வேண்டிய வரம் தரும் குலதெய்வ வழிபாடு


வேண்டிய வரம் தரும் குலதெய்வ வழிபாடு
x
தினத்தந்தி 8 May 2019 12:31 PM GMT (Updated: 2019-05-08T18:01:26+05:30)

ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம்.

பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது.

தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ‘கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்’ என்றும் சொல்வார்கள்.

ஒரு குடும்பத்தின் முன்னோர்களில் தெய்வமாக மாறிய புண்ணிய ஆன்மாக்கள், சம்பந்தப்பட்ட குலத்தை சார்ந்தவர்களைக் காக்கும் வல்லமை பெற்றவை என்பது ஆன்மிக ரகசியமாகும். அவை, ஒருவரது பூர்வ கர்ம வினைகளையும் கூட அகற்றி விடும் சக்தி பெற்றவை. குல தெய்வங்கள் தெரியாதவர்கள், எந்த தெய்வத்தையும், எந்த ஆலயத்திலும் சென்று வழிபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதன் மூலம் பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கத்தை ஓரளவுக்குதான் நிவர்த்தி செய்ய முடியும். அதுவே குலதெய்வ வழிபாடு என்றால், நம்முடைய கர்மாக்கள் முற்றிலும் நிவர்த்தியாகிவிடும் என்பதுதான் அதன் சிறப்பு அம்சம்.

பொதுவாக, குறிப்பிட்ட ஒரு பரம்பரையில் வழிகாட்டியாய் வாழ்ந்து, மறைந்த முன்னோர்கள் அல்லது கன்னியாக இருந்து மறைந்த பெண்களை தங்கள் வீட்டுத் தெய்வமாக வழிபடுவது தமிழர் கிராமிய பண்பாடாக இன்றும் உள்ளது. பெரும்பாலும், பெண் வடிவமாகவே இருக்கும் அவற்றை வீட்டுச் சாமி, குடும்பத் தெய்வம், கன்னித் தெய்வம், குல சாமி என்று பல்வேறு பெயர்களால் அழைப்பார்கள். அந்த நிலையில் குலதெய்வம் என்பது ஒருவரது நலன்களில் அக்கறை காட்டும் இறை சக்தியாக இருந்து வருகிறது. குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குல தெய்வத்தின் அனுக்கிரகம் இல்லை என்றால், ஒருவர் எவ்வளவு சக்தி வாய்ந்த ஹோமம் அல்லது யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.

குலதெய்வமாக மாறிய திரவுபதி

மகாபாரத யுத்தம் முடிந்த நிலையில், தர்மர் ஆட்சியில் அமர்ந்தார். அவர் சுமார் 36 ஆண்டுகள் நாட்டை ஆண்டு வந்தார். ஆட்சியில் அமர்ந்ததும் கிருஷ்ணர் துவாரகைக்கு சென்று விட்டார். தர்மர் ஆட்சியில் இருந்தபோது கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு நீங்கி விட்டார் என்ற செய்தியைக் கேட்டு அனைவரும் துயர் அடைந்தார்கள். கிருஷ்ணர் இன்றி இனி தமக்கும் இந்த உலகில் வாழ அருகதை இல்லை என்று நினைத்த பாண்டவர்கள், ராஜ்ஜியத்தை அர்ச்சுனனின் பேரன் பரிஷித்திடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் சிவலோக பதவி அடைய இமயமலையை நோக்கி பயணம் செய்தனா். சிவபெருமானே அவர்களுடைய வம்சத்துக்கு குல தெய்வமாக இருந்தார்.

இமயமலையை அடைந்தபோது, அவர்கள் தவறான பாதையில் நுழைய இருந்தனர். அதைத் தடுக்கும் நோக்கத்தில், சிவபெருமான் தன்னை ஒரு பெரிய கல்லாக மாற்றிக் கொண்டு மேலிருந்து உருண்டு விழுந்து, அவர்கள் செல்ல இருந்த பாதையை மறைத்து நின்றார். தனது சகோதரர்கள் மற்றும் திரவுபதியுடன் நடந்து கொண்டிருந்த பீமன், அந்தப் பாறையைப் பிளக்க தனது கதையை ஓங்கினான். அப்போது அவர்கள் முன் சிவபெருமான் தோன்றினார்.

உடனே பீமனும் அவரது சகோதரர்களும் சிவபெருமானை நமஸ்கரித்து, முக்தி தருமாறு வேண்டினார்கள். அவர்களுக்கு முக்தி தந்த பின், சிவபெருமான் அங்கேயே சிவலிங்கமாக மாறினார். பூர்வ ஜென்மத்தில் சாபம் பெற்று பூமியில் பிறந்து இருந்த திரவுபதி, சிவபெருமானை தரிசித்தவுடன் சாப விமோசனம் பெற்று மறைந்துவிட்டாள். அதைக் கண்டு பாண்டவர்கள் அழுதார்கள். அவர்களை தேற்றிய சிவபெருமான், “இனி பாண்டவர்கள் வம்சத்தைச் சேர்ந்த வம்சாவளியினர் திரவுபதியை அவர்களது குல தெய்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள் என்று அருள்புரிந்தார். இமயமலையில் சிவன் அவர்களுக்கு காட்சி தந்த இடத்தில்தான் தற்போது கேதார்நாத் ஆலயம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

குலதெய்வம் பற்றி அறிய..

ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள்புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது குலதெய்வம். பிறகு காவல் தெய்வம். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால், நம்முடைய குலம் தழைத்து, வரும் சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள், வளர்பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாத்தி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலை படிக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். அதன்மூலம் குடும்பத்தின் குலதெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரையாகும்.

சங்கராச்சாரியாரின் கருத்து

குல தெய்வ வழிபாடு எவ்வளவு முக்கியமானது என்பதை, மறைந்த காஞ்சி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு குடும்பத்தின் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வமே ‘குலதெய்வம்’ ஆகும். முன்னோர்கள் என்றால், தந்தைவழி பாட்டன்- பாட்டி ஆகியோரை கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள தந்தை வழி பாட்டன் வரிசையில், கச்சிதமான ஒழுங்குமுறை இருப்பதை காண முடியும். அதை ‘கோத்திரம்’ (உட்பிரிவு) என்று சொல்வார்கள். மற்ற கோத்திரத்தில் பிறந்த பெண்கள்தான் ஒரு குடும்பத்தில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்க்கைத் துணையாக இருந்திருப்பார்கள். ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்படாமல் வாழ்க்கை பாதையை அவர்கள் அமைத்துக்கொண்டிருப்பார்கள். அதனால், பரம்பரையானது சங்கிலி போல ஒரே சகோதரத்துவ தொடர்ச்சியாக அமைந்து இருக்கும். இது ஒரு முக்கியமான சமூக உளவியல் ஒழுங்குமுறை சார்ந்த விஷயமாகும்.

அவர்கள் அனைவருமே கோத்திர வழி மாறாதபடி, குலதெய்வம் என்னும் தெய்வ சக்தியை வழி வழியாக பிரார்த்தனை செய்திருப்பார்கள். தலைமுடி எடுப்பது, காது குத்துவது போன்ற நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும். இந்த உலகத்தில் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும், குலதெய்வக் கோவிலுக்கு சின்ன வயதிலேயே அனைவரையும், தாய்- தந்தையர் அழைத்துச் சென்று வழிபடக் கற்றுக் கொடுத்திருப்பார்கள். அதன்படி குல தெய்வ கோவிலில் நிற்கும்போது, குறிப்பிட்ட ஒருவரது பரம்பரை வரிசையில் அவர் நிற்பதாக ஐதீகம். அந்த வரிசை முறையிலான தொடர்பை வேறு எந்த விதத்திலும் அமைத்துக்கொள்ள இயலாது.”

Next Story