ஆன்மிகம்

பிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம் + "||" + Tanwantiri Peetam

பிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம்

பிணி தீர்க்கும் தன்வந்திரி பீடம்
மனித வாழ்வின் பற்றுக்கோலாக ஆன்மிகம் விளங்குகிறது. ஏதோ ஒரு தருணத்தில் நம்பிக்கை இழக்கும் மனிதனின் சோர்வை நீக்கி வாழ்வின் போக்கை மாற்றியமைக்கும் அற்புதமான வரமாக, ஆன்மிக வழிபாடுகளும், கடவுள்களின் உருவ ஆராதனைகளும் உள்ளன.
வாழ்வில் கோடிகோடியாய் பொருள் செல்வம் இருந்தாலும், உடல் ஆரோக்கியம் எனும் பெரும் செல்வம் இல்லையெனில் வாழ்வு இன்பமாக அமையாது. நம் உடல்நலன் காத்து நமக்கு ஆரோக்கிய வாழ்வு அருளும் தெய்வமாக தன்வந்திரி பகவான் திகழ்கிறார்.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மகாவிஷ்ணுவின் அவதாரமாக கடலில் இருந்து திருக்கரங்களில் அமிர்த கலசத்துடன் தோன்றியவரே ஸ்ரீதன்வந்திரி பகவான். இவர் மகாவிஷ்ணுவின் பன்னிரண்டாவது அவதாரமாக போற்றப்படுகிறார். உலகின் முதல் மருத்துவராகவும், எண்ணற்ற மருத்துவ முறைகளுக்கு மூல ஆதாரமாகவும், தன்னை நாடும் பக்தர்களுக்கு பிணி தீர்ப்பவராகவும் இவர் அருள்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தன்வந்திரி பகவானுக்கு, வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் தனித்த சிறப்பு மிக்க ஆலயம், ‘தன்வந்திரி பீடம்’ என்ற பெயரில் உள்ளது. 75 சன்னிதிகள், நலம் தரும் மூலிகை ஹோமங்கள், கவலைகள் தீர்த்திடும் கடவுள் விக்கிரகங்கள், தூய்மையான பரந்த இடம் என பக்தர்களின் மனதை மகிழவைத்து வரவேற்கிறது இந்த பீடம். சைவம், வைணவம், சாக்தம், சவுரம், கவுமாரம், காணாபத்யம் என ஷண்மத கடவுள்களை போற்றும் விதத்தில், இந்த ஆலயத்தில் ஆறு மத கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

உலக மக்களின் நலனுக்காக ஸ்ரீ முரளிதர சுவாமிகளால் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த தன்வந்திரி பீடம். இதன் முன் பக்கமாக நுழைந்தவுடன், தேசத்தைக் காக்கும் பெண் சக்தியான பாரதமாதா நிற்கிறாள். அவளை வணங்கி பீடத்தின் பிரதான வாசல் வழியாக உள்ளே சென்றால், வலது பக்கம் சயன கோலத்தில் வாஸ்து பகவான் காட்சி தருகிறார். பொதுவாக வாஸ்து பகவானின் உருவச்சிலையை ஆலயங்களில் காண்பதென்பது அரிதானது. அதிலும் புராணத்தில் எப்படி குறிப்பிடப்பட்டுள்ளதோ, அதே சயனக்கோலத்தில் அற்புதமான அழகுடன் இங்கு இருப்பது சிறப்பு.

இங்குள்ள தெய்வங்களின் சிலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அற்புதமாக சிறந்த முறையில் அமைந்துள்ளன. பீடத்தின் முகப்பு பகுதியில் ஒரே கல்லில் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரியும் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கின்றனர். விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அமுத கலசத்துடன், திருமண் தரித்து சிரித்த முகத்துடன் அருள் புரிகிறார். இங்குள்ள காலச் சக்கரத்தில், நவக்கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளை அகற்ற, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்ற விருட்சங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மரண பயம் நீக்கி, மாங்கல்ய பாக்கியம் அருளும் மகிஷாசுரமர்த்தினி, பில்லி, சூனியம் போன்ற தீய சக்திகளிடம் இருந்து காத்திடும் பிரத்யங்கரா தேவி, நல்வாழ்வு தரும் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கஷ்டங்கள் நீக்கும் அஷ்ட நாக கருடன், இழந்த பொருளை மீட்டுத் தரும் கார்த்தவீர்யார்ச்சுனன், குழந்தை பாக்கியம் தரும் நவநீத கிருஷ்ணன், பதவி தரும் பட்டாபிஷேக ராமர், சுகம் தரும் சுதர்சன ஆழ்வார், சத்தியம் காக்கும் சத்தியநாராயணா, வாக்கு தரும் ஸ்ரீ வாணி சரஸ்வதி, குலம் தழைக்க வைக்கும் கூர்ம லட்சுமி நரசிம்மர், சங்கடம் தீர்க்கும் ராகு- கேது, சொர்ணம் அளிக்கும் சொர்ணாகர்ஷண பைரவர், நன்மைகள் தரும் நவ பைரவர், அன்ன மளிக்கும் காசி அன்னபூர்னேஸ்வரி போன்ற தெய்வங்களுடன் முருகப்பெருமான், காயத்திரி தேவி, தத்தாத்ரேயர், ரெங்கநாதர், ஷீரடி சாய்பாபா, கஜலட்சுமி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவர், மரகதாம்பிகா சமேத மரகதேஸ்வரர் போன்ற எண்ணற்ற தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.

மூலவரான தன்வந்திரி பகவான் 8 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல்கொடி ஏந்தியபடி பத்மபீடத்தில் காட்சி தருகிறார். இவரது துணைவியாக வீற்றிருப்பவர், மகாலட்சுமியின் சொரூபமான ஆரோக்கிய லட்சுமி தாயார். இவரும் தன்வந்திரி பெருமாளைப் போலவே, அமிர்த கலசமும், சீந்தல்கொடியும் கைகளில் ஏந்தியிருக்கிறார். இந்த அன்னைக்கு நடைபெறும் ஹோமத்தில் கலந்து கொண்டால், ஆரோக்கிய தோஷங்கள் நீங்குவதுடன், ஆனந்தமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

இங்கு பசுக்களை காக்கும் கோசாலை, மனத்தூய்மை தரும் துளசி மாடம், வள்ளலார், ரமணர், ராகவேந்திரர், காஞ்சி பெரியவர், மகா அவதார் பாபாஜி, அகத்தியர், ராமகிருஷ்ணர், குழந்தையானந்தா மகா சுவாமிகள், புத்தர், குருநானக், மகாவீரர், வீரபிரம்மங்காரு போன்ற மகான்களுடன் சஞ்சலம் போக்கும் சஞ்சீவராயராக அனுமனும் வீற்றிருக்கிறார்.

இந்த தன்வந்திரி பீடத்தில் இருக்கும் தெய்வங்களுக்கு அர்ச்சனை, ஆரத்தி போன்றவை கிடையாது. யாகம் மட்டுமே உண்டு என்பதால், பக்தர்கள் அர்ச்சனைப் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்கும்படி நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காலை, மாலை உலக நலன் கருதி கூட்டு பிரார்த்தனை நடைபெறும். மேலும் பீடத்தில் தினமும் நடைபெறும் தன்வந்திரி ஹோமத்துடன் சகல தேவதா காயத்ரி ஹோமமும் உண்டு. இந்த ஆலயத்தின் விழா வருகிற 13-ந் தேதி முதல், 17-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 16-ந் தேதி (சனிக்கிழமை) தன்வந்திரி பகவானுக்கு 1008 கலச அபிஷேகமும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத சீனிவாசருக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. 17-ந் தேதி ஷண்மத தெய்வங்களை ஆராதிக்கும் வகையில் ஒரே மேடையில் ஷோடஸ (பதினாறு) தெய்வீக திருக்கல்யாண மகோற்சவமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு, உடல் ஆரோக்கியம் பெறலாம் என்கிறார்கள்.

அமைவிடம்

சென்னையில் இருந்து மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரில் இருந்து கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்திலும், திருப்பதியில் இருந்து தெற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலையில் இருந்து வடக்கே 90 கிலோமீட்டர் தூரத்தில் வாலாஜாபேட்டை அமைந்துள்ளது. ஆலயத்திற்குச் செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

சேலம் சுபா