ஆன்மிக சடங்குகளுடன் உருவாகும் கற்சிலைகள்


ஆன்மிக சடங்குகளுடன் உருவாகும் கற்சிலைகள்
x
தினத்தந்தி 13 March 2019 1:13 PM GMT (Updated: 2019-03-13T18:46:37+05:30)

மனதில் அமைதியை உருவாக்கும் இடங்களாக கோவில்கள் உள்ளன. அங்கே உள்ள சிலைகள் கும்பாபிஷேக சடங்கு மூலம் சக்தி அளிக்கப்பட்டு, அனைவராலும் வழிபடப்படுவதை அனைவரும் அறிவோம்.

அந்த சிலைகள் ஒரு காலத்தில் கற்களாக இருந்தவைதான். சாதாரண கல் ஒன்று எவ்வாறு வழிபடப்படும் தெய்வீக வடிவத்திற்கு மாற்றப்படுகிறது என்பது பல படிநிலைகள் கொண்ட நீண்ட செயல் திட்டமாகும். அவற்றின் பின்னணியில் பலரது உழைப்பும், தொழில் நுட்பமும், ஆன்மிகம் மற்றும் அறிவியல் காரணங்களும் அடங்கி இருக்கின்றன. கருங்கல் சிலை ஒன்று எவ்வாறு தெய்வீக அருள் தரும் சிலையாக மாறுகிறது என்ற தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பெரும்பாலான, கோவில்களில் உள்ள வழிபாட்டுக்கு உரிய சிலைகள் கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். சில இடங்களில் சுதை என்ற சுண்ணாம்பு கலவை அல்லது மார்பிள் கற்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அமைந்த சிலைகளின் அடிப்படை வெறும் கல்தான் என்று நினைத்து விட இயலாது. ஒரு சிலையை வடிப்பதற்கு முன்னர் அதன் தெய்வ அம்சம், உயரம், வடிவம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிகம் சம்பந்தமான அடிப்படை கட்டமைப்பு அம்சங்களை தேர்ந்த நிபுணர்கள் முடிவு செய்வார்கள். அதன் பின்னர் தேர்வு செய்த விஷயங்களுக்கு ஏற்ப கருங்கல் அல்லது மார்பிள் வகை கற்கள் உள்ள பகுதிக்கு சென்று தேவையான அளவு கொண்ட கல் தக்க தர நிலையில் உள்ளதா என்று கவனமாக தேர்வு செய்து, சிலையின் உயரம் மற்றும் அகலம் ஆகியவற்றை விடவும் நான்கில் ஒரு பங்கு அளவு அதிகம் கொண்ட கல் தேர்வு செய்யப்பட்டு கோவில் அமைய உள்ள பகுதிக்கு எடுத்து வரப்படும்.

அதன் பின்னர் சிற்ப சாஸ்திர விதிகளின்படி சிலை முழுமையாக உருவாவது வரை நிறைய ஐதீக நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சிலையை உருவாக்கும் நிலையிலேயே நிறைய விதிமுறைகள் இருப்பது மட்டுமல்லாமல், மூலவராக உருவாக்கப்பட்ட சிலையை அப்படியே கோவிலுக்குள் எடுத்து சென்று பிரதிஷ்டை செய்து விட இயலாது. அதற்கான பிரதிஷ்டா நியமன வழிமுறைகள் அனைத்தும் அறிவியலும், ஆன்மிகமும் இணைந்த நிலையில் செயல் வடிவம் கொண்டவை. அவற்றின் மூலம் சிலைக்குள் இறை அம்சம் வரவழைக்கப்படுகிறது.

ஆகம விதிமுறைகளின்படி உருவாகும் கடவுள் சிலைகள் முதல் கட்டமாக சுத்தம் செய்யப்பட்டு, நல்ல நாளில் ஜலவாசத்தில் வைக்கப்படும். அதாவது, மூன்று புண்ணிய நதிகள், முக்கியமான தீர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட நீரை சிலை அமைய உள்ள பகுதியின் நீரோடு கலக்கப்படும். அந்த நீரை ஒரு பெரிய தொட்டியில் நிரப்பி புதிய சிலை அதற்குள் நன்றாக மூழ்கும்படி, படுக்கை வசத்தில் ஒரு மண்டலம் என்ற 48 நாட்கள் வைக்கப்படும்.

ஜலவாசத்தில் இருக்கும் சிலை படிப்படியாக குளிர்ச்சி அடைந்து நாளடைவில் மேலும் உறுதியாக மாறிவிடும். அவ்வாறு 48 நாட்கள் ஜலவாசத்தில் இருக்கும் சிலையில் ஏதாவது துளைகள் அல்லது நுட்பமான பிளவுகள் இருந்தால் நீர் அதற்குள் நுழைவதன் காரணமாக, நீர் குமிழிகள் உருவாகி மேலே வரும். அதன் அடிப்படையில், அது பின்னமான சிலை என்றும், வழிபாட்டுக்கு ஏற்றது அல்ல என்றும் கண்டறியப்படும். அதன் மூலம் குறையுள்ள சிலை கோவிலில் பிரதிஷ்டை செய்யாமல் தவிர்க்கப்படுகிறது. குறை உள்ள சிலையை பிரதிஷ்டை செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட ஊருக்கும், அதில் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்புகளை உருவாக்கும் என்பது சாஸ்திர விதியாகும். அந்த நிலையை ஆரம்பத்தியிலேயே தடுக்கும் வழிமுறையாக ஜலவாசம் என்ற நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

அதன் பின்னர் 48 நாட்கள் கழித்து, நீரில் ஊறிய சிலை எடுக்கப்பட்டு, அடுத்த கட்ட நடைமுறையான தானிய வாசத்தில் வைக்கப்படும். அதன்படி, சிலையை பாதுகாப்பான ஒரு இடத்தில் கிடை மட்டமாக வைத்து, முற்றிலும் மூழ்கும் அளவுக்கு நவ தானியங்கள் கொட்டப்படும். நவ தானியங்களோடு நவ ரத்தினங்கள், பொன், வெள்ளி மற்றும் செப்பு காசுகள் ஆகியவற்றையும் சேர்த்தே இந்த தானிய வாசம் வைக்கப்படுவது வழக்கம். சிலையில் தானிய வாசமும் 48 நாட்கள் கொண்டதாகும். இந்த முறை தற்போதைய காலகட்டத்தில் பரவலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, நீரில் அமிழ்த்தப்படுவதால் ஏதாவது ஓட்டை, விரிசல் இருப்பது தெரியவரும். ஜல வாசத்திற்கு பிறகும், ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் தானிய வாசம் சுட்டிக்காட்டும். அதாவது, நவதானியம் மூலமாக உருவாகும், வெவ்வேறு விதமான வெப்ப நிலைகள் சிலையை சுற்றிலும் 48 நாட்கள் பாதித்தவாறு இருக்கும். அந்த நிலையில் சிலையின் வலிமையற்ற பகுதிகள் உடைந்து விடும்.

இன்றைய அவசர யுகத்தில் ஜலவாசம் மற்றும் தானிய வாசம் ஆகிய இரு நிலைகள் மட்டும் பரவலாக உள்ளது. தானிய வாசத்தில் நவ தானியங்கள், தங்க காசுகள், நவ ரத்தினங்கள் ஆகியவை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களால் முடிந்த அளவு சேர்க்கப்படுகிறது.

ஒரு சில இடங்களில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒரு வாரம் அல்லது 12 நாட்கள் வரையில் புஷ்பாதி வாசம் என்ற முறையிலும் சிலை வைக்கப்படுகிறது. அதாவது, பல்வேறு விதமான நறுமண மலர்கள் மூலம் சிலை மூழ்க வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சிலைக்கு வாசனை ஏற்படுகிறது. புஷ்பாதி வாசத்துக்கு பிறகு, கண்களை திறக்கும் நிகழ்வுக்கு முன்பாக அந்த தெய்வ சிலை சயனாதி வாசம் மூலம் சிலையின் கிடைமட்ட வடிவம் சோதிக்கப்படும். அதன் பின்னர், சிலையின் கண் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதாவது, தகுந்த பூஜைக்கு பிறகு தலைமை ஸ்தபதி தங்க ஊசி மூலம் சிலையின் கண்ணில் மெல்லிய கீறல் வரைவார். அதன் மூலம் கருவிழி திறக்கப்பட்டு, அந்த தெய்வ சிலைக்கு முழுமையான அழகு வருகிறது.

பின்னர் கும்பாபிேஷக நடந்த ஆறுகாலம் அல்லது எட்டு காலம் யாகசாலையில் மந்திர உச்சாரணம் செய்யப்பட்டு, அதை ஈர்த்துக்கொண்ட புனித கலச நீர், காப்பு கயிறு போன்ற பல்வேறு புனிதப்பொருட்கள் மூலம் சிலைக்கு தெய்வீக தன்மை அளிக்கப்படுகிறது. ஸ்பரிசவாதி என்னும் இந்த கடைசி வாசத்தில், கருவறையில் இருக்கும் பிரதான ஆச்சாரியார் மூலம் ஐதீக முறைப்படி சிலையின் ஒன்பது துவாரங்களுக்கான மந்திரம் ஓதப்பட்டு, ஆன்மிக சக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அந்த சிலைக்கு அளிக்கப்பட்ட பின்னர் சிலை முழுமையான கடவுளாக மாற்றப்படுகிறது. சாதாரண கல்லில் இருந்து உருவான சிலை மேற்கண்ட பல்வேறு அறிவியல், ஆன்மிக வழிமுறைகளின்படி முழுமையான கடவுள் வடிவமாக மாறுகிறது என்பது ஆன்மிக சான்றோர்களின் கருத்தாகும். 

மன்னர் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஆறு முறைகள்

மன்னர் ஆட்சி காலங்களில் சிலைகளுக்கு ஆறு வகையான வாசம் என்று மேற்கொள்ளப்பட்டு வந்ததாக ஐதீகம். அதாவது, ஜலவாசம், தானிய வாசம் என்பது முதல் இரு நிலைகள் ஆகும். நவரத்தினங்கள் பயன்படுத்தப்படும் ரத்தின வாசம் என்பது மூன்றாவது நிலை. பொற்காசுகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவது தன வாசம் நான்காவதாகும். வகை வகையான பட்டாடைகள் சிலைக்கு அணிவிக்கப்படும் வஸ்திர வாசம் ஐந்தாவதாகும். கடைசியாக, ஹம்சதூளிகா மஞ்சம் என்ற அன்னத்தின் சிறகுகளால் உருவான படுக்கை மேல் மான் தோல் அல்லது புலித்தோல் விரிக்கப்பட்டு, அதன் மீது அந்த சிலை வழக்கப்படி 48 நாட்களுக்கு வைக்கப்படுவது சயன வாசம் எனப்படுவது ஆறாவதாகும். மேற்கண்ட ஆறு வாசமும் 48 நாட்கள் வைக்கப்படும் என்ற நிலையில், அந்த சிலை மொத்தம் 288 நாட்கள் பல நிலைகளை கடந்து பிரதிஷ்டைக்கு தயாராக இருக்கும். ஜல வாசம், தான்ய வாசத்தில் சிலைகளின் குறைகள் தெரிந்து விடும். ரத்தின வாசத்தில் நவக்கிரகங்களின் அம்சமான நவரத்தினங்களின் குணங்களை சிலைகள் பெறும். தன, வஸ்திர, சயன வாசத்தில் இருக்கும் சிலைகள் தெய்வ அதிர்வினை பெறுகின்றன என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டது.


- ஜானகிராம்

Next Story