தேரில் உலா வரும் தஞ்சை பெருவுடையார்


தேரில் உலா வரும் தஞ்சை பெருவுடையார்
x
தினத்தந்தி 12 April 2019 7:43 AM GMT (Updated: 12 April 2019 7:43 AM GMT)

16.4.2019 செவ்வாய்க்கிழமை தேரோட்டம்

தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு, சோழநாட்டை கி.பி. 985 முதல் கி.பி.1014 வரையான ஆண்டுகளில், ஆட்சி செய்தவர் அருண்மொழிவர்மன். சோழ தேசத்து மக்களுக்கு நல்லாட்சி வழங்கி, அவர்களை வளமாக வாழச் செய்ததுடன், தன்னுடைய தோள் வலிமை பறைசாற்றும் விதமாக பல போர்களை வென்று, தன் தேசத்து எல்லையை விரிவுபடுத்தியர் இவர். தன்னுடைய செய்வதற்கரிய செயல்களின் காரணமாக சிவபாதசேரகன், ராஜகேசரி உள்ளிட்ட 42 பட்டங்களை பெற்றவர் என்றாலும், ராஜராஜன் என்ற பெயர்தான் அவரது புகழை வான் ஓங்கி ஒலிக்கச் செய்தது என்றால் அது மிகையல்ல.

ராஜராஜ சோழன் கட்டி பல ஆலயங்களும், கட்டிடங்களும் இன்றும் அவரது பெயர் சொல்லும் வகையில் புகழ்பெற்று விளங்குகின்றன. அவற்றில் காலத்தால் அழியாத ஒரு கட்டிடக் கலைதான் தஞ்சை பெரியகோவில். இந்த ஆலயம் ராஜராஜ சோழனுக்கு எவரும் எட்ட முடியாத உச்சத்தை தொட வழிவகை செய்தது. அதோடு இந்த ஆலயம் ஓவியக் கலைகளில் சிறப்பு மிக்க இருப்பிடமாகவும் விளங்குகிறது.

யுனெஸ்கோ அமைப்பு, தஞ்சை பெரியகோவிலை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஆலயங்களிலும் ராஜகோபுரங்களே முதன்மை பெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மூலவர் வீற்றிருக்கும், தட்சிண மேரு என்ற விமானமே அற்புத அதிசயமாக திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அசையாத, அழியாத 216 அடி உயரமுள்ள இந்த விமானத்துக்கு, பூமியில் போடப்பட்டிருக்கும் அஸ்திவாரம் வெறும் 6 அடி மட்டுமே. விண்தொடும் இந்த விமானத்தின் கட்டிடக்கலையே, பழந்தமிழனின் கட்டுமானக் கலையை உலகுக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கிறது.

தஞ்சாவூருக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு சிறப்பு தலையாட்டி பொம்மை. இந்த பொம்மை எப்படி சாய்ந்தாலும் எழுந்து நிற்குமே தவிர, கவிழ்ந்து விழாது. அதுபோலவே கம்பீரமானதாக எழுந்து நிற்கிறது தஞ்சாவூர் பெரிய கோவில் விமானம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.

சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடிய பாடல்கள், தேவாரப் பாடல்கள் எனப்படுகின்றன. இந்த தேவாரப் பாடல்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள், தில்லையில் செல்லரித்துக் கிடப்பதை அறிந்த ராஜராஜ சோழன், தனது மதிநுட்பத்தால் அந்த ஓலைச் சுவடிகளை மீட்டு, உலகமெங்கும் தேவாரப் பாடல்களை உலவவிட்டான் என்பது வரலாற்று நிகழ்வாகும்.

தஞ்சையின் மையப்பகுதியில் காட்சிதரும் பெரிய கோவிலில், பிற்காலத்தில் மராட்டியர்கள் எழுப்பிய நுழைவு வாசல் காட்சி தருகிறது. அதைக் கடந்து சென்றால், ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கேரளாந்தகன் வாசல் உள்ளது. அதற்கடுத்து மூன்று நிலை கொண்டதாக எழுந்து நிற்கும் ராஜராஜசோழன் கட்டிய கோபுர வாசல் நம்மை வரவேற்கிறது. ராஜராஜன் வாசலின் இருபுறமும் உள்ள, யானையை விழுங்கும் பாம்பு, துவாரபாலகர்களின் காலை சுற்றியிருக்கும் பாம்பு ஆகியவை சிறப்பு வாய்ந்த சிற்பங்களாக பார்க்கப்படுகின்றன.

கோவிலின் உள்ளே இருக்கும் தனி மண்டபத்தில் 19½ அடி நீளம், 8¾ அடி அகலம், 12 அடி உயரத்துடன், ஒரே கல்லால் ஆன, 25 டன் எடைஉள்ள பெரிய நந்தி காண்போரை வியக்க வைக்கிறது. நந்தி மண்டபத்தை அடுத்து, சில படிகள் ஏறினால் மகா மண்டபம் உள்ளது. அதன் வலதுபுறம் விநாயகரும், இடதுபுறம் துர்க்கா தேவியும் வீற்றிருக்கிறார்கள்.

அரங்கம் போல அமைந்த மகா மண்டபத்தில்தான், தெய்வங்களின் செப்பு சிலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மீட்டுக் கொண்டுவரப்பட்ட, ராஜராஜன் ஐம்பொன் சிலையும் இங்கு வைத்துதான் வழிபடப்படுகிறது.

கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரியது என்று போற்றப்படுகிறது. 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் உள்ள ஆவுடையாரின் மேல், 13 அடி உயரமும் 23½ அடி சுற்றளவும் உள்ள லிங்கம் பிரமாண்டமாய்க் காட்சி தருகிறது. இந்த ஆலயத்தில் சிவலிங்க வழிபாடு, மகுடாகம அடிப்படையில் அமைந்துள்ளது. உள்கூடாக அமைந்துள்ள விமானத்தை 26¾ சதுர அடியுள்ள பிரம்மராந்திரக் கல் ஒன்று மூடியுள்ளது. 10 டன் எடையுள்ள ஒரே கல்லால் ஆன நந்திகள் நான்கு மூலைகளிலும் நிறுத்தப்பட்டு எடையைச் சமன் செய்கின்றன. மூலவர் ‘பிரகதீஸ்வரர்’ என்றும், ‘பெருவுடையார்’ என்றும் போற்றப்படுகிறார்.

கருவறையில் இரு சுவர்களுக்கும் இடையே கூடு போன்ற அமைப்பு உள்ளது. அங்கே சுவர்களில் வண்ண ஓவியங்கள் சித்திரக் கலையின் சிறப்பைச் சித்தரிக்கின்றன. மேல் தளச் சுற்றில் பலவகையான நடன பாவங்கள் சிற்பங்களாக உள்ளன.

இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்கள் பார்வைக்கு இவைகள் அனுமதிக்கபடுவதில்லை. தனி புத்தகமே எழுதும் ஆளவுக்கு கோவிலின் உள்ளும், புறமும் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. வெளிச் சுற்றில் தென்மேற்குப் பகுதியில் மராட்டிய மன்னரால் கட்டப்பட்ட விநாயகர் கோவிலும் வடமேற்கு பகுதியில் நாயக்க மன்னரால் எழுப்பப்பட்ட வள்ளி- தேவசேனா சமேத மயில் மீது வீற்றிருக்கும் ஆறுமுகப்பெருமான் கோவிலும் மயில் மண்டபமும் விளங்குகின்றன.

ஆனைமுகன், ஆறுமுகன் ஆலயங்களுக்கு இடையே கருவூர் சித்தர் கோவில் அமைந்துள்ளது. கருவூரார் தனது திருவிசைப்பாவில் உள்ள 11 பாடல்களில் பெருவுடையாரை புகழ்கின்றார்.

கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும், கோமுகம் அருகே உயரமான ஒரு கோவிலில் சண்டிகேசரும் அருள் பாலிக்கிறார்கள்.

நந்தி மண்டபத்துக்கும், பெருவுடையார் கோவிலுக்கும் இடையே தெற்கு பார்த்த அழகிய கோவிலில் ஆறடி உயரத்துடன் நின்றபடி பெரியநாயகி அருள் வழங்குகிறார். இது 12-ம் நூற்றாண்டில் பாண்டியரால் கட்டப்பட்டது. அதன் அருகே நாயக்கர் கால, நடராசர் மண்டபம் தனியே உள்ளது.

பரந்த வெளிப்பிரகாரத்தில் அம்மன் சன்னிதிக்கு நேரே எழுந்தருளியுள்ள மகா வராகி அம்மன் மிகவும் பிரசித்து பெற்றவர். இவருக்கு நவராத்திரி வழிபாடும், பஞ்சமி திதி வழிபாடும் நடத்தப்படுகின்றன.

திருவிசைப்பாவில் ஐந்து மரங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அங்கேயுள்ள பழமையான வன்னிமரம் ஒன்றே தலவிருட்சம் என்று பேசப்படுகிறது.

தமிழரசன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி மாத சதயத் திருவிழா அரசு விழாவாக இரு தினங்கள் கொண்டாடப்பட்டாலும் சிவாலயங்களுக்குரிய பிரதோஷம், மகா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரங்கள், ஆருத்ரா தரிசனம் இங்கே விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இருப்பினும், தஞ்சைப் பெரிய கோவிலில் 18 நாள் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பினும் சிறப்பாக கருதப்பட்டு, கொடி ஏற்றத்துடன், தினமும் அலங்காரங்களுடன் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 15-ம் நாளில் புதிதாக செய்யப்பட்ட தேரில் கடந்த 5 ஆண்டுகளாக சித்திரைத் தேரோட்டம் நான்கு ராஜ வீதிகளிலும் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி.

பரந்த வெளிகளுடன் உயர்ந்த கோட்டை மதில் சுவர்களும் நீர் நிறைந்த அகழியும் சூழ்ந்த இந்த அற்புத ஆலயத்துக்கு தமிழகம், அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டவர்கள் பலரும் தினமும் சுற்றுலாவாகவும் வழிபாட்டிற்காகவும் வந்து மகிழ்கின்றனர். அனைத்து மூர்த்தங்களும் பெரியதாக இருப்பதால் இந்த ஆலயம் ‘பெரிய கோவில்’ என்றே போற்றப்படுகிறது.

டாக்டர் ச.தமிழரசன்


Next Story