பெற்றோர்களை மதிக்க வேண்டும்


பெற்றோர்களை மதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 April 2019 12:15 AM GMT (Updated: 2019-04-04T18:00:45+05:30)

இந்த நவீன யுகத்தில் வாழ்கின்ற மக்களிடையே பெற்றோர்களை மதிப்பதும் அவர்கள் சொற்கேட்டு வளர்வதும் மிகக் குறைந்து விட்டது என்றே கூறலாம்.

‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்று பழஞ்சொல் உண்டு. பண்டிகை நாட்களில், பிறந்த நாளில் பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது என்றால் அது மிகையாகாது.

பெற்றோர்களை மதிக்க வேண்டும் என்கிற இந்த விஷயத்தைக் குறித்து திருமறை இவ்வாறாகக் கூறுகிறது. ‘உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (யாத்திராகமம் 20:12), மேலும், ‘உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும் உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக’ (எபேசியர் 6:2,3) என்றும் வேதம் கூறுகிறது.

ஆக, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் தீர்க்காயுசோடும், ஆசீர்வாதத்தோடும் வாழ்வதற்கு அவன் தன் தகப்பனையும், தாயையும் மதித்து நடக்க வேண்டும். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் தன் பெற்றோர்களை மதிக்கத் தவறிய மாந்தர்கள் எத்தனை? எத்தனை?

தங்கள் வேலை ஸ்தலங்களில் தங்கள் மேலதிகாரிகளை கனம் பண்ணுகின்றனர், தங்கள் அப்பார்ட்மென்டில் அருகில் குடியிருக்கும் குடும்பத்தினரை கனம் பண்ணுகின்றனர், அதிலும் குறிப்பாக அவர் ஒரு உயர்ந்த அதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ இருந்தால் மிகவும் அதிகமாக கனம் பண்ணுகின்றனர்.

ஆனால் தன்னைப் பெற்றெடுத்து ஆளாக்கி தன் ரத்தத்தை பாலாக ஊட்டிய தாயையும், தன் உழைப்பை ரத்தமாக ஊற்றிய தகப்பனையும் மதிக்கத் தவறிய பிள்ளைகள் இந்த தேசத்தில் மலிந்து கிடக்கின்றனர் என்றால் மிகை யாகாது.

திருமறை மிகவும் அழகாக ஒரு மகன் தன் பெற்றோரிடத்தில் எப்படி ஜீவிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கிறது. ‘உன்னை பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது சென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே’ (நீதிமொழிகள் 23:22)

இன்றைக்கு இப்படி ஜீவிக்கின்ற பிள்ளைகள் எத்தனை பேர். நம் முடைய பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இல்லாத ஒரு புதிய பழக்கம் இன்றைய காலங்களில் கொடிகட்டிப் பறக்கிறது. அது என்னவென்றால் முதியோர் இல்லம். இந்த முதியோர் இல்லத்திலே தங்கள் தகப்பனையும், தாயையும் கொண்டு போய் சேர்த்து விட்ட பிள்ளைகள் ஏராளம்.

நாங்கள் இருவரும் வேலைக்கு செல்கிறோம், ஆகவே அங்கே கொண்டுபோய் பத்திரமாய் இருக்கும்படி சேர்த்து விடுகிறோம் என்கின்றனர். தன் மகனைப் பார்க்க மாட்டோமா? தன் பேரப்பிள்ளைகளைப் பார்க்க மாட்டோமா? என்று ஏக்கப் பெருமூச்சோடு, கலங்கின கண்ணீர்களோடு வாழும் பெற்றோர்கள் எத்தனை? எத்தனை?

இவர்கள் முதியோர் இல்லத்தில் கொடுக்கும் பணத்திலே ஒரு வேலைக்காரியை அல்லது வேலைக்காரனை சம்பளத்துக்கு அமர்த்தி வைத்து கொள்ளலாமே? இவர்களால் இயலாது காரணம் இவர்கள் நெஞ்சங்கள் கல்லாகி விட்டன.

இவர்களைக் குறித்து வேதம் இப்படியாக கூறுகிறது, ‘தன் தகப்பனைக் கொள்ளையடித்து தன் தாயைத் துரத்திவிடுகிறவன் இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்’ (நீதிமொழிகள் 19:26).

இப்படிப்பட்டவர்களுக்கு பெற்றோர்களுடைய சொத்து வேண்டும். ஆனால் பெற்றோர் வேண்டாம். இப்படி வாழ்கிறவர்களுக்கு வேதம் ஒரு எச்சரிக்கையும் விடுகிறது. ‘மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ (கலாத்தியர் 6:7)

ஆம், இன்றைக்கு நாம் பெற்றோருக்கு செய்வது நாளை நமக்கும் நடக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் பெற்றோர்களை மதிக்க கற்று கொள்வோம். அப்பா சாப்பிட்டிங்களா?, அம்மா சாப்பிட்டிங்களா? என்றாவது ஒரு வார்த்தை கேட்க மாட்டானா என் பிள்ளை என்று ஏங்கும் பெற்றோர் எத்தனை? அவர்களோடு பேசுவோம்.

செல்போனிலும், கம்ப்யூட்டரிலும், முகநூலிலும், வாட்ஸ்ஆப்பிலும், தொலைக்காட்சியிலும் நேரத்தை செலவிடுகிற மக்களே, உங்களை பெற்றெடுத்த தகப்பனோடு, தாயோடு நேரத்தை செலவிடுகின்றீர்களா என்று சற்றே யோசித்துப் பாருங்கள். தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறவர்களே உங்களுக்கும் ஒரு முதியோர் இல்லத்தை இறைவன் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதை மறவாதேயுங்கள்.

‘தங்கள் தகப்பனைப் பரிகாசம்பண்ணி, தாயின் கட்டளைகளை அசட்டை பண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்’ (நீதிமொழிகள் 30:17) என்கிறது வேதம்.

இந்த கட்டுரையை வாசிக்கும் நாம், நம் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணி இறைவன் அருளும் ஆசியைப் பெற்றுக்கொள்வோம். இதை வாசிக்கின்ற ஒரு நபராவது தன் பெற்றோர்களை முதியோர் இல்லத்திலிருந்து அழைத்து வந்து குடும்பமாய் அவர்களுக்கு பாசமழை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

முதியோர் இல்லங்கள் மூடப்படட்டும், பிள்ளைகளின் உள்ளங்கள் திறக்கப்படட்டும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

- சகோ சி. சதீஷ், வால்பாறை

Next Story