இறைத்தூதர்களான நபிமார்களை நம்புவது


இறைத்தூதர்களான நபிமார்களை நம்புவது
x

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘இறைத்தூதர்களான நபிகளை நம்புவது’ குறித்த தகவல்களை காண்போம்.

நபிமார்கள் என்றால் யார்?

நபிமார்கள் என்பவர்கள் மனிதர்களில் புனிதர்கள், மாமனிதர்கள்.

இவர்களுக்கு இறைவனிடம் இருந்து இறைச்செய்திகள் அறிவிக்கப்படுகிறது. அவற்றை, அவர்கள் நன்றாக விளங்கி, அதில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் சமுதாயத்தவர்களுக்கு போதிப் பவர்கள்.

இவர்கள் சீரிய சிந்தனையாளர்கள், புரட்சியா ளர்கள். சமூக சீர் திருத்த கருத்துக்களை விதைத்து, சமூக முன்னேற்றத்திற்கு அயராது அல்லும் பகலும் பாடுபடக்கூடியவர்கள். சமூக தீமைகளுக்கு எதிராக போராடுபவர்கள், சமூகக்கொடுமைகளை துணிவுடன் அகற்றியவர்கள்.

மக்களை, சத்தியத்தின் பக்கம் அழைப்பவர்கள், அசத்தியத்தை தயங்காமல் எதிர்ப்பவர்கள். இறைவனை அடைய எளியமுறையில் இறைக்கோட்பாடுகளை இனிமையாக பேசுபவர்கள். நல்லதை ஏவுபவர்கள், தீயதை தடுப்பவர்கள். சமூக ஒற்றுமைக்காக உழைத்தவர்கள். இறைவழியிலும், நேரான பாதையிலும் மக்களை அழைத்து நல்வழி காட்டுபவர்கள்.

அவர்கள் அன்பானவர்கள்; அழகானவர்கள்; பண்பாளர்கள்; வாய்மையாளர்கள்; மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்; பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டவர்கள்; இறை நேசர்கள்; சமூக சேவகர்கள். இப்படி பன்முகத்தன்மை வாய்ந்தவர்கள் தான் நபிமார்கள்.

இவர்களையும், இவர்கள் கொண்டு வந்ததையும், செய்து வந்ததையும், சொல்லி வந்ததையும், அங்கீ கரித்து வந்ததையும் நம்பிக்கை கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

நபி-ரசூல்

நபிமார்கள், ரசூல்மார்கள் இடையே சிறிய வேறுபாடு உள்ளது. ரசூல் என்பவருக்கு தூதுத்துவம், நபித்துவம் ஆகிய இரண்டு தன்மைகளும் உண்டு.

நபி என்பவருக்கு நபித்துவம் மட்டுமே இருக்கும். அதாவது, மார்க்கத்தின் புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு இறைச்செய்தி இறக்கப்பட்டு, அதனை மக்களுக்கு எடுத்துச் சொல்பவர் இறைத்தூதர் எனப்படுவார். இவருக்கு தனிவேதமோ, சிறிய ஏடுகளோ வழங்கப்பட்டாலும், வழங்கப்படவில்லையானாலும் சரியே.

நபி என்பவருக்கு புதிய சட்டங்களைக் கொண்டு, வேத செய்தி இறக்கப்படாது. அவருக்கு முன்பு வந்த இறைத்தூதரின் சட்டங்களையே பின்பற்றி பிரச்சாரம் செய்பவராக இருப்பார்.

நபிமார்களை நம்புவதில் நான்கு விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது. அவற்றை விரிவாக காண்போம்...

1) இறைவன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களிலிருந்தே ஒரு இறைத்தூதரை அனுப்பி வைத்தான். ஒரே இறைவனை மட்டுமே வணங்கிட அவர் தம் மக்களை அழைப்பார்; இறைவன் அல்லாதவற்றை வணங்குவதை மறுத்துப் பேசுவார். இறைச் செய்திகளிலிருந்து எதையும் மறைக்காமல், மாற்றாமல் உள்ளதை உள்ள படியே தெரிவிப்பார். அவற்றிலிருந்து தங்களது விருப்பப்படி ஒரு எழுத்தை கூட கூடுதலாகவோ, குறைவாகவோ கூறமாட்டார்.

‘தெளிவாக எடுத்துச் சொல்வதைத் தவிர தூதர் களுக்கு வேறு எதுவும் உள்ளதா?’ (திருக்குர்ஆன் 16:35)

‘எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக, அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்’ (திருக்குர்ஆன் 14:4).

இறைத்தூதர்களின் அழைப்புப்பணி, முதல் தூதரிடமிருந்து அவர்களின் இறுதித்தூதர் வரை ஓரிறைக் கொள்கையின் அடிப்படையின் மீதே ஒன்றுபட்டிருந்தது.

அனைத்து வகையான வணக்கங்களையும், இறைவனுக்கு மட்டுமே ஆற்றிடவேண்டும். அவற்றில் பிறரை கூட்டுச் சேர்க்கக்கூடாது என்ற கொள்கையை அனைவரும் உரக்கச் சொன்னார்கள்.

‘என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; எனவே என்னையே வணங்குங்கள், என்பதை அறிவிக்காமல் உமக்கு முன் எந்தத் தூதரையும் நாம் அனுப்பியதில்லை’. (திருக்குர்ஆன் 21:25)

‘அளவற்ற அருளாளனைத் தவிர வணங்கப்படும் கடவுள்களை நாம் ஆக்கியுள்ளோமா?’ என்று உமக்கு முன் நாம் அனுப்பிய (இறைத்) தூதர்களிடம் கேட்பீராக’. (திருக்குர்ஆன் 43:45)

தூதர்களிடையே வணக்க வழிபாடு முறைகள் மாறுபட்டிருக்கலாம். அவரவர் மார்க்கச் சட்டத்தின்படி ஆகுமானவைகள், கூடாதவைகள், கடமைகள் போன்ற விஷயங்களில் ஒருவர் மற்றவருக்கு மாறுபட நேரிடலாம். எனினும், ஓரிறைக் கொள்கையில் அனைவரும் ஒரே கருத்து உடையவர்களாகத்தான் இருந்தார்கள்.

‘உங்களில் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கைத் திட்டத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளோம். இறைவன் நினைத்திருந்தால் உங்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் வழங்கியவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக (அவ்வாறு ஆக்கிடவில்லை)’. (திருக்குர்ஆன் 5:48)

2) யாரின் பெயரை நாம் அறிந்திருக்கிறோமோ அவரையும், யாரின் பெயரை நாம் அறியவில்லையோ அவரையும், பெயர் இல்லாமல் எவர் குறிப்பிடப்படுகிறாரோ அவரையும் நம்புவது முஸ்லிம்கள் மீது கடமை.

‘உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். அவர்களில் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. இறைவனின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டுவருவது எந்தத் தூதருக்கும் இல்லை’. (திருக்குர்ஆன் 40:78)

‘(முகம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர் களின் வரலாற்றை உமக்குக் கூறவில்லை’. (திருக்குர்ஆன் 4:164)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரி வித்ததாக அபூதர் (ரலி) கூறுவது:

“அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எத்தனை?’ என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் ஆவர். அவர்களில் முன்னூற்றி பதினைந்து பேர் ரசூல் (இறைத்தூதர்)கள் ஆவர்’ என்று கூறினார்கள்”. (நூல்:அஹ்மது, மிஷ்காத்)

இவர்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றவர்கள் 25 நபிமார்கள். அவர்கள் பெயர் வருமாறு:-

ஆதம் (அலை), நூஹ் (அலை), இத்ரீஸ் (அலை), இப்ராகிம் (அலை), இஸ்மாயில் (அலை), இஸ்ஹாக் (அலை), யாகூப் (அலை), யூசுப் (அலை), லூத் (அலை), ஷீத் (அலை), ஸாலிஹ் (அலை), சுஅய்ப் (அலை), மூஸா (அலை), ஹாரூன் (அலை), தாவூத் (அலை),

சுலைமான் (அலை), அய்யூப் (அலை), துல்கிப்லு (அலை), யூனுஸ் (அலை), இல்யாஸ் (அலை), அல்யஸஉ (அலை), ஜகரிய்யா (அலை), யஹ்யா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்).

இவர்களில், ஆதம் (அலை), நூஹ் (அலை), இப்ராகிம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), முகம்மது (ஸல்) ஆகியோர் உறுதிமிக்க தூதர்கள் எனும் சிறப்புப்பெயரை பெற்றவர்கள்.

3) இறைத்தூதர்களிடம் இருந்து வந்த சரியான தகவல்களையும் நம்ப வேண்டும். மேலும் முகம்மது (ஸல்) அவர்களையும் நம்பி, அவர் காட்டிய வழியிலும் செயல்பட வேண்டும்.

‘(முகம்மதே) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்’. (திருக்குர்ஆன் 4:65)

4) முகம்மது (ஸல்) அவர்களை இறை வனின் இறுதித்தூதராகவும் நம்பவேண்டும்.

இதுகுறித்தும் திருக்குர்ஆன் இவ் வாறு ஆணித்தரமாக அறிவிக்கிறது:

‘முகம்மது, உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக இறைவனின் தூதராகவும், நபிமார்களில் இறுதியானவராகவும் இருக்கிறார்’. (திருக்குர்ஆன் 33:40)

‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக்கொள்ள மதீனாவில்) அலி (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்குப் பிரதிநிதியாக) நியமித்தார்கள். அப்போது அலி (ரலி) ‘குழந்தைகளையும், பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘மூஸாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில், என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்) எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை’ என்று கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி), நூல்: புகாரி).

மேற்கூறப்பட்டதின் அடிப்படையில் இறைத் தூதர்களான நபிமார்களை நம்பவேண்டும். இறை வனால் அருளப்பட்டது என்று அவர்கள் கூறிய தகவல்களையும் நம்பி அவர்களை பின்பற்றவேண்டும்.

முகம்மது (ஸல்) அவர்களையும், இறைவனின் இறுதித் தூதராக நம்பி, அவர் கூறும் அறிவுரை களையும் ஏற்று அவர் வழியில் நடைபோட வேண்டும். இவ்வாறு நடப்பது இறைநம்பிக்கையின் ஒரு பகுதி. இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிமாக ஆவார்.

Next Story