ஆன்மிகம்

மனபலம் வழங்கும் மாருதி வழிபாடு + "||" + Vayupputran permits in the line of gods.

மனபலம் வழங்கும் மாருதி வழிபாடு

மனபலம் வழங்கும் மாருதி வழிபாடு
வரம் தரும் தெய்வங்களின் வரிசையில் வாயுபுத்திரன் அனுமனும் ஒருவா் ஆவார்.
நாம் ஒருவரை, ஒரு ஊருக்குச் சென்று ஏதேனும் வேலையை முடித்து வரச் சொல்வோம். அவர் போய் வந்த பிறகு “என்ன நடந்தது?” என்று நாம் கேட்கும் பொழுது, ஒரு சிலர் “வளவள” என்று வர்ணித்துக் கொண்டே செல்வார்கள். சொல்ல வேண்டிய விஷயத்தை கடைசியாகத்தான் சொல்வர். ஆனால், ஒரு சிலரோ ரத்தினச் சுருக்கமாகப் பேசுவர்.

சீதையை தேடிச் சென்ற அனுமன், அசோகவனத்தில் அவரைக் கண்டார். சீதையிடம் ராமன் விரைவில் வந்து தங்களை மீட்பார் என்று கூறிவிட்டு, ராமனின் இருப்பிடம் வந்தார். அனுமனைப் பார்த்த ராமர், “சீதையைப் பற்றி ஏதாவது தெரிந்ததா?” என்பார்.

அதற்கு அனுமன் “கண்டேன் அந்த கற்பினுக்கு அணியை” என்று சுருக்கமாக முடிப்பார். சீதை எப்படி இருக்கிறாளோ என்று நினைத்த ராமனுக்கு, அனுமன் ரத்தினச் சுருக்கமாகச் சொல்லும் வாக்கியம் அதுதான்.

முதலில் அவளைக் கண்டேன் என்று சொல் கிறார். அவள் கற்போடு இருக்கிறாள் என்பதையும் உரைக்கிறார். ராமன் எதை எதிர்பார்த்தானோ அதைச் சொல்லியதால் தான் அனுமன் சிறப்புடையவராக ஆனார்.

அஞ்சிலே ஒன்று பெற்றான்!
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று ஆறாக,
ஆரியர்க் காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்!
அவன் நம்மை அளித்துக் காப்பான்!
என்பது அனுமனுக்குரிய துதிப்பாடல்.

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் வர்ணித்து அதன் மூலமாகப் பிறந்த ஆற்றல் மிக்க அனுமனை வழிபட முன்னோர்கள் வழி வகுத்தனர். பஞ்ச பூதங்களில் ஒன்றான வாயுவின் புதல்வன் தான் அனுமன். சீதையைக் கண்டுபிடித்து ராமனுக்கு ஏற்பட்ட துயரத்தைப் போக்கியதால் “சொல்லின் செல்வன்” என்ற பட்டத்தைப் பெற்றார். அப் படிப்பட்ட சொல்லின் செல்வனை நாம் வணங்கினால் நமக்கு செல்வாக்கும், சொல்வாக்கும் மேலோங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுகிற ஆற்றல் பிறக்கும். அனுமன் ஜாதகத்தை வைத்து வழிபட்டாலும் தடைகள் அகலும்.

‘ராமஜெயம் ஸ்ரீ ராமஜெயம் அதை நம்பிய பேருக்கு ஏது பயம்?’ ஏன்று சொல்லியவர் அனுமன். அனுமனுடைய நட்சத்திரம் மூலம். தனுசு ராசி. மேஷ லக்னம். லக்னத்திலேயே செவ்வாய் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.

5-ல் குரு வீற்றிருந்து சந்திரனையும், லக்னத்தையும் பார்க்கிறார். 10-ல் சனி சொந்த வீட்டில் இருக்கிறார். எனவே தான் பலசாலியாகவும், பிரம்மச்சாரியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், ஐஸ்வரியம் தருபவராகவும், மலையைத் தூக்கும் மாருதியாகவும் விளங்குகிறார்.

ராமதூதன் என்று வர்ணிக்கப்படும் அனுமனை வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கும்.

சஞ்சீவி மலையை அனுமன் சுமந்து வரும் பொழுது, ஏழரைச் சனி அவருக்கு ஆரம்பமாகியது. சனிபகவான் அனுமனைப் பிடிக்க வந்தார். சஞ்சீவி மலையைக் கீழே இறக்கி வைத்திருக்கும் சமயம் பார்த்து அனுமன் தலைமீது சனி ஏறி அமர்ந்து கொண்டார்.

திடீரென அனுமன் மலையைத் தூக்கி தன் தலையில் வைத்துக் கொண்டு பறக்கத் தொடங்கினார். மலைக்கும், அனுமன் தலைக்கும் இடையில் சிக்கிய சனி தன்னை விடுவிக்குமாறு வேண்டினார். அப்பொழுது “என்னைத் தொழுது வழிபடும் பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது” என்று அனுமன் கேட்டுக்கொண்டு, சனியை விடுவித்ததாக புராணங்கள் சொல்கின்றன.

எனவே மலையைச் சுமந்து செல்லும் அனுமனை நாம் வழிபட்டால் நலமும், வளமும் நமக்குக் கிடைக்கும். அனுமன் வீற்றிருந்து அருள் வழங்கும் ஆலயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. நாமக்கல் ஜெய்அனுமன், சுசீந்திரம் விஸ்வரூப ஆஞ்சநேயர், மதுரை வால் சுருட்டி ஆஞ்சநேயர், சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் வாலில் மணி கட்டிய வரம் தரும் அனுமன், வைரவன்பட்டியில் ராமர் வழிபட்ட தோற்றத்தில் ஜெய அனுமன், காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் ஸ்ரீ சிவ ஆஞ்சநேயர், பொன்னமராவதி அருகில் உள்ள வேகுப்பட்டியில் விஸ்வரூப ஆஞ்சநேயர் போன்றவை சிறப்பு வாய்ந்த தலங்கள் ஆகும்.

உங்கள் வயதிற்கேற்ற வெற்றிலை மாலை அணிவித்தும், வடை மாலையை யோகபலம் பெற்ற நாளில் அணிவித்தாலும் தடைகள் அகன்று தன லாபம் பெருகும். கோரிக்கையை நினைத்துக் கொண்டு ஸ்ரீராமஜெய மாலையை அணிவித்தால் காரியங்கள் நிறைவேறும். வாயுபுத்திரனை சனிக்கிழமை அல்லது மூலம் நட்சத்திரமன்று முறைப்படி வழிபட்டால் வரமும் கிடைக்கும், வளமும் பெருகும்.

சிவல்புரி சிங்காரம்