இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : நன்றி பாராட்டுவது


இனிய வாழ்வு தரும் இறை நம்பிக்கை : நன்றி பாராட்டுவது
x
தினத்தந்தி 14 May 2019 9:47 AM GMT (Updated: 2019-05-14T15:17:37+05:30)

இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது.

இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘நன்றி பாராட்டுவது’ குறித்த தகவல்களை காண்போம்.

நன்றி பாராட்டுவது என்பது இறைநம்பிக்கையின் உள்ளம் சார்ந்த ஒரு பகுதியாகும். வாயால் நன்றி என்று கூறினாலும், இதர உறுப்புக்களை அசைத்து, பணிந்துருகி நன்றியை வெளிப்படுத்தினாலும், அது சாதாரண நன்றியாக மட்டும் தான் இருக்கும்.

நன்றி பாராட்டுவதன் பிறப்பிடம் உள்ளம் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த நன்றி வெளிப்படும் தன்மைகள் பலவிதமாக அமையலாம். எப்படி இருந்தாலும் அது மனதார அமையவேண்டும். அது உளமாற உருவாக வேண்டும். இதுவே உண்மையான நன்றி பாராட்டுவதாக இருக்கும்.

நன்றி பாராட்டுவது என்பது வானவர்களின் வணக்கமாகவும், நபிமார்களின் அடையாளமாகவும், நல்லோர்களின் தனித்தன்மையாகவும் இயல்பாகவே அமைந்துள்ளன.

வானவர்கள் சர்வகாலமும் இறைவணக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைவனுக்கு நன்றி பாராட்டி வருகிறார்கள்.

நபிமார்கள் அனைவரும் இறைவனுக்கு நன்றி பாராட்டுவதையே தங்களின் வாழ்வின் அடையாளமாக பிரதானப்படுத்தி உள்ளார்கள். அந்த வரிசையில் சில நபிமார்கள் தங்கள் நன்றி உணர்வை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை இறைவன் திருக்குர் ஆனில் குறிப்பிட்டு இருக்கிறான்.

இப்ராகிம் (அலை) அவர்களின் நன்றியுணர்வு குறித்து திருக்குர்ஆன் பேசும்போது, ‘இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் முதுமையில் எனக்கு வழங்கிய இறைவனுக்கே புகழனைத்தும். என் இறைவன் பிரார்த்தனையை ஏற்பவன் (என இப்ராகிம் (அலை) நன்றி கூறினார்).’ (திருக்குர்ஆன் 14:39)

இப்ராகிம் (அலை) அவர்களின் நன்றி ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று மொழிவதாக வெளிப்பட்டது.

இறைவனுக்கு நன்றி பாராட்டுவதில் உயிரை வெளியேற்ற வேண்டியதில்லை. மனதார உணர்வை வெளிப்படுத்தினாலே போதும்.

நூஹ் (அலை) அவர்களைப் பார்த்து ‘நீரும், உம்முடன் கப்பலில் இருப்போரும் நன்றியை வெளிப்படுத்துங்கள்’ என்று இறைவன் கூறுவது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் ‘அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய இறைவனுக்கே புகழனைத்தும்’ எனக் கூறுவீராக”. (திருக்குர்ஆன் 23:28)

வெள்ளப் பிரளயத்தில் இருந்து பாதுகாத்த இறைவனுக்கு நூஹ் (அலை) அவர்களும், அவருடன் இருந்தோரும் நன்றி பாராட்டினார்கள்.

நபி தாவூத் (அலை), அவரின் மகன் நபி சுலைமான் (அலை) ஆகிய இருவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை கொடுத்து சிறப்பித்ததற்கு அவர்களிடமிருந்து வந்த நன்றியுணர்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“தாவூதுக்கும், சுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த இறைவனுக்கே புகழனைத்தும்’ என்று அவ்விருவரும் கூறினார்கள்”. (திருக்குர்ஆன் 27:15)

நபி (ஸல்) அவர்கள் இரவு முழுவது கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுதார்கள். இதைக்கண்ட அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி), ‘இறைத்தூதரே, தங்களின் முன் பின் பாவங்கள் யாவும் மன்னிக்கப்பட்டு விட்டதே, பிறகு ஏன் இவ்வாறு நின்று தொழுகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

‘இறைவனுக்கு நான் நன்றியுணர்வு மிக்க அடியானாக ஆகிவிட வேண்டாமா?’ என நபிகளார் பதிலுரைத்தார்கள்.

மேற்கூறப்பட்ட சில நிகழ்வுகள் நபிமார்களிடம் வெளிப்பட்ட நன்றிஉணர்வுகள் ஆகும்.

நல்லோர்களான சுவனவாசிகளின் நன்றியுணர்வு

‘இறைவனுக்கே புகழனைத்தும், அவன் தனது வாக்குறுதியை எங்களுக்கு உண்மைப்படுத்திவிட்டான். சொர்க்கத்தில் நாங்கள் விரும்பியவாறு தங்கிட, இப்பூமியை எங்களுக்கு உடமையாக்கினான். உழைத்தோரின் கூலி நல்லதாகவே இருக்கிறது என்று அவர்கள் கூறுவார்கள்’. (திருக்குர்ஆன் 39:74)

இறைவன் மனிதர்களுக்கு ஏராளமான அருட்கொடைகளை வழங்கியுள்ளான். அவற்றை எல்லாம் நம்மால் எண்ணிவிட முடியாது. மேலும் அவனுக்கு நாம் நன்றி செலுத்தினால், இன்னும் அவன் தமது அருட் கொடைகளை அள்ளித்தருவான் என்பது இறைவனின் வாக்குமூலம் ஆகும்.

“நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது” என்று உங்கள் இறைவன் பிரகடனம் செய்ததை எண்ணிப் பாருங்கள். (திருக்குர்ஆன் 14:7)

‘நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் இறைவன் உங்களுக்கு வழங்கினான். இறைவனின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணிவிட முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்’. (திருக்குர்ஆன் 14:34)

மனிதர்களில் நன்றியுடையோர் மிகவும் குறைவு. நன்றி மறப்போர், நன்றி கெட்டோர் அதிகம். இதையும் இறைவன் ஆதங்கத்துடன் இவ்வாறு கூறுகிறான்:

‘எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்.’ (திருக்குர்ஆன் 34:13)

‘மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். அவனே இதற்கு சாட்சி.’ (திருக்குர்ஆன் 100:6,7)

‘அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா? (நன்மை-தீமை என) இருவழிகளை நாம் காட்டவில்லையா?’ (திருக்குர்ஆன் 90:8-10)

சிறுநீர் வெளியேறாமல் வயது முதிர்ந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுநீரும் வெளியேற்றப்படுகிறது. சில நாட்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து வீடு செல்ல அனுமதிக்கப்படுகிறார். அவருடைய மருத்துவ செலவு விவரம் அடங்கிய பட்டியல் கொடுக்கப்படுகிறது. அதனை பார்த்து விட்டு அவர் அழுதுவிட்டார்.

மருத்துவர்கள் காரணம் விசாரித்தபோது, ‘நான் மருத்துவ செலவை நினைத்து அழவில்லை. இரண்டு நாட்கள் சிறுநீர் வெளியேற்றியதற்காக என்னிடம் இவ்வளவு பணம் கேட்கின்றீர்களே. அருளும், அன்பும் உடைய எனது இறைவன் கடந்த 60 வருடங்களாக சிறிதும் தடங்கலின்றி சிறுநீர் வெளியேற்றியதற்காக இதுவரை ஒருபைசா கூட கேட்டு பில் அனுப்பவில்லை. அவனின் அருளை நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றேன்’ என்றார்.

இதுபோன்ற எண்ணிலடங்காத அருட்கொடைகளை இறைவன் நமக்கு வழங்கியுள்ளான். அதற்காக அவனுக்கு நாம் செய்யும் கைமாறு நன்றி பாராட்டுவதே.

‘(இறைவிசுவாசிகளே), இறைவன் உங்களுக்கு அளித்துள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட தூய்மையானதையே உண்ணுங்கள். நீங்கள் அவனையே வணங்குவோராக இருந்தால் இறைவனின் அருட்கொடைக்கு நன்றி செலுத்துங்கள்’. (திருக்குர்ஆன் 16:114)

நமக்கு பிற மக்கள் உதவி செய்தாலும், அவர்களுக்கும் நாம் நன்றி பாராட்ட வேண்டும். ‘மக்களுக்கு நன்றி பாராட்டாதவர், இறைவனுக்கு நன்றி பாராட்டுபவராக ஆகமுடியாது’ என நபி (ஸல்) கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) திர்மிதி).

மக்களுக்கும் நன்றி தெரிவித்து, இறைவனுக்கும் நன்றியுள்ள அடியார்களாக வாழ்வதே உண்மையான இறைநம்பிக்கையின் அடையாளம்.

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.


Next Story