ஆன்மிகம்

வளங்களை அள்ளித்தரும் செங்காட்டங்குடி ஈசன் + "||" + Chengattungudi is the best source of resources

வளங்களை அள்ளித்தரும் செங்காட்டங்குடி ஈசன்

வளங்களை அள்ளித்தரும் செங்காட்டங்குடி ஈசன்
குழந்தையின் மாமிசம் கேட்டார் என்பதற்காக, தனது குழந்தையையே வாளால் அரிந்து அமுது படைத்தார் சிறுத்தொண்டர்.
“சிவனடியார் ‘நரபசு' என்னும் குழந்தையின் மாமிசம் கேட்டார் என்பதற்காக, தனது குழந்தையையே வாளால் அரிந்து அமுது படைத்தார் சிறுத்தொண்டர். அவர் அளவுக்கு என்னால் உன்னிடம் பக்தி காட்ட இயலாது” என்று சிவ பெருமானிடம் முறையிடுகிறார் பட்டினத்தார்.

அந்த அளவுக்கு அறுபத்து மூன்று நாயன்மார்களில் செய்வதற்கு அரிய செயலைச் செய்தவர் சிறுத்தொண்டர் நாயனார் என்பதனை சிவநெறியில் நிற்கும் பெருமக்கள் அனைவரும் அறிவர். அப்படி என்ன செய்துவிட்டார் இந்த சிறுத்தொண்டர்?! தன் ஒரே குழந்தையை சிவனடியாருக்காக அரிந்து, சமைத்து அமுது படைத்தார்.

நரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் ஒரு சிவபக்தர். மன்னனின் ஆணைப்படி வடக்கேயுள்ள வாதாபியைக் கைப்பற்றி அங்கிருந்த கணபதி சிலையின் மேல் மிகுந்த அன்பு கொண்டு அந்தக் கணபதியை எடுத்து வந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்து அனுதினமும் வழிபட்டு வந்தவர். மேலும் அத்தல ஈசனான கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் தினசரி தரி சனம் செய்து வந்தார்.

பின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து, தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் தன் ஊரான திருசெங்காட்டங்குடியிலேயே சிவத்தொண்டை மேற்கொண்டார். தினமும் சிவனடியார்களுக்கு தன் இல்லத்தில் அறுசுவை அமுது படைத்து, அவர்கள் உணவருந்திய பின்பே தான் உணவு உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். சிவனடியார்கள் முன் தன்னை மிகவும் சிறியவராய் எண்ணி பயபக்தியுடன் நடந்து கொள்வார் பரஞ்சோதியார். அதனால் மக்கள் அவரை ‘சிறுத்தொண்டர்' என்றே அழைத்தனர்.

ஒருநாள் அமுதுண்ண சிவனடியார் எவரும் சிறுத்தொண்டர் வீட்டுப் பக்கம் வரவில்லை. இதனால் அமுதுண்ண அடியவரைத் தேடி வெளியில் சென்றார் சிறுத்தொண்டர். அப்போது சிவபெருமான், பைரவ அடியவர் வேடம் கொண்டு சிறுத்தொண்டர் வீட்டு முன்பு நின்றார். அப்போது வீட்டில் சிறுத்தொண்டரின் மனைவியும், பணிப்பெண்ணுமே இருந்தனர். குழந்தை சீராளன் அருகிலுள்ள திருமருகல் திருத்தல குருகுலப் பாடசாலை சென்றிருந்தான்.

அடியவர் வேடத்தில் இருந்த சிவபெருமான், “சிவத்தொண்டர்களுக்கு எந்நாளும் தவறாமல் உணவளிக்கும் சிறுத்தொண்டர் இல்லத்தில் உள்ளாரா?” என வினவினார். அதுகேட்ட சிறுத்தொண்டரின் மனைவி மிகுந்த மகிழ்ச்சியுடன் அடியவரை உணவு உண்ண அழைத்தார்.

அடியவர் “சிறுத்தொண்டர் எங்கே?” என்று கேட்டதற்கு, அவர் அடியவரைத் தேடி வெளியில் சென்றிருப்பதை, அவரது மனைவி கூறினார்.

உடனே அடியவர், “அம்மா, பெண்கள் மட்டும் தனித்திருக்கும் இடத்தில் நாம் இருக்கமாட்டோம். அருகிலுள்ள ஆலயத்தில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறேன். சிறுத்தொண்டர் வந்ததும் அங்கு வரச்சொல்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அமுதுண்ண சிவனடியார் யாரும் கிடைக்காத கலக்கத்துடன் வீட்டிற்கு வந்தார் சிறுத்தொண்டர். அப்போது அவரது மனைவி, “நம் இல்லம் தேடி அமுதுண்ண அடியவர் ஒருவர் வந்தார். தாங்கள் இல்லாமையால் சிவாலயத்தின் அருகிலுள்ள ஆத்திமரத்தின் கீழ் அமர்ந்திருப்பதாக கூறிச்சென்றார். அழைத்து வாருங்கள்” என்றாள்.

மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றார் சிறுத்தொண்டர். அங்கிருந்த அடியவரை தொழுது, “அடியவரே, சிறுத்தொண்டன் வந்திருக்கிறேன். தாங்கள் அமுதுண்ண எமது இல்லம் வரவேண்டும்” என்று அழைத்தார்.

அதற்கு அடியவர், “சிறுத்தொண்டரே! யாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் உணவு உட்கொள்வோம். அதற்கான நாள் இன்று; ஆனால் உம்மால் எமக்கு அமுது படைப்பது அரிது' என்றார்.

“என்ன உணவு என்று விவரம் கூறினால் செய்வேன். எனக்கு அரியதில்லை” என்றார் சிறுத்தொண்டர்.

“ஒரு குடிக்கு ஒரு மகனாகவும், ஐந்து வயதிற்குட்பட்ட, உறுப்பில் குறையில்லாத அந்தக் குழந்தையை தாய் பிடிக்க, தந்தை அரிய, இருவரும் மனம் உவந்து சமைத்து, பின்பு அந்தப் பிள்ளைக்கறியை எமக்குப் பரிமாற வேண்டும்' என்றார் அடியவர்.

அதைக் கேட்டு சிறுத்தொண்டர் அதிர்ச்சியடையவில்லை. அவரை வணங்கி, “நீங்கள் அமுதுண்ண ஒப்புக்கொண்டால், உங்கள் விருப்பப்படியே உணவு ஏற்பாட்டை உடனே செய்வோம்” என்றார்.

அடியவர் உருவத்தில் இருந்த ஈசன் சம்மதம் தெரிவித்து இருவரும் சிறுத்தொண்டர் வீட்டை நோக்கி நடந்தனர். வீட்டிற்குச் சென்றதும், சிறுத்தொண்டர் மனைவியிடம் அனைத்து விவரத்தையும் கூறினார்.

“பொருள் கொடுத்தால் கூட குழந்தை தருவார் இல்லை. குழந்தையைப் பெற்றோரே அரியவும் மாட்டார்கள். எனவே காலம் தாழ்த்தாமல் நாம் பெற்ற மகன் சீராளனை அழைப்போம்' என்றார் சிறுத்தொண்டர்.

மனைவியும் இசைவு தர, பாடசாலைக்குச் சென்றிருந்த சீராளனை அழைத்து வந்தார். சீராளனிடமும் விவரம் சொல்லப்பட்டது.

அவன், “சிவத்தொண்டுக்கு தன் உடல் பயன்படட்டுமே” என்றான்.

மகிழ்ந்த சிறுத்தொண்டரின் மனைவி சீராளனை உடனே நீராட்டினாள். பின்பு ‘சிவாய நம' கூறி சீராளனை சிறுத்தொண்டரின் மனைவி பிடிக்க, சிறுத்தொண்டர் துண்டு துண்டாக சீராளன் உடலை அரியத் தொடங்கினார். சீராளன் கறியை சிறுத்தொண்டரின் மனைவியும், பணிப்பெண்ணும் சமைத்து முடித்திட, வாழை இலை விரித்து அமுதுண்ண அடியவரை அழைத்தார் சிறுத்தொண்டர்.

ஆசனத்தில் அமர்ந்த அடிய வருக்கு, சிறுத்தொண்டரின் மனைவி மகிழ்ச்சியுடன் பிள்ளைக்கறியை பரிமாறத் தொடங்கினார். “தலைக்கறியை யாம் விரும்பி உண்போம்” என அடியவர் கூறிட, “தலைக்கறி உதவாது என்று ஒதுக்கிவிட்டேன்” என்றார் சிறுத்தொண்டர்.

அப்போது அருகிலிருந்த பணிப்பெண், “சீராளனின் தலைக் கறியை அடியவர் கேட்பாரோ எனக் கருதி நான் சமைத்திருக்கிறேன்” என்றாள்.

மகிழ்ந்த சிறுத்தொண்டர், “அடியவரே! இதோ தலைக்கறியையும் படைத்துவிட்டேன். விருப்பத்துடன் உண்ணுங்கள் என்றார்.

“தனியே உண்ண மாட்டேன். சிவனடியார் எவரேனும் இருப்பின் அழைத்து வாருங்கள்” என்றார் அடியவர்.

உடனே சிறுத்தொண்டர் வெளியில் சென்று தேடினார். எவரும் கிடைக்கவில்லை. திரும்பி வந்து, “சிவனடியார் எவரையும் காணவில்லை. நானும் விபூதி அணிந்து சிவபூஜை செய்பவன்தான். எனவே நீர் உண்பீரானால், நானே உம்முடன் அமர்ந்து உண்கிறேன்” என்றார்.

“உம்மை விட சிறந்த சிவனடியார் யார் இருக்கிறார். வாரும் என்னுடன் வந்து உணவருந்தும்” என்று அழைத்தார் அடியவர் உருவில் இருந்த ஈசன்.

சிவடினயார் சாப்பிட வேண்டுமே என்ற எண்ணத்தில், தன் பிள்ளையின் கறியை தானே உண்ண முன்வந்தார் சிறுத்தொண்டர். அவர் உணவருந்த முன்வந்த நேரத்தில் அவரை தடுத்து நிறுத்திய அடியவர், “ஆறு மாதத்திற்கு ஒருமுறை உண்ணும் நாம் உண்ணத்தொடங்கும் முன்பு, தினமும் உண்ணும் நீர் முன்பு உண்பதேன்' என்று கூறியவர், “முதலில் நீர் உம் மகனை அழையும்” என்றார்.

“இப்போது இங்கு அவன் உதவான்' என்றார் சிறுத்தொண்டர்.

“அவன் இங்கு வந்தால்தான் நாம் உண்போம். நீ கூப்பிடு அவன் வருவான்” என்றார் அடியவர்.

உடனே சிறுத்தொண்டர் தமது மனைவியைப் பார்க்க, அவர் வாசல் பக்கம் சென்று, “மைந்தா வருவாய்! சீராளா வருவாய். சிவனடியார் அமுதுண்ண அழைக்கிறார் விரைந்து வந்திடுவாய்” என்று கூறி அழைத்தார்.

என்ன விந்தை. பாடசாலையில் இருந்து வருபவன்போல் சீராளன் துள்ளிக்குதித்து ஓடிவர, சிறுத்தொண்டரின் மனைவி கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

சீராளனுடன் அவர் வீட்டிற்குள் நுழைய, அடியவர் உருவில் இருந்த இறைவன் மறைந்தருளினார். பிள்ளைக்கறி படையல் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. அவ்வேளையில் சிவபெருமான், உமையம்மை மற்றும் முருகப்பெருமானுடன் நந்தியின் மேல் அமர்ந்து ‘சேமாஸ்கந்தர்’ வடிவில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார்.

சீராளனின் பிள்ளைக்கறி மலராக மாறிய நிகழ்வு ஆண்டு தோறும், ‘செண்பகப்பூ திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. திருச்செங்காட்டங்குடியில் ‘சீராளங்கறி அமுதுபடையல் விழா' முடிந்த, இருபத்தியோராவது நாள் ‘செண்பகப்பூ விழா' வெகுசிறப்பாக நடைபெறும்.

காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டரும், கும்பகோணத்தில் இருந்து 38 கிலோமீட்டரும் சென்றால், திருச்செங்காட்டங் குடியை அடையலாம்.

- சிவ.அ.விஜய்பெரியசுவாமி