ஆன்மிகம்

மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம் + "||" + Human skill is the rise in the skies

மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்

மண்ணில் மறைவதல்ல, விண்ணில் உயர்வதே மனித லட்சியம்
சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படுவதைவிட பண்பாட்டு வீழ்ச்சியால்தான் சமகால மனிதன் அதிகம் பாதிக்கப்படுகிறான். சூழல் மாசுபடுவதுகூட மனித மனங்கள் மாசு பட்டிருப்பதன் வெளிப்பாடே.
மனிதனைத் தவிர்த்து கோடான கோடி உயிரினங்கள் இந்தப் பூமியில் உயிர் வாழ்கின்றன. அவை உயிர் வாழ்வதால் இந்தப் பூமியில் எவ்வித நாசமோ சிறு குழப்பமோ இதுவரை ஏற்பட்டதில்லை. அதேநேரம் மனித மனங்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் மட்டுமே சூழல் மாசுபடுகிறது.

மனிதன் தன்னுடைய அனைத்துத் துறைகளிலும் அதர்மத்துடன் செயல்படுகின்றான். அமெரிக்காவுக்கான தூரம் குறைந்துள்ள அதேவேளை, அண்டை வீட்டுக்கான தூரத்தை மனிதன் அதிகப்படுத்திவிட்டான். இது இன்றைய மனிதன் செய்திருக்கும் மகத்தான சாதனைகளில் ஒன்று என்றும் கூறலாம். அதாவது உள்ளங்கையில் உலகைச் சுருக்கிய மனிதன் உள்ளங்களை தூரமாக்கிவிட்டான்.

மனித உறவுகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. இனத்தின் பெயரால்.. மொழியின் பெயரால்.. தேசத்தின் பெயரால்.. மனிதன் துண்டாடப்படுவதுதான் இன்றைய மனிதன் அடைந்திருக்கும் இன்னொரு சாதனை என்றுகூட இதனைக் குறிப்பிடலாம்.

அமெரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும், ஆப்ரிக்காவில் வசிப்பவரைக் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் நமக்கு, அண்டை வீட்டில் யார் வசிக்கின்றார் என்பதைக் குறித்து எதுவும் தெரிவதில்லை. அந்தோ பரிதாபம்.

யானை முதல் திமிங்கலம் வரை அனைத்து உயிரினங்களையும் மனிதன் அடக்கி ஆளு கிறான். மனிதனைத் தவிர அனைத்து உயிரினங் களுக்கும் சிற்றறிவுதான். ஆனால், மனிதனுக்கு மட்டும் ஆறாம் அறிவு எனும் பகுத்தறிவு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது ஒரு கேள்வி எழுகிறது. சன்மார்க்க வழிகாட்டுதல்களும், இறைத்தூதர்களும், வேதங்களும் பகுத்தறிவுகொண்ட மனிதர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பகுத்தறிவற்ற ஏனைய உயிரினங்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை? உண்மையில் பகுத்தறிவற்ற உயிரினங்களுக்கு அல்லவா சரியான வழிகாட்டுதல்கள் தேவைப்படும்? அவைகளுக்கு ஏன் வழங்கப்படவில்லை? காரணம் என்ன?

ஆம், மனித வாழ்வுக்கென சில எல்லைகள் உண்டு என்பதுதான் இதற்கான காரணம். அந்த எல்லைகளை மீறும்போது மனிதத்தன்மையில் இருந்து மிருகத்தன்மை கொண்டவனாக மனிதன் மாறுவான். அவ்வாறு அவன் எல்லை மீறாமல் இருக்கவே இந்த வழிகாட்டுதல்கள். அதேவேளை மிருகங்கள் ஒருபோதும் எல்லை மீறுவதில்லை.

ஓர் ஆடு, குட்டியை ஈனும்போது அல்லது ஒரு மாடு கன்றை பிரசவிக்கும்போது சற்று நேரத்திலேயே அந்தக் குட்டி, பால் குடிக்க தாயின் மடியை நோக்கித் தானாகச் செல்லும். இறைவன் அவ்வாறுதான் இயற்கையிலேயே அவற்றை படைத்துள்ளான்.

ஆனால், மனிதக்குழந்தையைப் பொறுத்தவரை பிறந்த உடன் அழுவதற்கு மட்டுமே அதற்குத் தெரியும். ஓடிச் சென்று தானாகப் பால் அருந்தத் தெரியாது. பெற்றெடுத்த தாய்தான் குழந்தையை மார்போடு வாரியணைத்து அமுதூட்டுவாள். என்ன பொருள் இதற்கு? ஆரம்பம் முதலே ஓர் உறுதுணையும் வழிகாட்டுதலும் மனிதனுக்கு தேவைப்படுகிறது என்பதுதான்.

முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவரும் ஒரு கோழிக் குஞ்சுக்கு முன்பாக, மண்ணில் கொஞ்சம் தானிய மணிகளை போட்டுப் பாருங்கள். மணல் எது தானிய மணி எது என்பதைப் பிரித்தறியும் ஆற்றல் அதற்கு இருக்கும். இயற்கையிலேயே இறைவன் அவ்வாறு அமைத்துள்ளான். நாய், பூனை, கழுதை ஆகிய அனைத்து உயிரினங்களுக்கு அவை பிறந்தது முதலே அவற்றுக்கான உணவு எது என்று நன்கு தெரியும். உடலுக்கு எது நல்லது? எது கெட்டது? என்பது குறித்தும் அவை நன்றாக அறிந்து வைத்திருக்கின்றன.

ஆனால், மனித விவகாரம் அவ்வாறல்ல. தவழும் பருவத்தில் இருக்கும் ஒரு குழந்தை கவனிப்பார் எவருமின்றி தனிமையில் விடப்பட்டால் என்ன நடக்கும்? ஓடும் பாம்பையும் கையில் பிடிக்கும். சுடும் நெருப்பையில் கையில் எடுக்கும். ஏன்.. சிலபோது தான் கழித்த மலத்தைக்கூட கையில் எடுத்து தின்ன முற்படும். ஒரு நாய்குட்டி கூட செய்யாத மோசமான செயலை இங்கே மனிதக் குழந்தை செய்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இது கூடாது என்று கற்றுக்கொடுக்கும் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது. வாழ்நாள் முழுவதும் எது கூடும் எது கூடாது என்று கற்றுக்கொடுக்க வேண்டிய கடமையும் கூடவே சேர்ந்து வருகிறது. ஏனெனில் கற்றுக்கொடுப்பதன் மூலமும் கற்றுக்கொள்வதன் மூலமும் மட்டுமே மனிதன் பகுத்தறிவு கொண்டவனாக மாறுகின்றான்.

ஆக.. கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்வு மனிதனை மிருகமாக மாற்றும். தனி மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் பண்பாடு களுக்கு விலங்கு மாட்டி, ஓரத்தில் ஒதுக்கி வைக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கின்றோம்.

உண்மையில் கட்டற்ற சுதந்திரம் மனிதனை மனிதனாக மாற்றாது. மாறாக அது அழிவிற்கே இட்டுச் செல்லும். மனிதனே அதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றான். எய்ட்ஸ் நோய்களின் தோற்றம் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு அன்றி வேறென்ன?

எனவே மனிதனுக்கு சில வழிகாட்டுதல்கள் எப்போதும் தேவைப்படுகின்றது. ஒரு சில எல்லைகளை அவன் மீறாமல் இருக்க சன்மார்க்க வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் படைப்பாளனாகிய அல்லாஹ் இறைத் தூதர்களையும் இறை வேதங்களையும் அனுப்பி வைத்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தி இது:

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் கத்தர்நியாகட் வனப்பகுதியில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட எட்டு வயது பெண் சிறுமி ஒருவரை வன அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“இந்தக் குழந்தைக்கு ஒரு வார்த்தைகூட பேச வரவில்லை. மனிதர்கள் அவளுக்கு அருகே சென்றால் அந்தக் குழந்தை அவர்கள் மீது பாய்ந்து தாக்க முற்படுகிறது. அந்தச் சிறுமிக்கு மனிதர்களைப் போன்று நடக்கவோ சாப்பிடவோ தெரியவில்லை. நடப்பதற்கு எவ்வளவோ பயிற்சிகள் கொடுத்த பின்பும் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி குரங்குகளைப் போன்றுதான் அவள் நடக்கின்றாள். கால்களிலும் கைகளிலும் பெரிதாக நகம் வளர்ந்துள்ளது”.

இந்தச் செய்தி நமக்குத் தரும் பாடம் என்ன? மனிதன் பூனை வளர்க்கிறான், ஆடு வளர்க் கிறான். மாடு வளர்க்கிறான். ஏன் நாயைக் கூட வளர்க்கிறான். மனிதன் வளர்த்த காரணத்தால் எந்த விலங்கினமும் மனித குணாதிசயங்களை பெறுவதில்லை. எத்தனை வருடங்கள் சென்றாலும் மனிதனால் வளர்க்கப்படும் ஆடும், மாடும் ஏனைய கால்நடைகளும் விலங்குகளாகவே வளர்கின்றன. அவை மனிதக் குணங்களைப் பெறுவதில்லை. அல்லாஹ் அவற்றை அவ்வாறு படைக்கவும் இல்லை.

ஆனால் மனிதன் அவ்வாறல்ல. எட்டு வருட காலத்திலேயே குரங்குகளால் வளர்க்கப்பட்ட ஒரு குழந்தை குரங்கின் குணாதிசயங்களைப் பெறுகின்றது என்றால் என்ன பொருள்?

மனிதன் மனிதனாகவும், பகுத்தறிவு மிக்கவனாகவும் மாறவேண்டுமெனில் அவனுக்கு வழிகாட்டுதல்களும் பண்பாட்டுப் பயிற்சியும் தேவை. இல்லையெனில் விண்ணில் உயர்வதற்குப் பதிலாக மண்ணில் அழிந்து போவான். மிருகக் குணங்களைப் பெறுவான். ஆகவேதான் இறைத்தூதர்கள் வாயிலாகவும் இறைவேதங்கள் மூலமாகவும் மனிதனுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

மனிதன் மனிதனாக வாழ மனமாற்றம் தேவை. மனமாற்றத்திற்கான அடித்தளம் சன்மார்க்க வழிகாட்டலில் அடங்கியுள்ளது. சன்மார்க்க வழிகாட்டலோ இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.

நூஹ் மஹ்ழரி, குளச்சல்