ஆன்மிகம்

மனமாற்றத்திற்கு அழைக்கும் ‘தவக்காலம்’ + "||" + Lent

மனமாற்றத்திற்கு அழைக்கும் ‘தவக்காலம்’

மனமாற்றத்திற்கு அழைக்கும் ‘தவக்காலம்’
கடவுளோடும் சக மனிதர்களோடும் நல்லுறவை ஏற்படுத்த கிறிஸ்தவர்கள் பயிற்சி செய்யும் காலமாக தவக்காலம் அமைந்துள்ளது.
மனம் மற்றும் உடலின் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, பிறருக்கு உதவி செய்வதில் மகிழ்ச்சி காணுகின்ற பிறர் அன்பின் காலமாக இது கடைப் பிடிக்கப்படுகிறது. உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் கடந்த புதன்கிழமை தவக்காலத்தை தொடங்கி உள்ளனர்.

ஒருமுறை திருமுழுக்கு யோவானின் சீடர்கள் இயேசுவிடம் சென்று, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?, மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்றார்.

ஆகவே, இயேசு கிறிஸ்துவின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, நோன்புக் காலமாகிய தவக்காலத்தை தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் உருவாக்கினர். கி.பி. 2-ம் நூற்றாண்டில், இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவுக்குத் தயாரிப்பாக 2 நாட்கள் நோன்பிருக்கும் வழக்கம் கிறிஸ்தவர்கள் மத்தியில் தோன்றியது. புனித வெள்ளி, புனித சனி ஆகிய நாட்களில் உணவும், தண்ணீரும் இன்றி 40 மணி நேரம் அவர்கள் தொடர்ந்து நோன்பு கடைப்பிடித்தனர்.

3-ம் நூற்றாண்டில், புனித வாரம் முழுவதும் ஒருவேளை உணவுடன் நோன்பிருக்கும் நடைமுறை உருவானது. 4-ம் நூற்றாண்டில், உயிர்ப்பு பெருவிழாவுக்கு முன்பு 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்க வேண்டுமென திருச்சபை அறிவித்தது. இயேசு கிறிஸ்து தமது பணிவாழ்வைத் தொடங்கும் முன்பு 40 நாட்கள் நோன்பிருந்ததைச் சுட்டிக்காட்டி இந்த வழக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

பழைய ஏற்பாட்டில் மோசே, எலியா ஆகியோரும் 40 நாட்கள் நோன்பிருந்ததாக விவிலியத்தில் நாம் வாசிக்கிறோம்.

சாம்பல் புதன் முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனர். இக்காலத்தில், உடல் மற்றும் உள்ளத்தின் விருப்பங்களையும், உணவுகளையும் கட்டுப்படுத்தி, பிறருக்கு உதவி செய்யும் செயல்களில் கிறிஸ்தவர்கள் ஈடுபடுகின்றனர். சாம்பல் புதன் மற்றும் புனித வெள்ளி ஆகிய நாட்களில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்கின்றனர்.

தவக்காலத்தில் பொதுவாக அசைவ உணவுகளைத் தவிர்க்கும் வழக்கம் அனைத்து கிறிஸ்தவர்களிடமும் உள்ளது. ஏழைகளுக்கு உதவுதல், தர்மம் செய்தல் போன்ற செயல்கள் வழியாக தேவையில் இருக்கும் சக மனிதர்களுடனான உறவும், வழிபாடுகளில் அதிகமாக பங்கேற்றல், இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானித்து செபித்தல் ஆகியவற்றின் மூலம் கடவுளுடனான ஆன்மிக உறவும் ஆழப்படுத்தப்பட தவக்காலம் உதவுகிறது.

“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது” (மத்தேயு 6:1) என்று இயேசு குறிப்பிடுகிறார். ஆகவே, கிறிஸ்தவர்கள் பொதுவாக தங்கள் அறச் செயல்களை மறைவாகவே செய்ய விரும்புகின்றனர்.

“நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். மக்கள் புகழ வேண்டுமென்று, நீங்கள் உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். அப்பொழுதுதான் நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:2-4) என்ற அழகிய வழிமுறையை இயேசு கற்பிக்கிறார்.

“நீங்கள் நோன்பு இருக்கும்போது, மக்கள் பார்க்கவேண்டுமென்று வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது. மாறாக. மறைவாய் இருக்கிற உங்கள் விண்ணகத் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்” (மத்தேயு 6:16-18) என்பதே இயேசுவின் போதனை.

“மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும், திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர். ஆனால், விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள், அங்கே பூச்சியோ, துருவோ அழிப்பதில்லை, திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்” (மத்தேயு 6:19-21) என்று இயேசு கூறுகிறார்.

ஆகவே, உடல், உள்ள ஆசைகளை அடக்குவதும், தேவையில் இருப்போருக்கு உதவுவதும் கிறிஸ்தவர்களுக்கு ஓர் ஆன்மிகப் பயிற்சியாகவே இருக்கிறது. மண்ணுலக செல்வங்கள் மீதானப் பற்றை விடுத்து, விண்ணுலக செல்வங்கள் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளத் தூண்டுவதாக தவக்காலம் அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை தியானிப்பது, நமது மீட்பின் மேன்மையை உணர வழிவகுக்கிறது.

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில், மக்கள் பலரும் தங்கள் பாவங்களுக்காக சாக்கு உடை அணிந்து நோன்பிருந்து மன்றாடியதால் கடவுளின் மன்னிப்பையும் இரக்கத்தையும் பெற்றதாகக் காண்கிறோம். தொடக்கத் திருச்சபையிலும், பெரிய பாவங்களைச் செய்தவர்கள் சாக்கு உடையுடன் சாம்பல் பூசி நோன்பிருக்கும் வழக்கம் இருந்தது.

கி.பி.10-ம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த இவ்வழக்கத்தின் எச்சமாகவே, சாம்பல் பூசி கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு கடைப்பிடிக்கும் வழக்கம் 11-ம் நூற்றாண்டில் உருவானது. மனமாற்றத்தின் அடையாளமாக விவிலியப் பின்னணியில் தோன்றிய அந்த வழக்கம் தவக்காலத்தின் முதல் நாளான சாம்பல் புதனன்று இன்றளவும் தொடர்கிறது.

கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரையும் திருப்பணியாளர், “மனந்திரும்பி நற்செய்தியை நம்புங்கள்” என்று கூறுகின்றார். உலகு சார்ந்த நெருக்கடிகளால் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு மாறாக வாழ்ந்த தருணங்களுக்காக மனம் வருந்தி, கடவுளை மையப்படுத்திய புதுவாழ்வைத் தொடங்க விடுக்கப்படும் அழைப்பாக இது உள்ளது. ஆண்டவர் இயேசு காட்டிய வழியில் நோன்பும் அறச்செயல்களும் செய்தால், விண்ணுலகில் செல்வம் சேர்க்க உதவும் காலமாக இந்த தவக்காலம் அமையும்.

-டே. ஆக்னல் ஜோஸ், சென்னை.