ஆன்மிகம்

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை + "||" + Thirumoorthy hill

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை

மும்மூர்த்திகளும் அருளும் திருமூர்த்தி மலை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலிலே அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. எண்ணற்ற சித்தர்கள், தங்கள் தவ வலிமையைப் பெருக்கிக் கொண்ட ஆற்றல் நிறைந்த இடமாக இது விளங்குகிறது.
இறைவன் அருள்புரியும் திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் சிறிய குன்றில் சுயம்புவாக அருள்பாலிக்கின்றனர். இது ஒரு குடவரைக் கோவிலாகும். குரு அம்சமான தத்தாத்ரேயர் அவதரித்த புண்ணிய ஸ்தலம் இதுவாகும்.

சப்த ரிஷிகளில் முதன்மையானவராக விளங்குபவர், அத்ரி மகரிஷி. இவரது தர்மப் பத்தினியாக இருந்தவர் கற்புக்கரசி அனுசுயாதேவி. இவர் அத்ரி முனிவருடன் சேர்ந்து தவ வாழ்க்கை மேற்கொண்ட புனித யோக பூமிதான் திருமூர்த்தி மலை. பதஞ்சலி மகரிஷி, திருமந்திரத்தை அருளிய திருமூலர் மற்றும் குரு தத்தாத்ரேயர் ஆகியோர் அந்த தெய்வீகத் தம்பதியருக்குப் பிறந்த அவதாரப் புருஷர்கள் ஆவார்கள்.

மும்மூர்த்திகளே தமக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது அத்ரி மகரிஷியின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டும், இவரது மனைவி அனுசுயாதேவியின் கற்பின் மகிமையை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டவும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு தோன்றினர்.

ஒரு முறை அத்ரி மகரிஷி வெளியே சென்ற போது, மும்மூர்த்திகளும் அனுசுயாவை தேடி வந்து தங்களுக்கு நிர்வாணமாக பிச்சையிடுமாறு வேண்டினர். அனுசுயாவை தன் கணவனை மனதால் நினைத்து, தீர்த்தத்தை அவர்கள் மீது தெளிக்க மூவரும் குழந்தைகளாக மாறினர். பின் அந்த குழந்தைகளுக்கு நிர்வாணமாக பாலூட்டி, அவர்கள் வேண்டுதலை நிறைவேற்றினார். இந்த நிகழ்ச்சி நடந்த தலமே திருமூர்த்தி மலை.

இந்த மலையின் மீது ‘பஞ்சலிங்க அருவி’ என அழைக்கப்படும் அருவி ஒன்றும் உள்ளது. அங்கே மலையின் மீது பஞ்ச லிங்கம் உள்ளது. அத்ரி மகரிஷியும் அவரது மனைவி அனுசுயாவும் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபட்டு வந்துள்ளார்கள். இன்னமும் அவர்கள் தினமும் இந்த பஞ்ச லிங்கத்தை வழிபடுவதாக நம்பப்படுகிறது. மேலும் குரு முனி அகத்தியர் கண்டு வணங்கிய இடமே ‘பஞ்சலிங்கம்’ என வழங்கப்படுகிறது.

பழனியில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில், உடுமலையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமூா்த்தி மலை அமைந்துள்ளது. உடுமலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

-அறந்தாங்கி சங்கர்