பலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி


பலனை அதிகரிக்கும் சித்ரா பவுர்ணமி
x
தினத்தந்தி 16 April 2019 1:49 PM GMT (Updated: 16 April 2019 1:49 PM GMT)

நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவி நமக்கு அமையும். இதையே ஜோதிட ரீதியாக யோகம், காலம், நேரம் என்கிறோம்.

யோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்களின் சேர்க்கை, பார்வையால் ஏற்படுவது. காலம் என்பது அவரவருக்கு நடைபெறும் தசாபுத்தி, அந்தரம் போன்றவை யோகமாகவும், யோகமில்லாமலும் அமைவது. நேரம் என்பது கோச்சார நிலையில் கிரகங்கள் சுற்றி வரும் நிலையில் தரும் பலன்களாகும்.

முற்பிறவியில் நாம் செய்த கா்ம வினைகளின் பயனை நாம் அனுபவிக்க வேண்டும் என்பது நியதி. அந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியாது என்றாலும், அந்த தாக்கத்தை தாங்குவதற்கான மன வலிமையையும், உடல்பலத்தையும் பெறுவதற்காகவே நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

மனித வாழ்வில் விதி தந்த பலனால், எந்த வழியில் சென்றால் வாழ்க்கை வளமாக அமையும் என்பதற்கு ஜோதிடம் கூறும் எளிய பரிகார வழிபாட்டு முறை திதி, நட்சத்திர வழிபாடு. அந்த வகையில் அமாவாசை, பவுர்ணமி திதியிலும், சில குறிப்பிட்ட நட்சத்திர நாளிலும் செய்யும் பூஜை பல மடங்கு பலன் தரும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வரும். அவற்றில் சித்ரா பவுர்ணமிக்கு அதிக பலம் இருக்கிறது. அந்த நாளில் செய்யும் வழிபாடு, நம்முடைய ஜனன ஜாதகத்தின் பலனையே மாற்றும் வல்லமை கொண்டது.

நம்முடைய பாவச் சுமையைக் குறைக்க உகந்த நாளாக இந்த சித்ரா பவுர்ணமி தினம் திகழ்கிறது. மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைக்கும் பணியைச் செய்பவர் சித்ரகுப்தன். ஒருவர் இறந்தபிறகு அவரது ஆன்மா, சொர்க்கத்திற்கு செல்வதா? நரகத்திற்குச் செல்வதா? என்பதை முடிவு செய்யும் எமதர்மனின் உதவியாளராக சித்ரகுப்தன் உள்ளார். ஒரு உயர் அதிகாரியை சந்திக்க அவரின் உதவியாளரை சந்தித்து முதலில் அனுமதி பெற வேண்டும். அதன்பிறகே அந்த அதிகாரியை சந்திக்க முடியும். அதன்படி எமதர்மனின் உதவியாளரான சித்ரகுப்தனை வழிபட்டால், புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.

சித்ரா பவுர்ணமி அன்று பூஜை அறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படம் வைத்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து, மலர் அலங்காரம் செய்யுங்கள். பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள், கலவை சாதங்கள் நைவேத்தியமாக படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி, தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும். இதன் மூலம் பாவ பலன் குறைந்து, புண்ணிய பலன் பெருகும். மேலும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும்.

சித்ர குப்தனின் மனைவி சித்ராதேவி ஆவாள். அந்த அன்னைக்கு, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப் பொடி சாதம், மாங்காய் சாதம், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா படைத்து, அவற்றை தானமாக வழங்கியும் புண்ணியம் பெறலாம். கல்வி கேள்விகளில் சிறந்தவர் சித்ரகுப்தன் என்பதால், அவரது பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டு புத்தகங்களை வைத்து வழிபட்டால் பிள்ளைகளுக்கு படிப்பு நன்றாக வரும்.

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான கடன் உண்டு. ஒன்று பிறவிக் கடன், மற்றொன்று பொருள் கடன். பெரும்பான்மையானவர்கள், இந்த இரண்டு கடன்களில் இருந்து மீள முடியாதவர்களாக, அவதிப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். அந்த துன்பத்தை நீக்கும் வழிபாடாகத் திகழ்வதுதான் சித்ரா பவுர்ணமி வழிபாடு.

இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி அன்று, சூரியன் அஸ்வினி நட்சத்திரத்திலும், சந்திரன் சித்திரை நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்வதால் முறையான பவுர்ணமி பூஜை வழிபாடு பாவ விமோசனம் தரும். சூரியன் சித்திரை மாதத்தில் அஸ்வினி நட்சத்திரத்தில் உச்சம் பெறுவார். அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. அவருக்கு ஞானகாரகன், மோட்சக்காரகன் என்று பெயர். அன்று சூரியன் தன் முழு சக்தியான உச்சத்தை வெளிப்படுத்துவதால் செய்யும் பவுர்ணமி வழிபாடு ஆன்ம பலத்தையும், ஞானத்தையும், மோட்சத்தை தந்து பிறவிக் கடனில் இருந்து மீளச் செய்யும். சந்திரன் சஞ்சாரம் செய்வது சித்திரை நட்சத்திரம். அது செவ்வாயின் நட்சத்திரம் என்பதால் பொருள் கடன் தீரும் என்பதில் ஐயமில்லை. எல்லா வருடமும் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் பவுர்ணமி வருவதில்லை. எனவே இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியில் வழிபடுவது பல மடங்கு பலனைத் தரும்.

சூரியனின் அதிதேவதை சிவன், சந்திரனின் அதிதேவதை அம்பிகை. எனவே சிவசக்தியை சித்ரா பவுர்ணமியில் வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

Next Story