மனத்தூய்மை


மனத்தூய்மை
x
தினத்தந்தி 16 April 2019 5:43 PM IST (Updated: 16 April 2019 5:43 PM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘மனத்தூய்மை’ குறித்த தகவல்களை காண்போம்.

மனத்தூய்மை என்றால் எந்த ஒரு செயலை செய்தாலும் அது வணக்கமாக இருந்தாலும் சரி, அல்லது நற்கருமங்களாக இருந்தாலும் சரி, அதை உலக ஆதாயத்திற்காகவும், மக்களின் வரவேற்பிற்காகவும், பெயருக்காகவும், புகழுக்காகவும், பெருமைக்காகவும் செய்யாமல் இறைவனுக்காக மட்டுமே செய்வது தான் மனத்தூய்மை ஆகும்.

இப்படி நடந்து கொள்ளும்படிதான் இறைவனும் திருக்குர்ஆன் மூலம் இவ்வாறு உத்தரவு போடுகின்றான்:

‘இறைவனுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக இறைவனை அவர்கள் வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸகாத்தைக் கொடுக்குமாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப்படவில்லை. இதுவே நேரான மார்க்கம்’. (திருக்குர்ஆன் 98:5)

“செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ‘ஒருவரின் ‘ஹிஜ்ரத்’ (மக்காவை துறந்து மதீனாவிற்குச் செல்லுதல்), அவர் அடைய இருக்கும் உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், அல்லது அவர் மணக்க இருக்கும் ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டிருந்தால் அவரது ‘ஹிஜ்ரத்’ எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: உமர் (ரலி), புகாரி).

மனிதன் செய்கின்ற எந்த ஒரு செயலும் அவனது எண்ணத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படுகிறது. ‘எண்ணம் போல் வாழ்வு’ என்றும் சொல்லப்படுகிறது. அந்த எண்ணம் தூய்மையானதாகவும், மாசற்றதாகவும், இறைவனுக்கு மட்டுமே உரித்தானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அமைந்திருப்பதுதான் உண்மையான இறைநம்பிக்கை ஆகும்.

அஸ்லம் கோத்திரத்தைச் சார்ந்த அபூபராஸ் தெரிவிப்பதாவது: “ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘இறைத்தூதர் அவர்களே! இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘மனத்தூய்மை’ என பதில் அளித்தார்கள்”. (நூல்: பைஹகீ)

மனத்தூய்மை என்பதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதி என்பது நிரூபணமாகிவிட்டது. மனத்தூய்மை இல்லாத எந்த ஒரு செயலையும் இறைவன் ஏற்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை.

‘(பலியிடப்படும்) மாமிசங்களோ, அவற்றின் ரத்தங்களோ இறைவனை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்’. (திருக்குர்ஆன் 22:37)

‘உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் மறைத்தாலோ, வெளிப்படுத்தினாலோ அதை இறைவன் அறிகிறான்’. (திருக்குர்ஆன் 3:29)

‘இறைவனுக்காக வேண்டி மனத்தூய்மையாக செய்யப்படக்கூடிய, அவனின் திருப்பொருத்தத்திற்காக செய்யப்படக்கூடிய செயல்களைத் தவிர வேறெந்த செயலையும் இறைவன் பொருந்திக் கொள்வதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஉமாமா அல்பாஹிலி (ரலி), நூல்: நஸயீ)

பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், முகஸ்துதிக்காகவும் நிறைவேற்றப்படக்கூடிய செயல்களில் இறைவனுக்காக மட்டுமே செய்யவேண்டியதில் பிறரையும் கூட்டுச் சேர்க்கும் இணைவைப்பு செயல் அரங்கேற்றப்படுகிறது. இணைவைப்பு இறைநம்பிக்கையின் எதிர்நிலையாகும். இந்த செயல் மனத்தூய்மையில் மாசு ஏற்படுத்தி, அதை பாழாக்கி விடுகிறது.

‘எவர் பிறருக்கு காட்டவேண்டும் என்பதற்காக தொழுகிறாரோ, நோன்பு நோற்கிறாரோ, தர்மம் வழங்குகிறாரோ அவர் இறைவனுக்கு இணைவைத்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி), நூல்: அஹ்மது)

‘தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்’. (திருக்குர்ஆன் 107:4, 6)

“மறுமைநாளில் முதன் முதலாக தீர்ப்புச் சொல்லப்படுகின்ற மனிதர் இறைவழியில் வீரமரணம் அடைந்த தியாகி ஆவார். அவர் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவரும் அதை ஏற்றுக்கொள்வார். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் வீரமரணம் அடையும் வரை போராடினேன்’ என்று அவர் பதில் அளிப்பார். அதனை இறைவன் மறுத்து, ‘இல்லை, நீ பொய் பேசுகிறாய். நீ வீரன் என்று போற்றப்பட போர் செய்தாய்’ என இறைவன் கூறுவான். பிறகு, அவன் முகங்குப்புற இழுத்துக்கொண்டு வரப்பட்டு, நரகில் வீசப்படுவான்”.

“மேலும் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கு கற்றுக்கொடுத்து திருக்குர்ஆனை ஓதிய மனிதனும் கொண்டுவரப்படுவான். அவருக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். ‘உனக்கு அருளப்பட்ட இந்த அருட்கொடையை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று இறைவன் கேட்பான். ‘நான் கல்வியைக் கற்று, அதனை பிறருக்கும் கற்றுக்கொடுத்து, திருக்குர்ஆனையும் ஓதினேன்’ என்று அவன் பதிலளிப்பான். அதற்கு இறைவன் மறுப்பு தெரிவித்து ‘இல்லை, நீ பேசுவது பொய். நீ அறிவாளி என்று மக்கள் போற்றவேண்டும். நீ அழகாக குர்ஆனை ஓதுபவர் என்று மக்கள் அழைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்தாய்’ என்று கூறுவான். அவனும் நரகத்திற்கு முகங்குப்புற இழுத்துக் கொண்டுவரப்பட்டு, அதில் வீசப்படுவான்”.

“மேலும், செல்வந்தன் ஒருவன் கொண்டுவரப் படுவான். அவனுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை இறைவன் ஞாபகப்படுத்துவான். அவனும் அதை ஏற்றுக்கொள்வான். ‘இதை வைத்து நீ என்ன செய்தாய்?’ என்று அவனும் விசாரிக்கப்படுவான். அதற்கு அவன் ‘இறைவா! நீ எந்த வழியில் செலவு செய்ய வேண்டுமென விரும்பினாயோ அத்தனை வழிகளிலும் அதனை செலவு செய்தேன்’ என்பான். ‘இல்லை, நீ பேசுவதெல்லாம் பொய். நீ ஒரு கொடை வள்ளல் என்று மக்கள் போற்ற வேண்டும் என்பதற்காக செலவு செய்தாய்’ என்று இறைவன் கூறுவான். அவனும் முகங்குப்புற இழுத்துக் கொண்டு வரப்பட்டு நரகத்தில் வீசப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

மூவரும் மனத்தூய்மை இல்லாமல், முகஸ்துதிக்காக மட்டும் நடந்து கொண்டதினால் இறைவன் அவர்களின் நல்லறங்களை பாழாக்கிவிட்டு, நாளை மறுமையில் அதிபயங்கரமான தண்டனைகளையும் வழங்கி, இவ்வாறு நடந்து கொள்ளும் மற்றவருக்கும் இறைவன் எச்சரிக்கை விடுகின்றான்.

‘நிச்சயமாக இறைவன் உங்களின் தோற்றத்தையோ, உங்களின் பொருளாதாரத்தையோ பார்ப்பது கிடையாது. எனினும், உங்களின் உள்ளங்களையும், உங்களின் (மனத்தூய்மையான) செயல்களையும் தான் பார்க்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)

Next Story