இறைவனின் ஆசீர்வாதம் எப்போது கிடைக்கும்?


இறைவனின் ஆசீர்வாதம் எப்போது கிடைக்கும்?
x
தினத்தந்தி 10 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 4:35 PM IST)
t-max-icont-min-icon

கண்களில் காண்பவைகளை எல்லாம் அனுபவிக்கும் தகுதியைப் பெறுவதும், நினைப்பதையெல்லாம் பெறக்கூடிய செல்வாக்கைப் பெற்று வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று பலரும் நினைக்கிறோம்.

தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.

நாம் தேர்வு செய்துகொள்ளும் பாதைதான், நமது மற்றும் வாரிசுகளின் வாழ்க்கையில் இறைவன் அருளும் சமாதானத்தை அளி(ழி)ப்பதாக அமைகிறது.

செல்வத்தை அடைந்தாலே மற்ற எந்த பிரச்சினைகளையும் சமாளித்துவிட முடியும் என்ற சிந்தனைதான், செல்வத்தை அடைய தீய வழிகளை நோக்கிச்செல்ல பாதை அமைத்துத் தருகிறது. இறைவனால் நிர்ணயித்துத் தரப்படும் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை மட்டுமே சிந்தித்து செயல்பட்டால், பிரச்சினைகளை வராமலேயே தவிர்த்துவிடலாம் என்பதுதான் வாழ்வியலின் சத்தியமாகும்.

ஆனால் இந்த அடிப்படை சத்தியத்துக்கு முரணான போதனைகள்தான் செழிப்பை விரும்பும் பலரது சிந்தனைக்கு தீனி போட்டு தீயவழியில் நடக்கச் செய்கின்றன. இறைவனை வழிபடுவதற்கான வழிகளை பலரும் போதிக்கின்றனர்.

மனிதன் கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்துவிடுவாரா? அவற்றையெல்லாம் இறைவன் நமக்குக் கொடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பவை ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள். இவற்றுக்கு யோவான்15:16-ம் வசனம் நேரடியாக பதிலளிக்கிறது. “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங் களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று இயேசு கூறியுள்ளார்.

இந்த வசனத்தை பொருள் மாறாமல் சற்று விளக்கமாகச் சொன்னால், நமது பக்தி வாழ்க்கைக்குத் தேவையானது எது என்பதை முதலில் முடிவு செய்து, அதை இயேசுவின் மூலமாக பிதாவிடம் விண்ணப்பமாக வைக்க வேண்டும். அவர் கூறியுள்ளபடி கனி கொடுக்கும் வாழ்க்கையை வாழும்போது அதைப் பெறும் தகுதி கிடைக்கிறது.

இந்த வசனத்தை மூன்றாகப் பிரித்து ஆராயலாம். முதலாவது, பிதாவைக் கேட்டுக்கொள்ளக்கூடியவை எவை? இரண்டாவது, அவற்றைப் பெறுவதற்காக வாழ்க்கையின் மூலம் கொடுக்க வேண்டிய கனிகள் எவை? மூன்றாவது, அந்தக் கனிகளை எப்படி, யாருக்குக் கொடுக்க வேண்டும்?

வேதத்தில் பல சத்தியங்கள் மறைக்கப்பட்டதாயும், பல சத்தியங்களை சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலமாக அறியக் கூடியதாகவும் உள்ளன. இங்கு முதலாவது கேட்கப்பட்ட கேள்விக்கு வேதம் நேரடியான பதிலை தெளிவாக அளிக்கிறது. மத்.6:31-33-ம் வசனங்களில், “உண் பதையும், உடுப்பதையும் பற்றி கவலைப்படாமல், இறைவன் நம்மை ஆளும் படிக்கு நடந்துகொள்ள வேண்டிய அவரது நீதி என்னென்ன என்பதையே முதலில் தேடுங்கள்” என்று கூறுகிறது.

அதாவது, வாழ்க்கையின் கடைசிவரை நல்ல உணவு கிடைப்பதற்காக நன்றாக சம்பாதிக்க வேண்டுமே; மற்றவர்கள் முன்பு நன்றாக உடுத்திக்காட்டுவதற்காக மிகுந்த செல்வாக்கை பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் அவற்றைத் தேடி ஓடினால், உலக பாவங்களில் விழுந்து நம்மையும், நமது வாரிசுகளின் வாழ்க்கையையும் பாழ்படுத்திவிட நேரிட்டுவிடும்.

நமக்கு அமைந்துள்ள வாழ்க்கையில் நமது சம்பாத்தியம் சரியானதுதானா? நமது பேச்சில் உண்மையுள்ளதா? உள்நோக்கம் உள்ளதா? சிந்தனையிலும் பாவக்கறைகள் உள்ளதா? அடுத்தவரின் பொருளை அபகரித்து வைத்திருக்கிறோமா? என்றெல்லாம் சிந்தித்து, இறைநீதிக்கு உட்பட்ட செயல்பாடுகளைத் தேடித்தேடிச் செய்வதுதான் வாழ்வின் முழுமுதல் கடமையாகும் என்று அந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

ஆக, இப்படிப்பட்ட அனைத்து காரியங் களிலும் இறைநீதிக்குட்பட்டு செயல்படாதபடி நாம் வாழ்ந்தோமானால், எங்கெல்லாம் தவறுகிறோமோ அங்கெல்லாம் செய்யப்பட வேண்டிய இறைநீதிதான், இறைவனிடம் நாம் கேட்க வேண்டியதாக உள்ளது என்பது முதல் கேள்விக்கான விடையாக அமைகிறது.

இப்படி கேட்டதை இறைவன் கொடுக்க வேண்டுமானால், இயேசு கூறியபடி கனி கொடுத்தாக வேண்டும். அந்தக் கனிகள் எவை? மத்.3:8-ம் வசனம், ‘மனந்திரும்பு தலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்’ என்று உரைக்கிறது. அதாவது, சரீரத்தினால் செய்யப்படும் பாவங்கள், உள்ளத்தின் எண்ணங்களினால் செய்யப்படும் பாவங்கள், ஜென்ம சுபாவங்களினால் செய்யப்படும் பாவங்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டு, இயேசுவின் போதனைகளின்படி இறைப்பாதைக்கு திரும்பக்கூடிய மனந்திரும்புதல் என்பதுதான் முதல் கனியாகும்.

இந்தக் கனியைக் கொடுத்தவனிடம் காணப்படும் மற்ற கனிகள் எவை என்பதை, கலா.5:22, எபே.5:9 ஆகிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாவது கேள்விக்கும் பதிலாக அது அமைகிறது. அதாவது, சாதி-மதம் பார்க்காமல் எல்லாரிடத்திலும் அன்புகாட்டுவது, எந்தப் பிரச்சினை வந்தாலும் சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமையாக இருப்பது, பகைப்பவனுக்கும் தயை காட்டுவது என பல நற்குணங்கள், கனி களாகக் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கனிகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற மூன்றாம் கேள்விக்கான பதிலை இயேசு நேரடியாகவே போதிக்கிறார். அதை மத்.5:39-44-ம் வசனங்களில் காணலாம். ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு; உன் வஸ்திரத்துக்காக வழக்காடுபவனுக்கு உன் அங்கியையும் சேர்த்துவிட்டுக்கொடு; கேட்பவன் எவனென்றாலும் அதை அவனுக்குக் கொடு; பகைப்பவனின் நன்மைக்காக ஜெபம் செய், என்றெல்லாம் பெரிய பட்டியலை, ஒவ்வொரு பக்தனும் வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய கனிகளாக இயேசு சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் நடத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்.

ஆக, இப்படிப்பட்ட கனிகளை நம் வாழ்க்கையில் கொடுக்க முற்படும்போதுதான் யோவான்15:16-ம் வசனத்தில் கூறியபடி, நாம் கேட்டுக்கொண்டதை இறைவன் கொடுக்கிறார். அதோடு விட்டுவிடாமல், மத்.6:33-ல் சுட்டிக்காட்டியபடி, உலக காரியங்களையும் கூடுதல் ஆசீர்வாதமாக இறைவன் அளிப்பார்.

எனவே தவறான போதனைகளில் சிக்கி, தேவையற்றதை இறைவனிடம் கேட்காமல், வேதம் கூறியபடி தகுதியுடன் அவரிடம் கேட்டு ஆசீர்வாதங்களைப் பெறுவோமாக.

ஜெனட், சென்னை

Next Story