கடவுளின் சோதனையும் ஆசீர்வாதமும்


கடவுளின் சோதனையும் ஆசீர்வாதமும்
x
தினத்தந்தி 3 May 2019 1:55 AM GMT (Updated: 2019-05-03T07:25:33+05:30)

ஒரு சிறுவன் தன் தோட்டத்தில் பட்டுப்புழு ஒன்றை வளர்த்து வந்தான்

சிறுவன் தன் தோட்டத்தில் பட்டுப்புழு ஒன்றை வளர்த்து வந்தான். அது தன்னை சுற்றிலும் பட்டு நூலால் கடினமான கூட்டைக்கட்டி உள்ளே இருந்தது. சில நாட்களுக்கு பின் அது பட்டுப்பூச்சியாக மாறி வெளியே வர முயற்சி எடுத்தது. கூட்டிலிருந்து வெளிவருவது அவ்வளவு எளிதாக இல்லை. பல மணி நேரங்கள் பொறுமையோடு போராடி தான் வெளியே வர வேண்டும்.

ஆனால் அந்த சிறுவனுக்கோ பொறுமையில்லை. பட்டாம்பூச்சி படும் கஷ்டத்தையும் அவனால் தாங்க முடியவில்லை. ஆகவே ஒரு கூரிய சிறு கத்தியினால் மெதுவாக கூட்டை வெட்டி, பட்டுப்பூச்சியை எளிதாக வெளியே எடுத்துவிட முயற்சித்தான். ஆனால் அந்த பட்டுப்பூச்சியினால் பறக்க முடியவில்லை. அதனுடைய சரீரம் பெரிதாக இருந்தபடியால் கீழே விழுந்து மரித்துவிட்டது. முடிவில் எறும்புகள் அதை இழுத்துச் சென்றன.

இதை உற்று நோக்கிக்கொண்டிருந்த அச்சிறுவனின் தகப்பன், ‘மகனே அந்த பட்டுப்பூச்சி கூட்டிலிருந்து வெளிவர பொறுமையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அதன் தசைநார்களையும், நரம்புகளையும் பெலப்படுத்தும். பல மணி நேரங்கள் அது வெளிவர பாடுபடுவதால் அதன் உடல் எடை குறைந்து பறந்து செல்ல வசதியாக இருக்கும். அது அனைத்து முயற்சியும் செய்து, தானாகவே வெளியே வந்திருந்தால் நிறைவான வளர்ச்சியடைந்திருக்கும். நீயோ இப்பொழுது அதன் வாழ்க்கையையே கெடுத்துவிட்டாயே’ என்றார்.

இதுபோலத் தான் மானுட வாழ்வில் வருகின்ற சோதனைகள் மனிதனை நன்கு புடமிட்டு பேராற்றலுடைய மாமனிதனாக மாற்று கிறது. யோபு ‘என்னை அவர் புடமிட்டால், நான் பொன்போல் துலங்கிடுவேன்’ (யோபு 23:10) என்கிறார்.

கடவுள் மனிதர்களை எக்காலமும் நேசிக்கிறார். எனினும் மனிதன் கடவுள் மீது வைத்திருக்கும் அன்பு முழுமையானதா? அல்லது ஆதாயத்திற்கானதா? என்பதை அறிந்துணரவும், இறையுறவிலும், தளராத பற்றுறுதியிலும் வலுப்பெறவே கடவுள் சோதிக்கிறார். கடவுள் மனிதரை சோதித்ததின் ஒரு சில சான்றுகளைக் காணலாம்.

1.ஆபிரகாமை சோதித்த கடவுள்:

‘கடவுள் ஆபிரகாமை சோதித்தார்’ (தொ.நூ 22:1). கடவுள் ஆபிரகாம் சாராளுக்கு முதிர்வயதில் ஒரு புதல்வனைக் கொடுத்தார். ஒரே தவப்புதல்வனையும் ஆபிரகாமிடம் பலியிட கேட்கின்றார். ஆபிரகாம் தன் மகனை பலியிட அழைத்துச் சென்றார். பலியிடப் போகும் வேளையில் கடவுள் தடுத்தவராய், ‘நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்’ (தொ.நூ 22:12) என்றார்.

சோதனையில் வென்ற ஆபிரகாமுக்கு கடவுள் ஆசி பொழிந்து ‘உன் வழி மரபைப் பலுகிப் பெருகச் செய்வேன், உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர், உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்’ என அவர் தம் வழிமரபினருக்கு மூன்று வாக்குறுதியினை அளித்துள்ளார்.

2.யோபுவை சோதிக்க அனுமதித்த கடவுள்:

ஊசு என்ற நாட்டில் மாசற்றவரும், நேர்மையானவருமாய் இருந்தவர் யோபு. பத்து பிள்ளைகள், பல்வேறு பணியாளர்கள், திரளான செல்வங்கள் என கீழைநாட்டு மக்கள் எல்லாரிலும் மிகப்பெரியவராக இருந்தார். சாத்தான் இவரைச் சோதிப்பதற்கு அனுமதி கேட்கின்றார். கடவுளும் அனுமதிக்கவே, யோபு தன் பிள்ளைகளையும், அனைத்துச் செல்வங்களையும் இழந்தார். அதோடு, உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை எரியும் புண்களால் வாட்டி வதைக்கப்பட்டார். ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு சாம்பலில் உட்கார்ந்தார். அவரின் மனைவியும், தோழர்களும் நிந்தித்தனர். ‘ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக’ என்று அவர் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்திருந்தார். இவை அனைத்திலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.

யோபு சோதனையில் வென்றிட, இழந்த செல்வங்கள் எல்லாவற்றையும் கடவுள் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுவுக்கு இருந்தனவற்றையெல்லாம் இரண்டு மடங்காக்கினார். நான்காம் தலைமுறைவரை கண்டு, முதுமையடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.

3. சோதிக்கப்பட்ட இறைமகன் இயேசு:

ஆண்டவர் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூயஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். பசியுற்ற அவரிடம், ‘கற்கள் அப்பமாகும்படி செய்யும்’ என வேண்டினான். இறையுறவைச் சோதித்திட, ‘இறைமகன் என்றால் கீழே குதியும்’ என்றான். உலகத்தைக் காண்பித்து, ‘என்னை வணங்கினால் அனைத்தையும் உமக்குத் தருவேன்’ என்றான். ‘அகன்று போ, சாத்தானே’ என்று அலகையை விரட்டி சோதனையில் வென்றார். உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

என் சகோதர சகோதரிகளே, நீங்கள் சோதனைகளுக்கு உள்ளாகும் போது, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும். உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல, கடவுள் நம்பிக்கைக்குரியவர். ‘அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார், சோதனை வரும்போது அதைத்தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார், அதிலிருந்து விடுபட வழி செய்வார்’. (1 கொரி 10:13).

அருட்பணி. ம.பென்னியமின்,
தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.


Next Story