ஆன்மிகம்

சபரி + "||" + Sabari

சபரி

சபரி
இந்தத் தொடரின் மூலமாக ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி அறிந்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த வாரம், ராமனுக்காக நெடுங்காலம் தவம் செய்தபடி காத்திருந்த மூதாட்டி சபரியைப் பற்றி பார்ப்போம்.

ஆழ்ந்த அன்பும் பக்தியும் கொண்டவள்.
தான் தவறே செய்யவில்லை என்றாலும்
மன்னிப்பு கேட்க தயங்க மாட்டாள்.
கனிவும் பக்தியும், நம்பிக்கையும், பொறுமையும்
கைக்கொண்டு இறைவனை தரிசித்தவள்.

“ராம்... ராம்... ராம்... ராம்... ராம்...”

வனமெங்கும் பரவியது அந்த நாமம். மரங்கள் அசைவற்று நின்றன. காற்று குளுமையாக வீசியது. பறவைகள் பறப்பதை நிறுத்தி விட்டு கிளைகளில் அமர்ந்து, ராம நாமத்தை செவி குளிரக் கேட்டன.

குருதிச் சாக்கடையாக ஓடும் பம்பா நதியும் கூட, நிலைத்து நின்று சபரியின் ராம நாமத்தை கேட்டு ஆனந்தம் அடைந்தது. மலைகளின் உச்சிகள் அந்த நாமத்தை விண்ணுலகத்திற்கு எடுத்துச் சென்றன. காற்றில் அலை அலையாகப் பரவிய ராம நாமம், அந்த வனப் பகுதி எங்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

சிறிது தூரத்தில் இளவலுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீராமனின் செவிகளிலும் அந்த நாமம் விழுந்தது. அவர் புன்னகையுடன் ஒரு சில நொடிகள் அந்த நாமத்தை உள்வாங்கினார்.

ராமன் அசைவற்று நிற்பதைக் கண்டு, “என்ன அண்ணா?” என்றபடி லட்சுமணன் பரபரப்புடன் அருகில் வந்தான்.

“அருகில் மதங்க முனிவரின் ஆசிரமம் உள்ளது. அங்கு போகலாம்.”

ராமனின் சொல்லுக்கு எதிர்ப் பதம் என்ன இருக்கிறது.

இருவரும் அந்த ஆசிரமம் நோக்கி நடந்தனர். மதங்க முனிவர் இல்லாத போதும், ஆசிரமம் தூய்மையாகவே இருந்தது. சுற்றிலும் மரங்கள், வண்ண மலர்த் தோட்டங்கள். அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கி அந்த இடம் எங்கும் நறுமணம் பரவி இருந்தது. ஒரு வேப்ப மரத்தின் கீழ், கற்பாறையில் சபரி அமர்ந்திருந்தார்.

தொலைவில் ஆசிரமத்தில் முனிவர்கள், பெண்கள் தங்கள் பணியில் ஆழ்ந்திருக்க, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து விட்டு தனிமையில் வந்து ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்திருந்தார் சபரி. முதிர்ந்த, பழுத்த பழம் போன்ற உருவம். தலையின் முன்புறம் முடி உதிர்ந்து, நரைத்து வெள்ளிச் சொம்பாக இருந்தது.

அந்த முகம் முழுதும் பரவி இருந்த சாந்தம், அமைதி அவருக்கு ஒரு தெய்வீக தோற்றத்தைத் தந்திருந்தது. பெண் துறவி போன்ற தோற்றம். உடல் ஆசை, உருவத்தின் மீதான பற்று, வாழ்வியல் பொருட்கள் மீதான ஈர்ப்பு அகன்று ராம நாம ஜெபத்திலேயே தன்னை முழுதாக ஆட்படுத்தியிருந்தார்.

‘வருவான், ராமன் தனக்கு அனுக்கிரகம் செய்ய வருவான்’ என்ற ஒன்று மட்டுமே சபரியின் மனதில் ஆழ வேரூன்றி இருந்தது.

வேட்டுவக் குலத்தில் பிறந்த சபரியின் மனதில் கருணையும், அன்பும் நிறைந்திருந்தது. தன் திருமணத்திற்காக மிருகங்களைக் கொன்று உணவு சமைப்பதை பார்க்கப் பொறுக்காமல், “எனக்கு திருமணமே வேண்டாம்” என்று வீட்டை விட்டு வெளியேறியவர். மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார்.

மதங்க முனிவர், சபரிக்கு பல நல்ல உபதேசங்களைச் செய்தார். தன் சீடர்களுடன் அவர் விண்ணுலகம் செல்லும்போது, “அம்மா சபரி.. பூவுலக பாரம் தீர்க்க மகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதாரம் செய்யப் போகிறார். அவர் சீதையைத் தேடிச் செல்லும் வழியில் இங்கு வருவார். நீ அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அதன்பின் விண்ணுலகம் வரலாம்” என்று கூறியிருந்தார்.

அது முதலே, “என்று வருவான் ராமன். கண்ணின் கருமணி போன்ற அவனை என்று கண்டு பிறவிப் பயன் எய்துவேன்” என ஏங்கியவளாக, ராமநாமத்தை ஜெபித்தபடி நாட்களைக் கழிக்கத் தொடங்கியிருந்தார் சபரி.

அவர் இங்கு இருப்பதை சில முனிவர்கள் விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண், அங்கு இருப்பதை வெறுத்தனர். அதில் ஒரு முனிவர் பம்பா நதியில் குளித்து விட்டு வரும்போது, ஆசிரமத்துக்கு நீர் எடுக்க வந்த சபரியின் கை தவறுதலாக அவர் மேல் பட்டுவிட்டது.

வெகுண்ட முனிவர் அவளை வெகுவாகக் கடிந்து கொண்டார்; தூற்றினார். ‘மீண்டும் ஆற்றில் இறங்கி குளித்தால்தான் தீட்டு போகும்’ என்று பம்பா நதியில் இறங்கினார். அந்த நிமிடம் பம்பா நதி, குருதிச் சாக்கடையாக மாறி, புழுக்கள் நெளிய ஆரம்பித்து விட்டது. இன்று வரை அதை யாரும் பயன்படுத்தவில்லை.

சபரி ‘அனைத்தும் ராமன் வருகையால் மாறும்’ என்று காத்திருந்தார்.

அந்த காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது. இதோ ராமன், அவர் முன்பாக நின்று கொண்டிருந்தார்.

ஆனால் சபரிக்கு தான் வார்த்தைகளே வரவில்லை. ராமனைக் கண்டவுடன் பேச்சு மறந்து, பரவசத்தில் கண்ணீர் வழிய, விரல்கள் நடுங்க “ரா.. ராம்.. மா..” என்று குழறியது. தள்ளாடியபடி எங்கோ ஓடினார், ஆனால் எதற்காக என்பது மறந்து போய் மீண்டும் திரும்பி வந்தார். ஸ்ரீராமனின் முகத்தையே பார்த்தபடி மெய் மறந்து நின்றார். மலர்களை அள்ளி, அள்ளி, ராம-லட்சுமணர்கள் மீது வீசினார்.

காய், கனிகள், பழங்கள் கொண்டு வந்து, அதைத் தான் தின்று பார்த்து, ருசியானதை மட்டும் ராமனுக்குத் தந்தார். ஸ்ரீராமன் அதில் இருந்த எச்சிலைப் பார்க்கவில்லை. அன்பைதான் பார்த்தார். ஆர்வத்தோடு அந்த மூதாட்டி தந்ததை விரும்பி உண்டார்.

“தாயே, உனக்கு என்ன வேண்டும் கேள்.”

“முதற்பொருளே, முழுப் பொருளே.. உன்னைச் சந்தித்த பாக்கியத்தை விட வேறு என்ன வேண்டும்?” - மனம் நெகிழப் பேசினார் சபரி.

“இல்லை தாயே. உன் அன்புக்கு நான் பிரதி செய்ய வேண்டும். ஏதாவது கேள்.”

சபரி தயங்கியபடி, “இறைவா, இந்த பம்பா நதி, குருதிச் சாக்கடையாக இருக்கிறது. இதை நீக்க வேண்டும். ஆசிரமத்து முனிவர்களுக்கு பயன்படும்படி தூய்மையான நதியாக அது மாற வேண்டும்.” சபரியின் வார்த்தையின் பம்பா நதியின் நிலை குறித்த வருத்தம் வெளிப்பட்டது.

“தாயே, இதற்கு நான் தேவையில்லை. தாங்களே இதில் இறங்குங்கள். உங்களது பாதம் அந்த நீரில் பட்டாலே போதும், நீரின் மாசு நீங்கிவிடும். மனிதரில் ஜாதியால் உயர்வு, தாழ்வு இல்லை. ஒருவரை ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்தக்கூடாது. தங்களை விட தூய்மையானவர் இங்கு யார் இருக்கிறார்?”

ராமன் வற்புறுத்த “ராமா, ராமா” என்று உச்சரித்தபடி சபரி ஆற்றில் இறங்கினார்.

அவர் பாதம்பட்ட அந்த நொடி, நதி தூய்மையானது. குருதி, புழுக்கள் மறைந்து, வெள்ளியை உருக்கி விட்டதுபோல் ஓடியது பம்பா நதி.

“ராமா உன் மகத்துவம்தான் எத்தகையது?” வியந்து போற்றினார் சபரி.

“இது என் மகத்துவம் இல்லை தாயே. உங்களுடைய ஆழ்ந்த பக்தி, நம்பிக்கை, பொறுமை, இவையே காரணம். இதுநாள் வரை தங்களைத் தூற்றிய முனிவர்களை நீங்கள் கடிந்து கொள்ளவில்லை. இந்த நதி அவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்று விரும்பினீர்கள். ஜாதியை விட, நல்ல மனமே உயர்ந்தது.”

பரவசத்துடன் ராமனை கையெடுத்துக் கும்பிட்டார் சபரி.

“தாயே, என் மனைவி சீதையை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்று விட்டான். அவளைத் தேடிக் கொண்டு வரும் வழியில் கவந்தனின் வதம் நிகழ்ந்தது. அவன்தான், ‘மதங்க முனிவரின் ஆசிரமத்தில் சபரி அல்லும் பகலும் உன் நாமத்தையே ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். சீதையைத் தேட உங்களுக்குத் துணை தேவை. எனவே அவளைச் சந்தியுங்கள்’ என்றான். அதன்படியே தங்கள் தரிசனம் கிடைத்து விட்டது”

ராமனின் பணிவான பேச்சில் மகிழ்ந்த சபரி, கிஷ்கிந்தைக்குச் செல்லும் வழியைக் கூறியதுடன், அங்கிருக்கும் சுக்ரீவனுடன் நட்பு கொள்ளும் வழிமுறைகளையும், பயணத்திற்குரிய வழிகளையும் கூறினார். ஒரு நல்லாசிரியன் கூறுவதைக் கேட்கும் மாணவன் போல் ராமன் அதைக் காது கொடுத்துக் கேட்டான்.

ராம தரிசனம் பெற்ற மகிழ்ச்சியில் சபரி இந்த உலக வாழ்வை உதிர்க்க நினைத்தார். பல்லாண்டுகள் ராம நாமத்தைச் ஜெபித்து யோகப் பயிற்சி பெற்ற சபரி, அந்த நெறியின் பயனால் யோகக் கனல் மூட்டி, அதில் தன் உடலைத் துறந்து விஷ்ணு லோகம் சென்றார்..

“தாயே” என்று ராமனால் அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் சபரி. ஜாதியால் உயர்வு இல்லை என்று ராமனால் போற்றப்பட்டவர். அவர் இருந்த மலையே ‘சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத பக்திக்கு உதாரணம் சபரி.

-தொடரும்.