ஆன்மிகம்

ராமநவமி நன்மைகள் வழங்கும் ராமநவமி + "||" + Ramanavami for the benefits of 13-4-2019 Ramanavami

ராமநவமி நன்மைகள் வழங்கும் ராமநவமி

ராமநவமி நன்மைகள் வழங்கும் ராமநவமி
13-4-2019 ராமநவமி நன்மைகள் வழங்கும் ராமநவமி
ராமாயணத்தின் நாயகனாகவும், மனித உருவில் வாழ்ந்த தெய்வமாகவும் போற்றப் படுபவர், ராமபிரான். இவர் சித்திரை மாதம் வளர்பிறையான நவமி திதியில் பிறந்தவர். அதைத் தான் ‘ராம நவமி’ என்ற பெரும் விழாவாக பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். எந்த ஒரு காரியத்தை அஷ்டமி மற்றும் நவமி திதிகளில் செய்யாமல், மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் அந்த இரண்டு திதிகளும் மிகவும் வருத்தம் கொண்டன. அவை தங்களின் கவலையை, மகா விஷ்ணுவிடம் சென்று வெளிப்படுத்தின.

“இறைவா! நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை மட்டும் மற்ற திதிகளைப் போல் பார்க்காமல், மக்கள் ஒதுக்கி வைக்கிறார்களே. எங்களுக்கு இதில் இருந்து விமோசனம் இல்லையா?” என்றனர்.

அதைக் கேட்டு மனம் இரங்கிய மகாவிஷ்ணு, “மக்கள் உங்கள் இருவரையும் போற்றித் துதிக்கும் நாள் ஒன்று வரும். நான் உலக நன்மைக்காக பூமியில் அவதரிக்கும் போது, உங்களின் இந்த வருத்தம் மறைந்து போகும்” என்று அருள்புரிந்தார்.

அதன்படியே தசரதர்- கவுசல்யா தம்பதியருக்கு, நவமி திதியில் ராமனாக அவதரித்தார், மகாவிஷ்ணு. அதே போல் மற்றொரு அவதாரத்தில் வசுதேவர்-தேவகி தம்பதியருக்கு மகனாக அஷ்டமி திதியில் கிருஷ்ணராக பிறந்தார். இந்த இரண்டு அவதாரங்களின் மூலமாக, அஷ்டமி மற்றும் நவமி திதிகள் பெரும் பேறு பெற்றன. இறைவனின் அவதாரங்கள் உதித்த அந்த இரண்டு நாட்களையும் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நவமியில் பிறந்த ராமபிரான், இலங்கையை ஆட்சி செய்து வந்த ராவணனை வதம் செய்வதற்காகவே அவதரித்தவர். சிவபெருமானிடம் இருந்தும், பிரம்மதேவனிடம் இருந்தும் பல சக்திவாய்ந்த வரங்களைப் பெற்றிருந்த ராவணன், அந்த வரங்களைக் கொண்டு, முனிவர்களையும், தேவர்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். தன்னை எதிர்த்தவர்கள் அனைவரையும் தயவு தாட்சன்யம் இன்றி துன்புறுத்தினான்.

கர்மவினையின் பயனாக, ராம அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக ராமபிரான் வனவாசம் செல்ல நேர்ந்தது. அவரோடு சீதையும், லட்சுமணரும் உடன் சென்றனர். வனத்தில் இருந்தபோது, சீதையின் அழகு பற்றி அறிந்த ராவணன், அவளைக் கடத்திச் சென்றான். இதனால் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் வந்தது. வானர வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு, கடலில் பாலம் அமைத்து, இலங்கை சென்ற ராமர், ராவணனை அழித்து சீதையை மீட்டார். அதர்மம் அழிக்கப்பட்டு, தர்மம் நிலைநாட்டப்பட்டது.

ராமபிரான் அவதரித்த நாளில் விரதம் இருப்பது மிகவும் நன்மை அளிக்கக்கூடியது. இந்த விரதமானது, இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதம் வளர்பிறை பிரதமை திதியில் இருந்து நவமி திதி வரை ஒன்பது நாட்களுக்கு கடைப் பிடிக்கும் விரதத்திற்கு ‘கர்ப்போஸ் தவம்’ என்று பெயர். நவமி திதியில் இருந்து அடுத்துவரும் ஒன்பது நாட் களுக்கு கடைப்பிடிக்கப்படுவது ‘ஜன்மோதீஸவம்’ என்று பெயர்.

விரதம் இருப்பதற்கு முன்தினம் வீட்டை சுத்தம் செய்துவிட வேண்டும். விரத தொடக்க நாள் முதல், ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். ஒன்பது நாட்களும் ராமபிரானுக்கு சர்க்கரைப் பொங்கல், பாயசம் என நைவேத்தியம் படைத்து வழிபடுவது சிறப்பு. ராமருக்கு துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வணங்குங்கள். ஒன்பது நாட்களும் நைவேத்தியம், மாலை அணிவிக்க முடியாதவர்கள், ராமநவமி அன்று மட்டுமாவது அதைச் செய்வது நல்லது. இந்த விரதத்தை மேற்கொள்வதன் மூலம் நினைத்த காரியங்கள் கைகூடும். செல்வம், புகழ் உள்ளிட்ட எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.