தம்பதியர் ஒற்றுமை காக்கும் தலம்


தம்பதியர் ஒற்றுமை காக்கும் தலம்
x
தினத்தந்தி 8 May 2019 12:22 PM GMT (Updated: 8 May 2019 12:22 PM GMT)

இத்தல இறைவன்-இறைவியை பிரார்த்தனை செய்தால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

ஒரு சமயம் ஏதோ காரணமாக இறைவனுடன் அன்னை காமாட்சி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாள்.

இறைவியின் வாக்குவாதம் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கோபமடைந்த இறைவன் இறைவியை பூலோகம் செல்லும்படி சபித்தார். வேதனையடைந்த இறைவி, இறைவனிடம் “நான் தங்களை வந்தடைவது எப்போது?” எனக் கேட்டாள்.

கோபம் தணிந்த ஈசன் “பந்தணைநல்லூருக்கு அருகே நான் விசுவநாதர் என்ற நாமத்துடன் கோவில் கொண்டுள்ளேன். அங்கு வந்து நீ என்னை பூஜிப்பாயாக!” என அருளினார்.

இதையடுத்து இறைவி, இத்தலம் வந்து இறைவனை நோக்கி தவமிருந்து பூஜை செய்தாள்.

மனம் குளிர்ந்த இறைவன், அன்னை காமாட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டார். அந்தத் தலம் ‘காமாட்சிபுரம்’ என அன்னையின் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

பச்சைப்பசேல் வயல் வெளிகள், தென்றல் வருடும் நெற்கதிர்கள், மெல்லிய ரீங்காரத்துடன் அசைந்தாடும் கரும்புத் தோட்டங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஊரின் நடுவே அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம்.

சிறிய கோபுரத்துடன் கூடிய அழகிய முகப்பு மண்டபம், நம் கண்களைக் கவரும். கிழக்கு திசை நோக்கி அமைந்த பழமையான இந்த ஆலயத்தின் முகப்பைத் தாண்டி உள்ளே சென்றால், விசாலமான பிரகாரம் உள்ளது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி விசாலாட்சி நின்ற கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறாள். இறைவியின் கருவறை நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகியரின் சுதை வடிவத் திருமேனிகள் உள்ளன. இத்தலத்தின் பெயருக்குக் காரணமான அன்னை காமாட்சியை, இறைவி விசாலாட்சியின் கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.

அர்த்த மண்டபத்தின் முன் நந்தியும், பலி பீடமும் இருக்கிறது. நுழைவு வாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் அழகிய திருமேனிகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. கருவறையில் இறைவன் காசி விசுவநாதர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி தன்னைத் தானே பூஜை செய்து கொண்டவர் என பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரகாரத்தின் மேற்கு திசையில் விநாயகர், முருகன், வள்ளி- தெய்வானை, மகாலட்சுமி கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்கின்றனர். வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரரின் சன்னிதி உள்ளது. கிழக்கில் சனீஸ்வரனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. எனவே இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. பைரவர், சூரியன் திருமேனிகளும் கிழக்குப் பிரகாரத்தில் உள்ளன.

தினசரி ஒரு கால பூஜை மட்டுமே இங்கு நடக்கிறது. சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி மாதம், சோம வாரம், கார்த்திகை போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி பவுணர்மியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

ஊடல் காரணமாக கணவனைப் பிரிந்த இறைவி, மீண்டும் அவருடன் சேர்ந்த தலம் இது. எனவே பிரிந்து வாழும் தம்பதியர் இத்தலத்து இறைவன் - இறைவியை பிரார்த்தனை செய்தால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வர் என்பது நம்பிக்கையாக திகழ்கிறது.

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் - பந்தநல்லூர் பேருந்துத் தடத்தில் பந்தநல்லூருக்கு வடமேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது காமாட்சிபுரம்.

-மல்லிகா சுந்தர்

Next Story