பசி தாங்காத திருவார்ப்பு கிருஷ்ணர்


பசி தாங்காத திருவார்ப்பு கிருஷ்ணர்
x
தினத்தந்தி 14 May 2019 2:58 PM IST (Updated: 14 May 2019 2:58 PM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், திருவார்ப்பு எனும் ஊரில் பசி தாங்காத கிருஷ்ணர் கோவில் ஒன்று இருக்கிறது

பன்னிரண்டு ஆண்டு வனவாச காலத்தின் போது வழிபடுவதற்காக, தனது உருவச் சிலை ஒன்றை பாண்டவர்களுக்கு, கிருஷ்ணர் கொடுத்திருந்தார். பாண்டவர்களும் தங்களது வனவாசக் காலம் முழுவதும் அந்தச் சிலையை வைத்து வழிபட்டு வந்தனர்.

அவர்கள் வனவாசம் முடிந்து, நாட்டிற்குத் திரும்ப இருந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள், அந்தக் கிருஷ்ணர் சிலையைத் தங்கள் வழிபாட்டுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லும்படி பாண்டவர்களிடம் கேட்டனர். பாண்டவர்களும், அச்சிலையை அவர்களிடம் கொடுத்தனர்.

சிலையைப் பெற்றுக் கொண்ட சேர்தலைப் பகுதியைச் சேர்ந்த மக்கள், அதனை ஓரிடத்தில் நிறுவி வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், அவர்களால் அந்தச் சிலையைத் தொடர்ந்து வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அவர்கள் அந்தச் சிலையைக் கடலில் போட்டுவிட்டனர்.

நீண்ட காலத்திற்குப் பின்பு முனிவர் ஒருவர், அந்தப் பகுதியின் வழியாகப் படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகு, ஓரிடத்தில் நகராமல் நின்றது. திடீரென்று கடல் நீர் வற்றியதுடன், கிருஷ்ணர் சிலை ஒன்று தென்பட்டது. முனிவர் சிலையை எடுத்துக் கொண்டு மேற்கு திசை நோக்கி புறப்பட்டார். ஆனால் படகு மேற்கு நோக்கிச் செல்லாமல், தானாகவே கிழக்குப் பகுதியில் உள்ள குன்னம், பள்ளிக்கரா வழியா பயணித்து, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தை அடைந்து நின்றது.

படகில் இருந்து இறங்கிய முனிவர், அங்கு சிலை எதுவும் நிறுவப்படாமல் இருந்த கோவில் ஒன்றைக் கண்டார். அங்கு அச்சிலையை நிறுவி வழிபாட்டுக்குரியதாக மாற்றினார் என்று ஆலய வரலாறு சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

கடற்கரைப் பகுதியில் உள்ள மீனாட்சி ஆற்றின் கரை அருகில் அமைந்திருக்கிறது இந்த ஆலயம். இங்கு கருவறையில் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்கிறார். இச்சிலையின் முன்புறத்தில் இருக்கும் வலது கையில் உணவு இருக்கிறது. பின்புறத்தில் இருக்கும் இரு கைகளில் சங்கு, சக்கரம் இருக்கின்றன. இக்கோவில் வளாகத்தில் சிவபெருமான், பகவதி, கணபதி, சுப்பிரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னிதிகளும் உள்ளன.

கம்சனைக் கொன்று விட்டு, மிகுந்த கோபத்துடனும், அதிகப் பசியுடனும் இருந்த கிருஷ்ணர் தோற்றமாக இச்சிலை கருதப்படுகிறது. எனவே ஆலயத்தில் அதிகாலை வேளையில், மூலவருக்கு அபிஷேகம் முடிந்தவுடன் முதலில் மூலவரின் தலையை உலர்த்தி அவருடைய கோபம் குறைக்கப்படுகிறது. அதன் பிறகு, அவரது பசியைத் தீர்க்கும் வகையில் அவருக்கு உசா பாயசம் எனும் உணவு படைக்கப்படுகிறது. அதன் பிறகே, உடல் பகுதி உலர்த்தப்படுகிறது.

இந்தக் கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் பசியைத் தாங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே அதிகாலை வேளையில் கோவில் திறக்கப்படும் போது, அர்ச்சகர் கோடரி ஒன்றை வைத்துக் கொண்டே கோவில் நடையைத் திறக்கிறார். கோவில் பூட்டைத் திறக்கத் தாமதம் ஏற்பட்டால், அவர் கையில் வைத்திருக்கும் கோடாரியைக் கொண்டு கதவை உடனடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பசியுடன் இருக்கும் கிருஷ்ணருக்குக் கால தாமதமின்றி, உணவு படைத்து வழிபாடுகளை நடத்த வேண்டும் என்பதற்காக, இந்தச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கின்றனர்.

இந்து சமயக் கோவில்கள் அனைத்தும் சூரிய கிரகண வேளைகளில் மூடப்பட்டு விடும். அதே போன்று, இக்கோவிலும் ஒரு முறை சூரிய கிரகணத்தின் போது மூடப்பட்டது. கிரகணக் காலம் முடிந்த பிறகுக் கதவைத் திறந்திருக்கின்றனர். அப்போது மூலவரின் இடுப்புப் பட்டை வீழ்ச்சியடைந்து போயிருந்தது. அதனைக் கண்ட அர்ச்சகரும் பக்தர்களும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆதிசங்கரர், இங்கிருக்கும் கிருஷ்ணர் மிகவும் பசியாக இருப்பதால்தான் அவ்வாறு நடந்தது என்றும், இனி கிரகண வேளைகளில் கோவிலை அடைக்க வேண்டாம் என்றும் கூறிச் சென்றார். அன்றில் இருந்து கிரகணத்தின் போது இத்தலம் மூடப்படுவது இல்லை.

இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுச் சாப்பிடும் பக்தர்களுக்கு, அவர்களது வாழ்நாளில் பசிப் பிணி ஏற்படாது என்கிறார்கள். இதற்காகவே, இக்கோவிலில் இரவு வேளையில் கோவிலின் நடைசாத்துவதற்கு முன்பாகப் அர்ச்சகர், ‘இங்கு யாராவது பசியோடு இருக்கிறீர்களா?’ எனக் கேட்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆலயம் தினமும் அதிகாலை 2 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் அதிகாலை 2 மணிக்கு திறக்கப்படும் ஒரே ஆலயம் இதுதான் என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

கேரள மாநிலம், கோட்டயம் நகரில் இருந்து வடமேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவார்ப்பு என்னும் இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. கோட்டயத்தில் இருந்து அதிகமான பேருந்து வசதிகள் உள்ளன.

- தேனி மு.சுப்பிரமணி


Next Story