ஆன்மிகம்

அம்மை நோய் அகற்றும் சாம்பல் + "||" + Smallpox Disposal Ash

அம்மை நோய் அகற்றும் சாம்பல்

அம்மை நோய் அகற்றும் சாம்பல்
சிவபெருமானின் திருவிளையாடல்கள் அறுபத்து நான்கும் நடைபெற்ற சிறப்புமிகு இடம் மதுரை. ஆனாலும் இங்கு ஈசனுக்கு இரண்டாவது மரியாதைதான். ஏனெனில் இங்கு மீனாட்சியின் அரசாட்சியே நடக்கிறது.
17-4-2019 மீனாட்சி திருக்கல்யாணம்

குலசேகரப் பாண்டியனுக்குப் பிறகு அவரது மகன் மலையத்துவஜ பாண்டியன் மதுரையை ஆண்டான். அவனுக்கு குழந்தை பேறு இல்லை. இதனால் புத்திர காமேஷ்டி யாகம் செய்தான். இதையடுத்து யாக குண்டத்தில் இருந்து அம்பாள், மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். அவளுக்கு தடாதகை என்று பெயரிட்டு அழைத்தனர். மீன் போன்ற கண்களை கொண்டவன் என்பதால் ‘மீனாட்சி’ என்றும் பெயர் பெற்றாள். மலையத்துவஜ பாண்டியனுக்கு ஒரே மகள் என்பதால், உரிய வயது வந்ததும், மீனாட்சி பாண்டிய நாட்டின் அரசியாக அரியணை ஏறினாள்.

தன் தேசத்தை விரிவுபடுத்த எண்ணிய மீனாட்சி, திக்விஜயம் மேற்கொண்டாள். தன்னை எதிர்த்த மன்னர்களை எல்லாம் வென்றாள். அவளது வீரத்தின் கீழ் தேவலோகமும் கூட வந்தது. வெற்றியின் மீது இன்னும் அடங்காத தாகம் கொண்ட மீனாட்சி, நேராக கயிலை மலைக்குச் சென்றாள். தன்னை எதிர்க்கும் நோக்குடன் வந்த மீனாட்சியை, சிவபெருமான் நேருக்கு நேராக கண்ணை நோக்கினார். அதே போல் மீனாட்சியும் சிவபெருமானை பார்த்த நொடியில், மீனாட்சிக்குள் இருந்த பெண்ைம விழித்து, நாணம் குடிகொண்டது. மீனாட்சியின் அழகில் சொக்கிய காரணத்தால் தான், சிவபெருமானுக்கு ‘சொக்கநாதர்’ என்ற பெயர் வந்தது. அதோடு எப்போதும் சுடுகாட்டு சாம்பல் பூசி, மண்டை ஓடு மாலை அணிந்து காணப்படும் ஈசன், மீனாட்சிக்காக சுந்தரனாய் காட்சி தந்ததால், ‘சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படலானார்.

மதுரைக்கு வந்து திருமணம் செய்து கொள்வதாக, மீனாட்சிக்கு ஈசன் வாக்கு கொடுத்தார். அதன்படி திருமால், பிரம்மா, தேவர்கள் புடைசூழ மதுரை சென்று மீனாட்சியை மணந்தார். மீனாட்சியை சிவபெருமான் திருமணம் செய்த நிகழ்வு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

இங்கு மீனாட்சி அம்மன் சன்னிதி எதிரில் பொற்றாமரை குளத்தின் அருகில் ‘மடப்பள்ளி சாம்பல்' வைக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டிற்கு சிறிது எடுத்துச்சென்று ‘மந்திரமாவது நீறு' என்னும் இத்தல சம்பந்தரின் பதிகம் பாடி இந்த மடப்பள்ளி சாம்பலை உடலில் தொடர்ந்து பூசிவந்தால் வெப்பு நோய்கள், அம்மை நோய்கள், பிற உடல் உபாதைகள் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சித்திரை மாதம் வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாட்கள் விழா நடைபெறும். 8-ம் நாள் இரவில் ‘மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்' 9-ம் நாள் இரவில் ‘மீனாட்சி திக்விஜயம்', பத்தாம் நாள் காலையில் ‘மீனாட்சி திருக்கல்யாணம்' நடக்கிறது.

சிவ.அ. விஜய் பெரியசுவாமி