ஆன்மிகம்

ருத்ராட்சமும்.. பயன்களும்.. + "||" + Rudraksham .. the benefits ..

ருத்ராட்சமும்.. பயன்களும்..

ருத்ராட்சமும்.. பயன்களும்..
சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.

ஒரு முகம்

* பெரும்பாலும் உருண்டை வடிவமாக இருக்கும்.

* நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவமாகவும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் நீள வடிவமாகவும் காணப்படுகிறது.

* இது சூரியனின் ஆதிக்கம் பெற்றதாக இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* ஒரு முக ருத்ராட்சத்தை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ பயன்படுத்தி வந்தால், ஜாதகத்தில் சூரியனால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும்.

* பிரம்மஹத்தி தோஷம் போக்கும் சக்தி படைத்தது.

* ஆன்மிக தன்மை அளிக்கும் ஆற்றல் உண்டு.

இரு முகம்

* அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது. இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது.

* சந்திரனின் ஆதிக்கம் பெற்றது.

* பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது.

* பசுவை கொன்ற பாவத்தை போக்கும்.

* குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடத்தில் நல்ல உறவை விரும்புபவர்கள், இரு முக ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.

* ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கக் கூடியது.

* இருமுக ருத்ராட்சத்தால் ஆன மாலையை அணிந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மூன்று முகம்

* மூன்று முக ருத்ராட்சம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது.

* இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் உடலில் உள்ள சோர்வு, பலவீனம் நீங்கும்.

* இது சிவனுடைய மூன்று கண்களாக விளங்கும் சோம, சூரிய, அக்னி என்ற 3 அம்சங்களுடைய வடிவங்களைக் குறிப்பதாகும்.

* இதன் அதிபதிகள் சூரியன், சுக்ரன், அக்னி தேவன்.

* கருக்கலைப்பு செய்த பாவத்தைப் போக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.

* ஸ்ரீமத் தேவி பாகவதம் என்ற நூல், இந்த ருத்ராட்சத்தை அணிவதால் கொலை பாதகம் செய்த பாவம் விலகும் என்று சொல்கிறது.

* செவ்வாய் கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் துர்மரணம். விபத்து, விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம் ஆகியவை நீங்கும்.

நான்கு முகம்

* பிரம்ம தேவனின் அருள் பெற்றது, இந்த ருத்ராட்சம்.

* இதன் ஆதிக்க கிரகம் புதனாக இருப்பதால், இதனை அணிபவர்களுக்கு 4 திசைகளிலும் புகழை உண்டாக்கும்.

* பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற 4 நிலைகளையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.

* இதை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ உபயோகிப்பவர்களின் பாவங்கள் ஒழிந்து, புதிய பிறவியில் வாழ்வது போல் இருக்கும்.

* மாணவர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிய கல்வியில் சிறந்து விளங்குவர்.

* இந்த ருத்ராட்சம் மனதை ஒருமுகப்படுத்தும்.

ஐந்து முகம்

* இந்த ருத்ராட்சம் குருவின் ஆதிக்கம் பெற்றது.

* அகோரம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.

* ஐந்து முக ருத்ராட்சத்தை அணிபவருக்கு, அகால மரணம் கிடையாது.

* பாலுறவிலும், உணவிலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஐந்துமுக ருத்ராட்சம் அணிவதால் விலகும்.

* பஞ்சமுகனான சிவபெருமானின் அம்சமான, காலக்கி ருத்ரர் அருள் நிறைந்தது இந்த ருத்ராட்சம்.

* இந்த ருத்ராட்சத்தை வீட்டில் உள்ள விளக்குகளுக்கு மாலையாக பயன்படுத்தினால், செல்வம் பெருகும்.

ஆறு முகம்

* சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.

* உடல் நலம், வாழ்க்கை வசதி, மகிழ்ச்சி அனைத்தையும் கொடுக்கும்.

* இது முருகப்பெருமானின் அருளையும் பெற்றது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

* ஆறுமுக ருத்ராட்சத்துடன், கவுரி சங்கர ருத்ராட்சத்தை இணைத்து அணிந்தால் குழந்தைபேறு உண்டாகும்.

* பதிமூன்று முக ருத்ராட்சத்திற்குரிய பலன்கள் அனைத்தும், ஆறுமுக ருத்ராட்சத்தின் மூலம் கிடைக்கும்.

* ஆறுமுக ருத்ராட்சத்தை நான்கு முக ருத்ராட்சத்தோடு இணைத்து அணிந்தால், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.

* அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த ருத்ராட்சத்தை அணியலாம்.

ஏழு முகம்

* சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.

* ஏழு பெண்களைக் கொண்ட சப்தமாதர்களின் அருளும் கொண்டது.

* சூரியன், சப்த மாதாக்கள், ஆதிஷேசன், காமதேவன், முருகன் ஆகியோரின் அருளையும் பெற்றது.

* பணப்பெட்டி, பணப்பை போன்றவற்றில் இந்த ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டால் செல்வம் பெருகும்.

* இந்த ருத்ராட்சத்தோடு எட்டு முக ருத்ராட்சத்தையும் சேர்த்து அணிய வேண்டும்.

எட்டு முகம்

* எட்டு என்பதற்கு ‘அஷ்டம்’ என்று பொருள்.

* அஷ்ட கர்மங்கள், அஷ்டமா சித்திகள், அஷ்ட துர்க்கைகள், அஷ்ட பைரவர்கள், அஷ்ட மாதர்கள் அனைவரின் அருளையும் பெற்றது இந்த ருத்ராட்சம்.

* எட்டு முக ருத்ராட்சம் விநாயகப்பெருமானின் அருளையும், ராகுவின் ஆதிக்கத்தையும் பெற்றது.

* சனி தோஷம் உள்ளவர்கள் இந்த ருத்ராட்சத்தோடு, எட்டு முக ருத்ராட்சத்தை இணைத்து அணிய வேண்டியது அவசியம்.

* இந்த ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு பகுத்தறிவு, புத்தி, எழுத்தாற்றல், புகழ், செல்வம் கூடும்.

ஒன்பது முகம்

* ஒன்பது என்பதற்கு ‘நவ’ எனப் பொருள்படும்.

* நவக்கிரகங்கள், நவ துர்க்கைகள், பைரவர்கள் அனைவரின் அருளைப் பெற்றது.

* ஒன்பது வித சக்திகளை உள்ளடங்கியது இந்த ருத்ராட்சம்.

* இதன் ஆதிக்க கிரகம் கேது என்பதால், இந்த ருத்ராட்சத்தை அணிய மரண பயம் நீங்கும்.

* ஒன்பது முக ருத்ராட்சத்தோடு 10 அல்லது 11 முக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால் சகலவித பாதுகாப்பும் உண்டாகும்.

* இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் கணவன்- மனைவி பிரச்சினை விலகும்.

பத்து முகம்

* மிகவும் சக்தி வாய்ந்த இந்த ருத்ராட்சம், எமதர்மனின் அருளைப் பெற்றது.

* இதை அணிபவர்களுக்கு பில்லி, சூனியம், மந்திர, தந்திரங்களால் வரும் கெடுபலன்களை தடுக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.

* வாழ்வில் சரியான பாதையை காட்டும் ஆற்றல் இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.

* இந்த ருத்ராட்சத்தோடு ஒருமுக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி நிச்சயம்.

* இதை அணிபவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது. ஆனால் இந்த ருத்ராட்சம் மிக அரிதாகவே கிடைக்கும்.

-  நாடி ஜோதிடர் பாஸ்கர், வடவள்ளி