மான் பின் தல்ஹாவிடம் கதவை திறந்துவிடக் கோரினார்கள். அதற்கு உஸ்மான் மறுத்துவிட்டார்.

அப்போது நபியவர்கள், ‘உஸ்மான் ஒருநாள் வரும்; அப்போது நீர் இருக்கிற இடத்தில் நான் இருப்பேன்; நான் இருக்கிற இடத்தில் நீர் இருப்பீர்’ என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதுபோலவே அந்த நாளும் வந்தது. மக்கா வெற்றிக்கொள்ளப்பட்டது. நபியவர்கள் கஅபாவிற்கு வருகிறார்கள். சாவியை வாங்கி கபாவிற்கு சென்று தொழுதார்கள். பிறகு வெளியே வந்த நபியவர்கள் சாவியை உஸ்மான் பின் தல்ஹாவிடமே கொடுக்கின்றார்கள். இதுதான் நபிகள் நாயகம்.

அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ‘நான் சவாலில் வென்றுவிட்டேன்’ எனக்கூறி அவரை வெளியே துரத்தியிருப்போம். ஆனால் நபியவர்கள் அப்படி செய்யாமல் தனது சகிப்புத்தன்மையை அங்கு வெளிப்படுத்தி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடந்துகாட்டியுள்ளார்கள்.

இன்று சகிப்புத்தன்மை குறைந்து, மறைந்து வருகிற காலமாக இருக்கின்றது. மதங்களுக்கு இடையே மட்டுமல்ல. ஒரே மதத்தை பின்பற்றுபவர்களிடம், ஒரே ஊரை சேர்ந்தவர்களிடம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம்கூட சகிப்பின்மை குடிகொண்டுள்ளது.

“ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கும் மத்தியில் மானபங்கப்படுத்தினால் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம். ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே; செய்த அந்த செயலே அவனை அவமானப்படுத்த போதுமானதாகும்” என்று நபியவர்கள் உலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றார்கள்.

சகிப்புத்தன்மை பேணவும், அமைதி நிலவவும் அதை பின்பற்றுவதே சரியான வழியாகும்.

வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். விமர்சனங்களை நாகரிகமாக அணுக வேண்டும். மாற்றுக்கருத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இவைகளை சரியாக கடைப்பிடித்தால் சகிப்புத்தன்மையை யாராலும் சிதைக்க முடியாது.

சகிப்புத்தன்மை தான் இந்தியா உட்பட உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும். சகிப்புத்தன்மையோடு எல்லோரையும் அனுசரித்து வாழ்பவரே உண்மையான மனிதராக இருக்கிறார். இஸ்லாம் அதைத்தான் உரக்கச் சொல்கிறது.

-வி.களத்தூர் எம்.பாரூக்