வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்


வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 21 March 2019 9:45 PM GMT (Updated: 21 March 2019 7:07 PM GMT)

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழா கொண்டாடப்பட்டது. பால்குடம்- காவடி ஏந்தியும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சென்னை,

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேரும் நாள் முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. தமிழ் கடவுள் முருக பெருமானுக்கு ஏற்ற விசேஷ நாளான பங்குனி உத்திர விழாவையொட்டி திருச்செந்தூர் உள்பட ஆறுபடை வீடுகளும் நேற்று விழாக்கோலம் பூண்டது. சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகங்களும் நடந்தன.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை லட்சார்ச்சனை பூஜைகள் நடத்தப்பட்டது. கலசங்களுடன் ஹோமங்களும், 6 கால பூஜைகளும் செய்யப்பட்டன.

கோவிலில் நேற்று அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு சந்தனகாப்பு சூட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஏராளமானோர் அலகு குத்தி வந்து வழிபட்டனர். சிலர் 108 வேல்கள் வரை உடலில் செலுத்தி கோவிலுக்கு வந்தனர்.

பக்தர் ஒருவர் முதுகில் அலகு குத்தி சிறிய அளவிலான சாமி தேரை இழுத்து வந்தார். அப்போது ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா...’ என்ற பக்தி முழக்கம் எங்கும் ஒலித்தபடி இருந்தது. இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் முருக பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் தக்கார் ல.ஆதிமூலம், நிர்வாக அதிகாரி கே.சித்ராதேவி தலைமையில் விரிவான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருகிறது.

பங்குனி உத்திர விழாவை தொடர்ந்து, தெப்பத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாத நிலையில், அங்குள்ள நீராழி மண்டபத்தில் சிறிய தொட்டி கட்டப்பட்டு அதில் தண்ணீர் விடப்பட்டு, இன்று இரவு 7 மணிக்கு முருக பெருமான் எழுந்தருளுகிறார்.

முன்னதாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு நீண்ட வரிசையில் வந்தனர். அப்போது கோவில் முன்பு போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வாகனத்தை அகற்றக்கோரி பக்தர்கள், போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் போலீசார் அதை ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் கூட்டம் மிகுதியாக, சிரமமடைந்த பக்தர்கள் அந்த போலீஸ் வாகனம் மீது சாய்ந்து விழ தொடங்கினர். இதையடுத்து அந்த வாகனம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

Next Story