உடற்பயிற்சியும், உளப்பயிற்சியும்
உடல் இச்சையை கட்டுப்படுத்தி கூடவே உளக்கட்டுப்பாட்டையும் உருவாக்குவதுதான் நோன்பின் நோக்கம்
நோன்பு என்பதே சில வணக்கங்களின் கூட்டுக்கலவை என்றும் சொல்லலாம். ‘கியாமுல்லைல்’ எனும் ரமலான் மாத இரவு வணக்கம், ‘ஸதகா’ எனும் தானதர்மம், ‘இஃதிகாஃப்’ எனும் பள்ளிவாசலில் இரவு தங்குதல், ‘திலாவத்’ எனும் திருமறைக் குர்ஆன் ஓதுதல், ‘லைலதுல் கத்ர்’ எனும் மாட்சிமை மிக்க ஓர் இரவை அடைவதற்காக நம்மைத் தயார் செய்தல், ஆகிய ஐந்தும் கலந்த கூட்டு வணக்கம்தான் நோன்பு.
ரமலான் மாதத்தில் ஏன் இந்தப் பயிற்சி? உயர் ஒழுக்கம் கொண்டவனாகவும், பண்பாடு மிக்கவனாகவும் மனிதனை மாற்றுவதற்கான நல்லொழுக்கப் பயிற்சிதான் இது. இந்தப் பயிற்சியை சரிவர நிறைவேற்றுபவன் நல்ல பிரஜையாகவும், சிறந்த மனிதனாகவும், சமூகத்திற்குப் பயன்மிக்கவனாகவும் திகழ்வான்.
இந்த அடிப்படையிலேயே ‘தக்வா’ எனும் இறையச்சத்தை உருவாக்குவதுதான் நோன்பின் அடிப்படை நோக்கம். இறையச்சம் உடைய மனிதன் பண்பாடு மிக்கவனாக பரிணாமம் பெறுகிறான். பண்பாடு மிக்கவன் நல்ல மனிதனாகவே இருப்பான் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. இந்தப் பண்பாட்டுப் பயிற்சியை தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
தொழுகை என்பது வெறும் இறை வணக்கத்திற்காக மட்டும் அல்ல என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக நம்மில் நல்ல மாற்றம் உருவாக வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
ஏனைய இறை வணக்கங்கள் அனைத்தும் தனியொரு வணக்கமாக இருக்கும்போது நோன்பு மட்டும் உடல் கட்டுப்பாடு மற்றும் உளக்கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் ஒருசேர உள்ளடக்கியிருப்பது நம்மில் இறையச்சம் உருவாக வேண்டும் என்பதற்காகவே. இதற்கு உறுதுணையாக இருப்பதுதான் இரவு வணக்கமும், திருமறை ஓதுதலும், தான தர்மமும்.
நபி (ஸல்) அவர்களிடம் அபூ உமாமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு நற்செயலைச் சொல்லித்தாருங்கள்” என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “நோன்பைப் பற்றிப்பிடித்துக்கொள், அதற்கு நிகர் எதுவும் கிடையாது” என்று கூறினார்கள். (நஸாயீ)
இது குறித்துதான் ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுகின்றான்: “ஆதத்தின் பிள்ளைகள் செய்யும் அனைத்துச் செயல்களும் அவர்களுக்கே, நோன்பைத் தவிர. நோன்பு எனக்கானது. நானே அதற்குக் கூலி வழங்குவேன். (புகாரி, முஸ்லிம்)
அனைத்துச் செயல்களும் அல்லாஹ்வுக்காகவே செய்யப்படுகின்றன. அதற்கான கூலியையும் அவனே வழங்குவான். அப்படியிருக்க.. நோன்புக்கு மட்டும் என்ன தனிச்சிறப்பு?. அதற்கான பதிலையும் அல்லாஹ்வே ஹதீஸுல் குத்ஸியின் வாயிலாகக் கூறுகின்றான்..
“அவன் எனக்காகவே உணவை விடுகின்றான். பானத்தையும் எனக்காகவே விடுகின்றான். மனோஇச்சையை எனக்காகவே விடுகின்றான்” (இப்னு குஸைமா)
இங்கே மனக்கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு இரண்டையும் ஒருசேர இறைவன் குறிப்பிடுகின்றான். எனவே நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே பசி ஏற்பட வேண்டும். அந்தப் பசியை இறைவனுக்காகத் தாங்கிக்கொள்ள வேண்டும். மேலும் நோன்பு நோற்பவருக்கு உண்மையிலேயே தாகம் ஏற்பட வேண்டும். அந்தத் தாகத்தை இறைவனுக்காகத் தாங்கிக்கொள்ள வேண்டும். மனோ இச்சைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதுதான் உண்மையான நோன்பு.
மாறாக பசியின்றி, தாகமும் இன்றி, மனோ இச்சைகளையும் கட்டுப்படுத்தாமல் நோன்பு வைத்தால் அதன் உண்மை நோக்கமே அடிபட்டுவிடும்.
பசியும் தாகமும் இருந்தால்தானே உடலின் வீரியம் குறையும். உடலின் வீரியம் குறைந்தால் தானே பாவ காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்கான மனப்பக்குவம் வரும். உடல் வீரியத்தை இழக்காத இந்த நோன்பு சரியான நோன்புதானா..? யோசித்துப்பாருங்கள்.
உளப்பயிற்சி
நோன்பின் பகல் பொழுதுகளில் உணவு, பானம் ஆகியவை நமது உடலினுள் சென்றுவிடாமல் இருப்பதில் எவ்வாறு பேணுதலுடன் நடக்கின்றோமோ அவ்வாறு மனக்கட்டுப்பாட்டிலும் பேணுதலுடன் இருக்கின்றோமா? நோன்பைக் குறித்துக் கூறும்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதைக் குறித்து மட்டும் கூறவில்லையே. மனக்கட்டுப்பாட்டையும் சேர்த்தல்லவா கூறியுள்ளார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பொறுமையின் மாதத்திலும் மற்றும் பிரதி மாதம் மூன்று நாட்களிலும் யார் நோன்பு வைக்கின்றாரோ அவருடைய உள்ளத்தின் கசடை அகற்றுவதற்கு அதுவே போதுமானதாகும்”. (ஸஹீஹ் ஜாமிஉஸ் ஸகீர்)
பொறுமையின் மாதம் என்பது ரமலான். பிரதி மாதம் மூன்று நாட்கள் என்பது பிறை 13,14,15. வெறும் பசியும் தாகமும் உள்ளத்தின் கசடை அகற்றுமா..? ஒருபோதும் அகற்றாது. பசியும் தாகமும் மட்டுமே நோன்பு என்று நினைப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பதில் கூறுகின்றார்கள்:
“எத்தனையோ நோன்பாளிகள், நோன்பினால் அவர்கள் அடைந்த பலன், வெறும் பசியும் தாகமும் தான்”. (நஸாயீ, இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூற வருவது இதுதான், ‘வெறும் பசியும் தாகமும் மட்டுமல்ல நோன்பு. மாறாக உளப்பயிற்சியும் மனக்கட்டுப்பாடும் சேர்ந்ததுதான் நோன்பு’.
இதனை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார்கள்: “எவர் (நோன்பு நோற்றிருந்தும்) பொய் சொல்வதையும், பொய்யான முறையில் செயல்படுவதையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருப்பதையும் தாகித்திருப்பதையும் பற்றி அல்லாஹ்வுக்கு எவ்வித அக்கறையுமில்லை”. (புகாரி)
பசியும் தாகமும் மட்டுமல்ல நோன்பு என்று இங்கே நபி (ஸல்) அவர்கள் மீண்டும் குறிப்பிடுகின்றார்கள். நோன்பாளி தவறான செயலில் ஈடுபட்டால் அவன் நோன்பே வைக்கவில்லை என்றுதான் பொருள். எவ்வாறு தண்ணீர் குடிப்பது நோன்பை முறிக்குமோ அவ்வாறே பாவச் செயல்களில் ஈடுபடுவதும் நோன்பை முறிக்கும் என்ற உண்மையை உணர்ந்து இருப்பது நல்லது.
நோன்பாளி பாவச்செயல்களில் ஈடுபட்டால் அந்த நோன்பு பயனற்றுப் போய்விடும். விளைவு..? மறுமையில் நோன்பு வைக்காதவனாகவே அவன் கணிக்கப்படுவான்.
ஆக, நோன்பு என்பது இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று: வீரியத்தைக் குறைக்கும் உடற்பயிற்சி. இரண்டு: பாவச் செயல்களைத் தவிர்ந்து கொள்ளும் உளப்பயிற்சி.
ஒருமாத காலம் இந்த ஒழுக்கப் பயிற்சி பெறுபவர் மீதி இருக்கும் பதினோரு மாத காலமும் நல்ல மனிதனாக சமூகத்தில் நல்ல பிரஜையாக மாறுவார் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. ஆகவேதான் நோன்பின் நோக்கம் குறித்துப் பேசும் பிரபலமான இறைவசனம், “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்” (2:183) என்று குறிப்பிடுகிறது.
வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் இறையச்சத்தைத் தருமா..? யோசித்துப்பாருங்கள். ஒருபோதும் இல்லை! பசியும் தாகமும் உடலின் வீரியத்தைக் குறைப்பதற்கான பயிற்சி மட்டுமே.
நோன்பு உளப் பயிற்சியையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே உறுதுணை நற்கருமங்களாக இரவுத்தொழுகையும், தானதர்மமும், திருக்குர்ஆன் ஓதுதலும், இஃதிகாஃப் எனும் பள்ளிவாசலில் தங்குதலும், லைலதுல் கத்ர் இரவுக்காகத் தயாராவதும் சிறப்பு வணக்கங்களாக ரமலானில் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஒருமாத காலம் உடல் பயிற்சியையும் உளப்பயிற்சியையும் பெற்றுக்கொண்ட ஒருவர் ரமலானுக்குப் பின்னரும் நிச்சயம் இதனைக் கடைப்பிடிப்பார். அதுதான் நோன்பின் நோக்கம். ரமலான் நோன்பு என்பது ரமலானுக்காக மட்டுமல்லவே. மாறாக அது ரமலானையும் தாண்டி நிற்கும் பதினோரு மாதங்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி.
ஆகவே, உடற்பயிற்சியோடு உளப்பயிற்சியும் சேரும்போதுதான் நோன்பின் உண்மையான பலனை அடைந்துகொள்ள முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
- நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
Related Tags :
Next Story