பைபிள் கூறும் வரலாறு


பைபிள் கூறும் வரலாறு
x
தினத்தந்தி 9 April 2019 5:44 AM GMT (Updated: 9 April 2019 5:44 AM GMT)

திருவிவிலியத்தின் பதினைந்தாவது நூலாக இருக்கிறது எஸ்ரா.

‘எஸ்ரா’ என்பதற்கு ‘கடவுள் உதவுகிறார்’ என்பது பொருள். பத்து அதி காரங்களோடும், இருநூற்று எண்பது வசனங்களோடும், இருபத்தேழாயிரத்து நானூற்று நாற்பத்தோரு வார்த்தைகளோடும் இந்த நூல் உருவாகி யிருக்கிறது.

இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையைப் பார்த்தால் அடிப்படையில் ஒரு விஷயத்தை நாம் கற்றுக்கொள்ளலாம். எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை நாடி வந்தார்களோ அப்போதெல்லாம் வளமும், வெற்றியும் அவர்கள் வசம் வந்து விடுகிறது. எப்போதெல்லாம் அவர்கள் கடவுளை விட்டு விலகிச் செல்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுடைய வாழ்க்கை அழிவுக்குள் தள்ளப்படுகிறது.

கடவுளின் தண்டனை மக்களிடம் வரும்போது, படிப்படியாக வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் எச்சரிக்கை வருகிறது. அழிவு வரும் என சொல்லப்படுகிறது. மனம் மாறாவிடில் ஏதோ எதிரிகள் வந்து நாட்டை முற்றுகையிட்டு செல்வங்களை எல்லாம் கொண்டு செல்கின்றனர்.

அப்போதும் மனம் மாறாவிடில் பசி, பஞ்சம் போன்றவை வந்து வாட்டுகின்றன. அப்போதும் கண்டுகொள்ளாவிடில் நோய்கள் வருகின்றன, உடல்நிலை வலு விழக்கிறது. அப்போதும் மனம் திருந்தாவிடில் வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்தே அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.

அப்படி இரண்டு முக்கியமான ‘வெளியேற்றல்கள்’ நடக்கின்றன. ஒன்று வட நாடான இஸ்ரயேல் அசீரியர்களின் கையில் பிடிபட்டு கொண்டு போகப்பட்ட நிகழ்வு. அது கி.மு. 721-ல் நடந்தது. அதன் பின் சுமார் 140 ஆண்டுகளில் இரண்டாவது நாடு கடத்தல் நடந்தது. இப்போது வெளியேறியது தென் நாடான யூதா, பாபிலோனியர்களின் வசம் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள்.

பாபிலோனியர்கள் யூதாவை கைப்பற்றியதும் மக்கள் அனைவரையும் ஒரே யடியாக பாபிலோனுக்கு இழுத்துச் செல்லவில்லை. அதை மூன்று கட்டமாகச் செய்தார்கள். மூன்று நிகழ்வுகளின் போதும் நெபுகத்நேசரே பாபிலோனிய மன்னராக இருந்தார். முதலில் கி.மு. 606-ல் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அவர்கள் கைதிகளாக இழுத்துச் சென்றனர்.

அரச பரம்பரை இல்லையேல் யூதாவை தாங்கள் ஆளலாம் என்பது அவர்களின் எண்ணம். அந்த கூட்டத்தில் சென்ற ஒருவர் தான் விவிலியத்தின் சிறப்பு மிக்க மனிதர்களில் ஒருவரான தானியேல்.

ஆனால், அந்த திட்டம் பலிக்கவில்லை. யூதா மக்கள் பாபிலோனியரின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். எனவே, இரண்டாவதாக நாட்டிலுள்ள வியாபாரிகள், கலைஞர்கள் போன்றவர்களை இழுத்துச் சென்றனர். நாட்டில் வளமை இல்லையேல் சுதந்திர உணர்வு மங்கிவிடும் எனும் சிந்தனையே அதன் காரணம். கி.மு. 597-ம் ஆண்டு அது நிகழ்ந்தது. அந்த கூட்டத்திலும் மிக முக்கியமான ஒரு நபர் இடம்பெற்றிருந்தார். அவர் தான் எசேக்கியேல்.

இருந்தாலும், மக்கள் கலக மனநிலையுடனே இருந்தனர். எனவே மூன்றாவது முறையாக கி.மு. 587-ல் முழுமையான அழிவும், வெளியேற்றலும் நடைபெற்றது. அப்போது தான் எருசலேம் தேவாலயம் தரைமட்டமானது. யூதா வெற்றிடமானது. இறைவாக்கினர் எரேமியா உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி வெளியேறுதல் நிகழ்ந்தது.

மூன்று முறை வெளியேற்றப்பட்ட இஸ்ரயேல் மக்கள் மூன்று குழுக்களாக பின்னர் நாடு திரும்பினர். இரண்டாவது குழுவுடன் நாடு திரும்பியவர் தான் எஸ்ரா, இந்த நூலின் ஆசிரியர். முதலில் ஐம்பதாயிரம் பேர் திரும்பினர். ஆனால் எஸ்ராவுடன் திரும்பியவர்கள் வெறும் 1800 பேர் தான். ஆனால் அவர்கள் எல்லோரும் லேவியர்கள். எஸ்ரா குருவாக இருந்ததால் லேவியர்களை அழைத்து வந்து நாட்டை மீண்டும் ஆன்மிக வழியில் கொண்டு வரவேண்டும் என விரும்பினார்.

மூன்றாவது குழுவுடன் திரும்பியவர் தான் நெகேமியா. பைபிளின் அடுத்த நூலை எழுதியவர் அவர் தான். இந்த மூன்று திரும்புதல்களும் மூன்று சிந்தனைகளின் அடிப்படையில் அமைந்தன.

முதலாவது குழுவின் வருகை சமூக வாழ்க்கையை மீண்டெடுக்கும் முயற்சி, இரண்டாவது குழு ஆன்மிக பலவீனத்தை சரி செய்யும் முயற்சி. மூன்றாவது, கட்டுமானங்களை சரிசெய்து நாட்டை வலுப்படுத்தும் முயற்சி.

நாடு திரும்புவதற்கு பலர் விரும்பவில்லை என்கிறது வரலாறு. சுமார் 1500 கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பாபிலோனுக்குச் சென்ற மக்கள் அங்கே வர்த்தகங்களில் ஈடுபட்டு செழிக்க ஆரம்பித்திருந்த கணம் அது. அவர்களுக்கு திரும்புதல் என்பதே தண்டனையாய் தெரிந்தது.

எஸ்ரா நூல் முதல் இரண்டு நாடு திரும்புதலைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்கிறது. எபிரேயம் அராமிக் எனும் இரண்டு மொழிகளில் இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார் எஸ்ரா. நாடு திரும்புதலும், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளும் இந்த நூலின் முக்கிய அம்சங்கள் எனலாம்.

நாடு திரும்பிய மக்கள் மீண்டும் பாவ வாழ்க்கைக்குத் திரும்பிய சோக நிகழ்வு களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. எழுபது ஆண்டுகள் அன்னிய நாட்டில் வாழ்ந்தாலும் மக்கள் திரும்பி வந்தபின் இறைவனைப் பற்றிக்கொள்ளவில்லை. பாவத்தைப் பற்றிக் கொண்டார்கள்.

இந்த நூல் வரலாற்றையும், ஆன்மிகத்தையும் ஒருசேர நமக்கு அள்ளித்தரும் அற்புதமான ஒரு நூல். ஒரு பரபரப்பான நாவலைப் போல இது சுவாரசியமூட்டுகிறது.

சேவியர்


Related Tags :
Next Story