அரசர்கள் முதல் நூல்


அரசர்கள் முதல் நூல்
x
தினத்தந்தி 19 March 2019 8:08 AM GMT (Updated: 2019-03-19T13:38:55+05:30)

இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் ‘அரசர்கள்’ நூல் தொடக்கத்தில் ஒரே நூலாக இருந்தது. எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதை ‘மிலாகிம்’ என அழைத்தனர். ‘அரசாங்கம்’ என்பது இதன் பொருள்.

கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த போது வசதிக்காக இரண்டுபிரிவுகளாகப் பிரித்தனர். அப்படி மொழிபெயர்த்தவர்களை ‘செப்டுவஜின்ட்’ எனஅழைக்கிறார்கள். அதற்கு ‘எழுபது’ என்பது பொருள். எழுபது பேர் சேர்ந்து இந்த மொழிபெயர்ப்பைச் செய்ததால் இந்த பெயர் அவர்களுக்கு வந்தது.

பழைய ஏற்பாட்டு இஸ்ரயேலரின் தலைமை ஆட்சியை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஆபிரகாம் முதல் யோசேப்பு வரையிலான இறைமனிதர்களின் காலம். அடுத்தது மோசே முதல் சாமுவேல் வரையிலான இறைவாக்கினர்களின் காலம். மூன்றாவது சவுல் முதல் செதேக்கியா வரையிலான அரசர்களின் காலம். நான்காவது யோசுவா முதல் காய்பா வரையிலான குருக்களின் காலம்.

அரசர்கள் நூல், இஸ்ரயேலின் அரசர்களைப் பற்றிப் பேசுகிறது. சாலமோன் மன்னன் முதல் ஆகாப் வரையிலான மன்னர்களைப் பற்றி முதல் நூலும், ஆகாப் முதல் செதேக்கியா வரையிலான மன்னர்களைப் பற்றி இரண்டாவது நூலும் பேசுகிறது.

இந்த நூலை எழுதியவர் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மரபுப்படி இந்த நூலை எழுதியவர் எரேமியா. ஆனால் நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதை எசேக்கியேல் அல்லது எஸ்ரா எழுதியிருக்கலாம் என இறையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இறைவன் வரலாற்றை எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசர்கள் நூலின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லா அரசர்களுக்கும் சமமான முக்கியத்துவம் இந்த நூலில் கொடுக்கப்படவில்லை என்பது முதல் செய்தி.

உதாரணமாக ஓம்ரி மன்னன் இஸ்ரயேலை ஆண்டவன். வரலாறு இவரைப் பற்றி அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது. ‘நாட்டை செல்வச் செழிப்புக்கு கொண்டு சென்ற மன்னன்’ என வரலாறு இவரைக் கொண்டாடுகிறது. ஆனால் விவிலியம் இவருக்குக் கொடுத்திருக்கும் இடம் எட்டு வசனங்கள். காரணம் இவன் தேவனுடைய பார்வையில் தீமையைச் செய்தவன்.

இரண்டாம் எரோபவாம் உலக பார்வையில் நல்லாட்சி செய்த இன்னோர் மன்னன். அவனுக்கு விவிலியம் கொடுத்திருப்பது ஏழு வசனங்கள். அதே நேரம் எசேக்கியா மன்னனுக்கோ மூன்று முழு அதிகாரங்கள். எலியா எலிசா எனும் இறைவாக்கினர்களுக்கு அரசர்கள் நூலில் மூன்றில் ஒரு பங்கு இடம். அவர்கள் அரசர்கள் கூட இல்லை. இது தான் இறைவன் எழுதும் வரலாற்றின் சிறப்பம்சம்.

அரசர் இறைவன் பார்வையில் நல்லவனாக இருக்கிறாரா? உண்மைக் கடவுளை வழிபடுகிறாரா? பிற வழிபாடுகளை வெறுக்கிறாரா?, நல்ல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறாரா? நீதியும், நேர்மையும், இறையச்சமும் கொண்டிருக்கிறாரா? என்பதே கேள்வி.

அரசர்கள் நூலை அலசிப்பார்த்தால் நல்ல அரசர்கள் சுமார் 33 ஆண்டுகளும், கெட்ட அரசர்கள் 11 ஆண்டுகளும் சராசரியாய் ஆண்டிருக்கிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, இறைவனே மண்ணுலக ஆட்சியையும் நிர்ணயிக்கிறார் என்பதன் விளக்கமாக இதைக் கொள்ளலாம்.

எருசலேமின் மாபெரும் சக்கரவர்த்தியான தாவீது மன்னனின் இறுதிக்கணங்களோடு இந்தஅரசர்கள் முதல் நூல் தொடங்குகிறது. தாவீது மன்னன் இறக்கிறார். அவருக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த மகன் சாலமோன் அரசராகிறார்.

இந்த நூலில் சாலமோன் மன்னனின் நீதியும், செயல்பாடுகளும், ஞானமும், செல்வமும், ஆட்சித்திறமையும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று எருசலேம் தேவாலயம் கட்டி எழுப்பப்படும் வரலாறு. தனக்கான ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தாவீது மன்னனிடம் இறைவன் தெரிவித்தார். ஆனால் தாவீது ரத்தக்கறை படிந்த கையுடையவன் என்பதால், ஆலயத்தை அவர் கட்டவேண்டாம், அவரது மகனே கட்டவேண்டும் என இறைவன் ஆணையிட்டார். அதன்படி கடவுளுக்கான ஆலயத்தை சிறப்புறக் கட்டி முடித்தார், சாலமோன் மன்னன்.

எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறி சரியாக 480 ஆண்டுகளுக்குப் பின்பு அந்த ஆலயம் கட்டப்பட்டது. ‘அந்த ஆலயத்தில் வசிப்பேன்’ என இறைவன் சாலமோன் மன்னனுக்கு வாக்களித்திருந்தார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டின் கடைசி மன்னனாக சாலமோன் இருந்தார். அதற்குப் பின் கி.மு. 931-ல் இஸ்ரயேல் நாடு கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிந்தது. பன்னிரண்டு கோத்திரங்கள், பத்து, இரண்டு என பிரிந்துவிட்டன.

விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.

இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களினம் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்து, எப்படி பெரு வீழ்ச்சியடைந்தது எனும் சோக வரலாறே அரசர் நூலின் முடிவில் நாம் புரிந்து கொள்ளும் விஷயம். இறைவன் தனது வாக்குறுதிகளை மீறுவதில்லை. ஆனால் மனிதன் அந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வதில்லை. இந்த சிந்தனையே அரசர்களின் வாழ்க்கை வாயிலாக நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும்.

Next Story