திருமண வரம் தரும் வரதராஜப் பெருமாள்


திருமண வரம் தரும் வரதராஜப் பெருமாள்
x
தினத்தந்தி 14 May 2019 10:25 AM GMT (Updated: 14 May 2019 10:25 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அழகு கொஞ்சும் சிறிய கிராமம் தளிஞ்சி.

புதுக்கோட்டை மாவட்டம் தளிஞ்சி பிரதான சாலையை ஒட்டி, அகன்று பரந்துள்ள நீரோடை உள்ளது. அதைக் கடந்து வலது புறம் திரும்பினால் சிவபெருமான் ஆலயம் இருக்கிறது. அகஸ்தீஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கும் இந்த சிவலாயத்தைக் கடந்ததும், ஒரு பெருமாள் கோவில் உள்ளது.

‘வரதராஜப் பெருமாள் ஆலயம்’ என அழைக்கப்படும் இந்தக் கோவில், மிகவும் பழமையானது. இருப்பினும் சமீபத்தில் சீரமைக்கப்பட்ட இந்த ஆலயம் அழகாகவே விளங்குகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலய முகப்பில் இறைவன் சன்னிதியை தரிசித்தபடி கருடாழ்வார் தனி சன்னிதியில் அருள்பாலிக் கிறார்.

முன் மண்டப வாசலில் இடதுபுறம் கிருஷ்ணரும், வலதுபுறம் ஆஞ்சநேயரும் வீற்றிருக்கின்றனர். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் விஷ்ணு துர்க்கையின் திருமேனி உள்ளது. கருவறையில் வரதராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளுக்கு நான்கு கரங்கள். மேல் இரண்டு கரங்களில் சங்கு, சக்கரத்துடன் காட்சி தரும் இறைவன், தனது வலது கீழ் கரத்தில் அபய முத்திரையுடன் சேவை சாதிக்கிறார். மேலும் தனது இடது கீழ் கரத்தை இடையில் ஊன்றியபடி காட்சி தருகிறார். பெருமாளின் இருபுறமும் ஸ்ரீதேவியும், பூ தேவியும் உள்ளனர்.

இங்கு தினசரி இரண்டு கால பூஜைகள் நடை பெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி 30 நாட்கள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில், பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு உற்சவ மூர்த்தி இல்லை என்பதால், சுவாமி வீதி உலா வருவம் நிகழ்வு இங்கு கிடையாது.

தங்கள் வீட்டில் திருமண வயதை நெருங்கியும், திருமணம் ஆகாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டி, இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம். அவர்கள் வேண்டிக்கொண்ட சில வாரங்களிலேயே திருமணம் கை கூடிவிடுகிறது. அதனால் மகிழ்ச்சியும் பெற்றோர், பிள்ளைகளின் திருமணத்தை இறைவனின் சன்னிதியில் வைத்தே நடத்தி விடுகின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும், தேங்காய் துருவல் நைவேத்தியம் செய்து, அதை பக்தர் களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர புளியோதரை, பொங்கல், தயிர்சாதம் போன்றவற்றையும் நைவேத்தியமாக படைப்பது உண்டு.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். வியாழக்கிழமை தோறும் வெண்ணெய் சாத்தப்பட்டு, சிரித்த கோலத்தில் காட்சி தரும் இந்த ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர்.

தங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். தங்களின் கடன் தொல்லை தீர வேண்டும். பயிர் செழித்து வளர வேண்டும் என்று பக்தர்கள் வைக்கும் பலவிதமான கோரிக்கைகளை, இத்தல ஆஞ்சநேயர் தவறாமல் நிறைவேற்றித் தருவதாக, பக்தர்கள் அனைவரும் சிலிர்ப்போடு கூறுகின்றனர்.

தங்களது கோரிக்கை நிறைவேறியதும் ஆலயம் வரும் பக்தர்கள், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டியும், வடை மாலை சாத்தியும் தங்கள் நன்றியை செலுத்திவிடுகின்றனர்.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தளிஞ்சி என்ற இந்த தலம்.

- ஜெயவண்ணன்


Next Story