நன்மைகளை வழங்கும் கிரகமாலிகா யோகம்


நன்மைகளை வழங்கும் கிரகமாலிகா யோகம்
x
தினத்தந்தி 3 May 2019 3:22 AM GMT (Updated: 3 May 2019 3:22 AM GMT)

ஜோதிட நூல்கள் உயர்வாகக் குறிப்பிடும் யோகங்களில் ‘கிரகமாலிகா யோகம்’ என்பது முக்கியமான இடத்தில் இருக்கிறது

ஒருவரது ஜாதகத்தில் நவக்கிரகங்களும் மாலை போன்ற அமைப்பில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த ராசிகளில் வரிசையாக அமைந்திருப்பது ‘கிரகமாலிகா யோகம்’ ஆகும். ஒன்பது கிரகங்களும் தனித்தன்மையான நிலையில் இயங்கி வருவதுடன், அவற்றிற்கென தனித்துவம் கொண்ட இயல்புகளும் உள்ளன. ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள், மற்ற கிரகங்களுடன் இணையாமல் சுயத்தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுப்பலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகம் தனித்தன்மையுடன் இயங்கும் நிலை கிரகமாலிகா யோகம் மூலமே நடக்கும்.

இந்த யோகத்தில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்று பலவீனங்களை அடைவதில்லை. குறிப்பாக, பகைக் கிரகங்கள் ஒரு ராசியில் இணையும்போது அந்த வீட்டிற்கான பலன்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. நட்புக் கிரகங்கள் இணைவது யோகமாக இருந்தாலும், அதில் கிரகங்களின் கலப்பு பலன்கள்தான் நடைமுறையில் இருக்கும். தனிப்பட்ட கிரகத்தின் சுய இயல்பு பலன்கள் முழுவதுமாக கிடைக்காது. அதன் அடிப்படையில் கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல், அடுத்தடுத்த வீடுகளில் வரிசையாக அமர்ந்து நன்மைகளை அளிப்பதே இந்த யோகத்தின் சிறப்பம்சமாகும்.

கிரகமாலிகா யோகத்தில் உள்ள முக்கியமான விதி என்பது எந்த வீட்டிலிருந்து எந்த வீடுவரை கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன என்பதாகும். அதாவது, ஒருவருக்கு ஜாதக ரீதியாக நன்மைகளை செய்யக்கூடிய கேந்திர ஸ்தானங்கள் (1,4,7,10) மற்றும் திரிகோண ஸ்தானங்கள் (5,9) ஆகிய ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கிரகங்கள் வரிசையாக, ஒன்றன்பின் ஒன்றாக அமர வேண்டும்.

அப்போதுதான் இந்த யோகம் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கும் என்று ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாறாக 6,8,12 ஆகிய ஏதாவது ஒரு வீட்டிலிருந்து கிரகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக அமர்ந்திருப்பது நன்மைகளைச் செய்யாது என்பதை ஜோதிட வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.


Next Story