சாமுவேல்: இரண்டாம் நூல்


சாமுவேல்: இரண்டாம் நூல்
x
தினத்தந்தி 13 March 2019 12:06 PM GMT (Updated: 2019-03-13T17:36:51+05:30)

சாமுவேல் முதல் நூலும், இரண்டாம் நூலும் இணைந்த ஒரே நூலாக இருந்தவை. எபிரேயத்திலிருந்து கிரேக்கத்துக்கு மொழிபெயர்த்த போது அதை வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரித்தார்கள்.

சாமுவேல் இரண்டாம் நூல் தாவீது மன்னனைச் சுற்றியே நகர்கிறது.

சாமுவேல் நூலை எழுதியவர் இறைவாக்கினர் சாமுவேல் என பாரம்பரியம் சொல்கிறது. அவருடன் நாத்தானும், காத்தும் இணைந்து இந்த நூலை உருவாக்கினார்கள் என்பது வரலாறு.

ஆனால் முதல் பாகத்திலேயே சாமுவேல் இறந்து விடுவதால், இந்த பாகத்தை நாத்தான், காத் போன்றவர்கள் எழுதினார்கள், அல்லது அவர்களுடைய எழுத்தை பிற்காலத்தில் தொகுத்தார்கள் என இறையியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கிமு 971 -க்கும், 1011-க்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுகாலத்தை இந்த நூல் மையப்படுத்துகிறது. அது தான் தாவீது மன்னன் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செலுத்திய காலம்.

சாமுவேல் முதலாம் நூல் இஸ்ரயேல் மக்களின் முதல் மன்னனான சவுலையும், அவருடைய ஆட்சியையும் பலவீனங்களையும் பேசியது. இறைவனை விட்டு விலகி நடந்த சவுல் மன்னனின் வாழ்க்கை அது.

சாமுவேல் இரண்டாம் நூல், இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்த தாவீது மன்னனையும், அவரது ஆட்சியையும், அவருடைய பலம், பலவீனம் போன்றவற்றைப் பேசுகிறது. தன்னை எதிர்த்த சவுலின் மறைவிற்கும், தன்னை நேசித்த யோனத்தானின் மறைவுக்கும் தாவீது மன்னர் கசிந்துருகுகிறார். அது அவருடைய இளகிய மனதை எடுத்துக்காட்டுகிறது.

தாவீது மன்னனின் வழிமரபிலிருந்து தான் மீட்பர் தோன்றுவார் எனும் இறைவாக்கு பின்னர் இயேசுவின் மூலம் நிறைவேறியது. ஆபிரகாமுக்கும், இயேசுவுக்கும் இடையேயான மையப்புள்ளியாய் தாவீது மன்னன் இருக்கிறார் என வைத்துக் கொள்ளலாம். நீதி, துணிச்சல், ஞானம், இறையச்சம், மனிதநேயம் போன்றவையெல்லாம் அவரிடம் காணப்பட்ட சில முக்கிய குணாதிசயங்கள்.

இந்த நூலில் இருபத்து நான்கு அதிகாரங்களும், 695 வசனங்களும், 20,612 வார்த்தைகளும் உள்ளன. இது விவிலியத்தில் உள்ள பத்தாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது. விவிலியத்தில் மொத்தம் பன்னிரண்டு வரலாற்று நூல்கள் உள்ளன அவற்றில் இது ஐந்தாவது நூல்.

இருபத்து நான்கு அதிகாரங்கள் உடைய இந்த நூலின் முதல் பத்து அதிகாரங்கள் தாவீது மன்னனின் வெற்றிப் பயணத்தை விவரிக்கிறது. அவரது வெற்றிகளையும், அவரை மக்கள் போற்றுவதையும், அவரது நடனத்தையும் சுவை பட விவரிக்கிறது. தனது நண்பன் யோனத்தானின் உடல் ஊனமுற்ற மகனை தன்னோடு அரண்மனையில் வைத்து பராமரிக்கும் அவரது அன்பு அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. தனது ஆட்சிக்குட்பட்ட எந்த இடத்திலும் சிலை வழிபாடு நடக்காமல் பார்த்துக் கொண்ட இஸ்ரயேலின் மன்னராக தாவீது விளங்கினார்.

நூலின் இரண்டாவது பகுதியில் தாவீது மன்னனின் பலவீனம் பதிவு செய்யப்படுகிறது. உரியா என்பவருடைய மனைவியான பத்சேபா மீது பொருந்தாக் காதல் கொள்கிறார் மன்னன். அவளை அடைவதற்காக அவரது கணவனை சூழ்ச்சியால் கொல்கிறார். இதனால் கடவுளின் கோபம் அவர் மேல் விழுகிறது. பத்சேபாவுக்குப் பிறக்கும் அவரது குழந்தை இறந்து விடுகிறது. அது தாவீது மன்னனை கலங்கடிக்கிறது.

தனது தவறை நாத்தான் இறைவாக்கினர் மூலம் புரிந்து கொள்ளும் மன்னர் உடனடியாக கதறி, இறை வனிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பதில் தாவீது மன்னன் தனித்துவம் பெறுகிறார். தவறிழைக்கும் போதெல்லாம் இறைவனே கதியென திரும்பி வருவதில் அவரது இறை நம்பிக்கை வெளிப்படுகிறது.

அதனால் தான் இறைவன் தாவீதையும், அவரது தலை முறைகளையும் தனது வாக்குறுதியின் படி காக்கிறார்.

அவரது வாழ்க்கையில் சில நிகழ்வுகள் கசப்பானவையாகவும், நெகிழ்ச்சியானவையாகவும் நடந்து விடுகின்றன. அம்னோன் என்னும் அவரது ஒரு மகன், தனது மாற்றாந்தாய்க்கும் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார். அவரை, இன்னொரு மகன் அப்சலோம் கொன்று விடுகிறார். பின்னர் அவர் தாவீது மன்னனுக்கு எதிராகவே திரும்பி விடுகிறார்.

அவரது மகன் அப்சலோமுக்கும், அவருக்கும் இடைேயயான அந்த மனக்கசப்பும். தந்தையைக் கொல்லத் தேடும் மகனின் வெறித்தனமும், மகனை வெறுக்க முடியாத தந்தை தாவீதின் தவிப்பும் இந்த நூலின் ஈரமாக எழுதப்பட்டிருக்கின்றன.

தாவீது மன்னன் எழுதிய இரண்டு பாடல்களும் இந்த நூலில் சிறப்பிடம் பெறுகின்றன. ஒரு ஏழை ஆடு மேய்ப் பனான தாவீது, இறைவனால் தெரிந்தெடுக்கப்பட்டு ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை நாற்பது ஆண்டுகள் சிறப்புற வழிநடத்தியது வியப்பின் வரலாறு.

பாவம் செய்வது இயல்பு. எவ்வளவு பெரிய இறை மனிதராக இருந்தாலும் அவர் பாவத்தில் விழும் வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படி பாவத்தில் விழுகையில் மனம் திரும்பி இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதே இந்த நூல் சொல்லும் அடிப்படைச் செய்தி. அற்புதமான கதைகளுக்காகவும், ஆழமான ஆன்மிக புரிதலுக்காகவும் இந்த நூலை நிச்சயம் படிக்கலாம்.

(தொடரும்)

Next Story