ஆன்மிகம்

குரு அளிக்கும் ஹம்ச யோகம் + "||" + This yoga is due to Guru Bhagavan

குரு அளிக்கும் ஹம்ச யோகம்

குரு அளிக்கும் ஹம்ச யோகம்
இந்த யோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும்
பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்றான இந்த யோகம் குரு பகவானால் ஏற்படுவது ஆகும். ஒருவரது சுய ஜாதகத்தில் குரு கேந்திர ஸ்தானத்தில், அதாவது 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதாவது ஒன்றில் இருக்க வேண்டும். அது குருவின் சொந்த வீடுகளான தனுசு, மீனம் அல்லது உச்ச வீடான கடகம் ஆகிய ராசிகளாக இருக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளின்படி குரு அமைந்திருந்தால் அது ஹம்ச யோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே அமைதியான சுபாவம் உடையவர்கள். புத்திசாலிகளாகவும், பெருந்தன்மையுடனும் செயல்படும் தன்மை கொண்டவர்கள். வழக்கமான உயரம் மற்றும் களையான முகமும், பாதங்களில் சங்கு, சக்கர ரேகை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். பலரால் போற்றப்படுபவராகவும், மற்றவர்களை விட தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்கள் என்றும் ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ராசியில் குரு 12 மாதங்கள் கொண்ட ஒரு வருட காலம் சஞ்சாரம் செய்கிறார். ஹம்ச யோகத்துடன் தொடர்புடைய தனுசு, மீனம், கடகம் ஆகிய மூன்று ராசிகளில் தலா ஒரு வருடம் வீதம் மூன்று ராசிகளில் மூன்று ஆண்டுகள் சஞ்சரிப்பார். அதாவது, ராசி மண்டலத்தைச் சுற்றிவரும் பன்னிரண்டு ஆண்டுகளில், மூன்று ஆண்டுகள் மட்டுமே ஹம்ச யோகத்தை குரு அளிக்கிறார்.

இந்த யோகத்தில் பிறந்தவர்களின் குடும்பம், பாரம்பரியங்களை மதித்து போற்றுவதாகவும், ஊர் மக்களின் நன்மதிப்பை பெற்றதாகவும் இருக்கும். வெளிர் நிற மேனியை கொண்ட இவர்கள் முகத்தில் தெய்வீக தேஜஸ் இருக்கும். தோற்றத்திலேயே மற்றவர்களை வசீகரம் செய்யும் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். சாஸ்திரங்களை கற்றுத்தேர்ந்து, அதை மற்றவர்களுக்கு உபதேசமாகவும் அளிப்பார்கள்.

மஞ்சள் நிறம் கொண்ட தங்கம், மஞ்சள் போன்ற பொருட்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவார்கள். பொன் நகைகளின் சேர்க்கையும் இவர்களுக்கு உண்டு. அரசியலில் முக்கியமான பதவிகளை பெறக்கூடிய அதிர்ஷ்டமும் ஏற்படும். தர்ம நெறியுடன், நேர்மை தவறாமல் வாழ்பவர்கள் ஆன்மிக குருவாகவும் வாழ்வில் உயர்வு பெறுவார்கள். மதம் மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களில் ஈடுபாடு கொண்டு, எல்லோருக்கும் நன்மை அளிக்கும் செயல்களை செய்வார்கள்.