சரமை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்


சரமை: பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்
x
தினத்தந்தி 2 April 2019 8:45 AM GMT (Updated: 2 April 2019 8:45 AM GMT)

ராமாயணம் என்னும் புகழ்பெற்ற இதிகாச காவியம் முழுமை அடைவதற்காக படைக்கப்பட்ட அல்லது விதியின் வழி நடத்தப்பட்ட பெண்கள் சிலரைப் பற்றி, இந்தத் தொடரின் மூலமாக அறிந்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ராவணனின் தம்பி விபீஷணனின் மனைவி சரமைப் பற்றிப் பார்ப்போம்.

அன்பும், பணிவும், எளிமையும், நிறைந்தவள்.

சீதையிடம் அன்புடன், மரியாதையுடன்

நடக்கும்படி தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள்.

தர்மத்தின் பக்கம் இருக்கும்படி

தன் கணவனை வழி நடத்துகிறாள்.

“தர்மம் எங்கு உள்ளதோ அங்கு நீங்கள் இருக்க வேண்டும்.”

சரமையின் ஆலோசனையை ஆழ்ந்து கேட்டான் விபீஷணன்.

நீதிக்கும், நியாயத்துக்கும் முக்கியத்துவம் தரும் சரமை, தன் கணவனை ராமனிடம் சென்று அடைக்கலமாகச் சொன்னாள்.

“ஒரு பெண்ணை அவள் கணவனிடம் இருந்து பறிப்பது மகா பாவம். பத்தினியின் சாபம் அனைவரையும் அழித்து விடும். ஒரு தவறைத் தட்டிக் கேட்காமல் இருப்பதும் கூட, அந்தத் தவறுக்கு துணை போவது போல்தான். ரத்த பந்தம் என்றாலும் ராவணனுக்கு அறிவுரை சொல்லி மிகப் பெரும் பாவத்தில் இருந்து அவரைக் காக்க வேண்டியது சகோதரர்களின் கடமை.”

விபீஷணன் தயங்கினான். உலகின் பழிச் சொல்லுக்குப் பயந்தான்.

“நாளை உலகம் என்னைத் தூற்றுமே.”

“தர்மத்திற்கு எதிராக நடப்பதை விட தூற்றுதல் ஒன்றும் அசிங்கம் இல்லை”

சரமை மெலிதான குரலில் பேசினாலும் அதில் உறுதி இருந்தது. தன் கணவன் அநியாயத்திற்குத் துணை போகக் கூடாது என்று விரும்பினாள்.

கந்தர்வ நாட்டை ஆட்சி செய்த சைலூஷன் என்ற கந்தர்வனின் மகள்தான் சரமை. சிறுமியாக இருந்தபோது ஒரு முறை சரமையும் அவளது தாயும் மானசம் என்ற ஏரியில் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரியில் நீர்ப் பெருக்கு ஏற்பட்டது. உடனே ‘நீரே பெருகாதே’ என்ற அர்த்தத்தில் “சரோமா வர்த்தபஸ்வ” என்று சிறுமி கூவினாள். அதனால் அவளுக்கு ‘சரமை’ என்ற பெயர் விளங்கியது. பண்பில் சிறந்து விளங்கிய அவளைப் பற்றிக் கேள்விப்பட்ட ராவணன், தன் தம்பி விபீஷணனுக்கு சரமையைத் திருமணம் செய்து வைத்தான்.

அண்ணன் மேல் மரியாதையும் மதிப்பும் கொண்டவன்தான் விபீஷணன். சீதையைக் கடத்தி வந்தபோது ஒரு நியாய உணர்வுடன் ராட்சச வேந்தனுக்கு அறிவுரை சொன்னான். ஆனால் ஆணவ மிகுதியால் அவன் சொல்லை ராவணன் கேட்கவில்லை.

‘அநீதியுடன் சேர்வதை விட தர்மத்தின் பக்கம் நில்’ என்கிறாள் சரமை.

விபீஷணன் அவளை யோசனையுடன் பார்த்தான். மனம் அமைதியாக இருந்தது.

“உலகம் எப்போதும் உண்மை அறியாமல் அவரவர் மனப் போக்கின்படிதான் பேசும். எல்லாமே கடந்து போகும் விஷயம். நீங்களோ, அவர்களோ யாரும் நிலையானவர்கள் இல்லை. ஆனால் இந்த சம்பவம் நிலைத்து நிற்கும். ‘விபீஷணன் அதர்மத்திற்குத் துணை போனான்’ என்று எழுதப்படுவதை விட, ‘காட்டிக் கொடுத்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றான்’ என்று குறிப்பிடப்படுவீர்கள்.”

இதமாகப் பேசினாள் சரமை.

“பிரபோ உங்கள் எதிர்காலத்தைச் செதுக்கும் உளி உங்கள் கையில்தான் இருக்கிறது. சிற்பம் அழகாக அமைவதோ, உடைந்து போவதோ உங்களைப் பொறுத்தே அமையும். உங்கள் வாழ்க்கை அமைதியும், திருப்தியுமாக அமைவது உங்கள் எண்ணங்களைப் பொறுத்தது.”

விபீஷணன் அன்புடன் சரமையைப் பார்த்துப் புன்னகைத்தான்.

“உன் எண்ணம் எனக்குப் புரிகிறது சரமை. உன் கணவன் தர்மத்தின் பக்கம் நின்று செயல்பட வேண்டும் என்கிறாய்.?”

“ஆம். ஸ்ரீராமன் மனித உருவில் அவதரித்த பரம்பொருள். சீதை தெய்வப்பிறவி. அவளை முன்னிட்டு இலங்கை நகரம் அழிவது உறுதி. ஏற்கனவே ஒரு வானரம் வந்து இலங்கையை எரித்தது நினைவில் இல்லையா?”

“சரமை! மனிதரின் அழகு என்பது உருவத்தில் இல்லை. மனதில், சில நேரங்களில் வார்த்தைகளில். இன்று நீ பேரழகியாக எனக்குத் தென்படுகிறாய்.”

“உண்மைகள் எப்போதும் அழகாகத்தான் இருக்கும். உங்கள் பார்வைக்கு நான் எப்போதும் அழகாய் இருக்க என்னை ஆசீர் வதியுங்கள்” சரமை தன் கணவனை வணங்கினாள்.

விபீஷணன் திருப்தியுடன் ஸ்ரீராமனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றான்.

மனைவி என்பவள் கணவனின் தோழி, மதி மந்திரி, நல் வழிகாட்டி. அதைத் தாண்டி சரமை, தன் கணவனுக்கு தர்மத்தை உபதேசிக்கும் குருவாகவும் இருந்தாள்.

விபீஷணன் ‘என்ன செய்வது?’ என்று குழம்பும் போதெல்லாம், ‘இதுதான் தர்மம், நேர்மை’ என்று உபதேசித்தாள். விபீஷணனும் தன் மனைவியின் கருத்துக்கு மதிப்பளித்தான். அவளின் சொல் கேட்டு செய்த காரியம் வெற்றி அடைந்தால் “சரமை நீ சொன்னபடி செய்தேன். எனக்கு வெற்றி. நன்றி பெண்ணே” என்று மனதாரக் கூறினான்.

மனைவியை மதிக்கும் கணவனாக, கணவனின் நலமே தன் வாழ்வு என நினைக்கும் பெண்ணாக அவர்கள் இருவரும் உண்மையான காதலில் கட்டுண்டு கிடந்தார்கள். அதனால் அவர் களின் வாழ்க்கை இனிமையாக இருந்தது.

சரமை தன் மகள் திரிசடையை, சீதைக்குத் துணையாக இருக்கும்படி அனுப்பி வைத்தாள்.

“உன் சொல்லும், செயலும் சீதைக்கு ஆறுதல் அளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும் திரிசடை. உன் சந்தோஷம் என்பதை விட, பிறருக்குச் சந்தோஷம் என்ற விதத்தில் நடந்து பார். உனக்கு என்றென்றும் சந்தோஷம்தான்” என்று மகளுக்கு எப்போதும் அறிவுரை வழங்குவாள்.

திரிசடை அம்மாவின் மறுபதிப்பாக இருந்தாள்.

எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் தன் கணவன் - குழந்தைகளுக்கு வேண்டியதை, தானே கவனித்துச் செய்வாள், சரமை. அவளிடம் உயர்ந்த பக்தி இருந்தது. பணிவும், அன்பும் இருந்தது. அனைவரையும் நேசிக்கும் குணமும், உதவும் நெஞ்சமும் இருந்தது. அதனால் அவள் வீட்டில் வளமை, செழுமை, மதிப்பு, கவுரவம் இருந்தது.

ஒரு இல்லத்தின் பெண் சகல நற்குணங்களுடன் இருந்தால், அங்கு சகல சவுபாக்கியங்களும் இருக்கும் என்பது பிரபஞ்ச விதி. அந்த விதி அங்கு மிக அழகாகச் செயல்பட்டது.

சரமை போர்க்களத்து நிகழ்ச்சிகளை திரிசடை மூலமாக, சீதைக்கு சொல்லி விடுவாள். சீதையை வசப்படுத்த ராவணன் செய்யும் மாயாஜாலங்களை எல்லாம் சரமைதான் எடுத்துச் சொல்லி சீதையைத் தேற்றுவாள்.

மாயையில் சிறந்த ஒரு அரக்கனை அழைத்த ராவணன், “ராமனின் தலையையும், கோதண்ட வில்லையும் சீதைக்கு காட்டு” என்று ஆணையிட்டான். அதன்படியே அவன் தன் மாயை மூலமாக அவற்றை சீதைக்கு காண்பித்தான்.

“என் சேனைத் தலைவன் பிரகத்தன், நேற்று இரவு கடல் கடந்து சென்று ராமனைக் கொன்று அவனின் தலையையும், வில்லையும் கொண்டு வந்துள்ளான். இனி நீ அவனுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. என் துனைவியருக்கெல்லாம் தலைவியாக நீ ஆகு” என்று ராவணன் கூறுகிறான்.

சீதை விக்கித்து நிற்கிறாள். கைகால் இற்று, மூர்ச்சையாகிறாள். அதற்குள் மந்திரிகள் சபை ராவணனுக்காக காத்திருக்கிறது. உடனே வர வேண்டும் என்று அவசர அழைப்பு வர, ராவணன் அங்கிருந்து கிளம்புகிறான். அவன் சென்றதும் சீதை மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறாள்.

அப்போது சரமை அங்கு வருகிறாள்.

“தாயே! நீயே லோகமாதா. மாயையில் வல்லவன் ராவணன். அதை அறிந்தும் நீ மயக்கம் கொள்ளலாமா? ஸ்ரீராமன் யாராலும் அழிக்கப்பட முடியாதவர். உலகின் தீமையை அழித்து, தர்மத்தை நிலை நாட்டப் பிறந்தவர். அவரை யாராலும் அழிக்க முடியாது. இது ராவணனின் மாயை. ஸ்ரீராமச்சந்திர பிரபு நலமாக இருக்கிறார்” என்று ஆறுதல் கூறுகிறாள்.

வெற்றி அடைந்து ராமனைச் சேர்ந்த பிறகு சீதை, “அசோக வனத்தில் என் தாய் போல் எனக்கு ஆறுதலும் பாதுகாப்பும் அளித்தவர்கள்” என்று சரமை குறித்து குறிப்பிடுகிறாள்.

சரமையின் குணமே அவளை சீதையின் பால் ஈர்க்கிறது. கனிவும், அன்பும் நிறைந்த அவளின் செய்கைகள், தர்மமே முக்கியம் என்ற அவள் கொள்கை ஆகியவை சீதையின் மனதில் அழியாத ஒரு இடத்தைப் பெற்றுத் தருகிறது. விபீஷணன் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் அவனை நல்ல வழியில் செலுத்திய சரமையும் நினைவு கூரப்படுகிறாள்.

மனைவியானவர் கணவன் செய்யும் தவறுகளைத் திருத்தி, அவனின் நல்ல எண்ணங்களுக்கு துணை நிற்க வேண்டும். உடலும் உயிருமாக இருக்க வேண்டும் என்பதற்கு சரமை நல்ல உதாரணம்.

-தொடரும்.

Next Story