தடைகளை நீக்கியருளும் காடம்புழா பகவதி


தடைகளை நீக்கியருளும் காடம்புழா பகவதி
x
தினத்தந்தி 21 May 2019 7:21 AM GMT (Updated: 21 May 2019 7:24 AM GMT)

மலப்புரம் மாவட்டம், காடம்புழா என்னும் இடத்தில் பகவதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், காடம்புழா என்னும் இடத்தில் பகவதி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு, பக்தர் களின் வாழ்வில் வரும் தடைகளை நீக்கி வளம் பெருகச் செய்யும், ‘முட்டறுக்கல் வழிபாடு’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

தல வரலாறு

பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ச்சுனன், சிவபெருமானிடம் இருந்து பாசுபத அஸ்திரத்தைப் பெறுவதற்காகத் தவமிருந்து கொண்டிருந்தான். சிவபெருமான், அவனுடைய தவத்தில் மகிழ்ச்சி அடைந்தாலும், அர்ச்சுனனுக்கு ‘வில்வித்தையில் தன்னை விட உயர்ந்தவர் எவருமில்லை’ என்கிற கர்வம் இருந்ததால், அவனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கத் தயங்கினார். அதனை அறிந்த பார்வதி, ‘அர்ச்சுனனின் அகந்தையை அகற்றி விட்டு, அவனுக்குப் பாசுபத அஸ்திரத்தை வழங்கலாம்’ என்று சிவபெருமானிடம் சொன்னார்.

சிவபெருமான் வேடுவனாகவும், பார்வதி வேடுவப் பெண்ணாகவும் மாறி அங்கு வந்தனர். அதே வேளையில், அர்ச்சுனனின் தவத்தைக் கலைப்பதற்காகத் துரியோதனனால் அனுப்பப்பட்ட முகாசுரன், பன்றி உருவில் அங்கு வந்தான். வேடுவனாக வந்த சிவ பெருமான் அந்தப் பன்றியை நோக்கி அம்பு எய்தார். தவத்தில் இருந்த அர்ச்சுனனுக்கும் பன்றி வருவது தெரிய, அவனும் அந்தப் பன்றியை நோக்கி அம்பு எய்தான்.

இருவர் எய்த அம்புகளும் பன்றியின் உடலில் குத்தி இருக்க, ‘அந்தப் பன்றியைக் கொன்றது யார்?’ என்பது குறித்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. வில்வித்தையில் பெயர் பெற்ற தன்னை விடுத்து, ஒரு வேடுவன் எப்படி அந்தப் பன்றியைக் கொன்றிருக்க முடியும் என்கிற கர்வத்துடன் அர்ச்சுனன், வேடுவ உருவில் இருந்த சிவபெருமானை நோக்கி அம்புகளைச் செலுத்தத் தொடங்கினான்.

அதனைக் கண்ட வேடுவப் பெண் உருவத்தில் இருந்த பார்வதிதேவி, அவன் எய்த அம்புகள் அனைத்தையும் சிவபெருமானின் உடலில் மலர்களாக மாறி விழச் செய்தார். அப்போதுதான் அர்ச்சுனனுக்கு, வேடுவ உருவில் இருப்பவர்கள் சிவபெருமான், பார்வதி என்பது தெரிந்தது. உடனே அர்ச்சுனன், தான் செய்த தவறை மன்னிக்கும்படி வேண்டி வணங்கினான். சிவபெருமானும் அவனை மன்னித்துப் பாசுபத அஸ்திரத்தை அவனுக்கு வழங்கினார்.

அர்ச்சுனனுக்கு இறைவன் வேடுவன் உருவில் காட்சியளித்த தோற்றமே கிராதன் (வேடுவன்) தோற்றம் என்றும், இந்த வடிவில் இருக்கும் சிவபெருமானை ‘கிராதமூர்த்தி’ (வேடுவமூர்த்தி) என்றும், ‘பாசுபதமூர்த்தி’ என்றும் சொல்லி வழிபடுகின்றனர் என்று புராணக் கதைகள் தெரிவிக்கின்றன.

சிவபெருமானும், பார்வதிதேவியும் வேடுவர் உருவில் அந்தக் காட்டில் சில காலம் இருப்பதென்று முடிவு செய்தனர். அப்போது ஒருமுறை, பார்வதிதேவிக்குத் தாகம் ஏற்பட்டது. அதையறிந்த இறைவன், பூமியின் மீது அம்பை எய்து, கங்கை நீரை வரச்செய்து, இறைவிக்குக் கொடுத்துத் தாகம் தீர்த்தார். இந்நிகழ்வு நடந்த இடத்தை மலையாளத்தில் ‘காடன் (வேடன்) அம்பு எய்த அழா (துளை)’ என்றழைத்தனர். பின்னர், அந்தப் பெயர் ‘காடம்புழா’ என்று பெயர் மாற்றமடைந்து விட்டது என்கின்றனர்.

பிற்காலத்தில், ஒருமுறை ஆதிசங்கரர் இந்த வழியாகப் பயணம் செய்தார். அப்போது, அவருக்கு முன்பாக ஒரு தெய்வீக ஒளி தோன்றியது. ஆதிசங்கரர் அந்த ஒளியின் அருகில் செல்ல முயன்றார். ஆனால், அந்த ஒளி அங்கிருந்த துளை ஒன்றில் சென்று மறைந்தது. உடனே தியானத்தில் ஆழ்ந்த ஆதிசங்கரருக்கு, அந்த ஒளி வேடுவப் பெண் வடிவிலான பார்வதி தேவி என்பதும், அவள் அங்கு வந்ததன் வரலாறும் தோன்றி மறைந்தது.

உடனே ஆதிசங்கரர், அத்துளையில் இருக்கும் இறைவியை அங்கேயே இருக்கச் செய்ய முடிவு செய்தார். அம்பாளின் வெப்பக் கடுமையைக் குறைத்திட, நரசிம்மம் மற்றும் சுதர்சன சக்கரத்தை நிறுவிப் பல்வேறு பூஜைகளைச் செய்தார். பின்னர், அந்தத் துளையின் மேல், பூ மூடல் பூஜையைச் செய்து, அம்பாளை அங்கேயே இருக்கச் செய்து வழிபட்டார் என்று இந்த ஆலயத்திற்கான தல வரலாறு சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு

இந்தக் கோவிலில் நான்கு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட கருங்கல்லாலான கருவறையை உருவாக்கியுள்ளனர். இக்கல்லின் நடுவில் ஐந்து அங்குலச் சுற்றளவு கொண்ட துளை இருக்கிறது. அந்தத் துளையில் பகவதி தேவி இருந்து பக்தர் களுக்கு அருள்புரிந்து வருகிறார். இங்கிருக்கும் பகவதி ‘காடம்புழா தேவி’ என்றும் அழைக்கப்பெறுகிறார். கோவில் வளாகத்தில் அம்பாளின் கடுமையைக் குறைப்பதற்காக ஆதிசங்கரரால் நிறுவப்பெற்ற நரசிம்மம், சுதர்சன சக்கரம் ஆகியவற்றுடன் கணபதி, சாஸ்தா மற்றும் நாக தெய்வங்களும் வழிபாட்டிற்கென்று அமைக்கப் பெற்றிருக்கின்றன.

இக்கோவிலை நிறுவிய ஆதிசங்கரர் கோவிலில் வழிபாட்டுக்கென்று சில வழி முறைகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த வழிமுறையைப் பின்பற்றியே கோவில் வழிபாடுகள் அனைத்தும் நடத்தப் பெறுகின்றன. இந்த ஆலயத்தில் ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திர நாளிலும், சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை விசு போன்ற நாட்களிலும், அனைத்து வெள்ளிக்கிழமை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பெற்று வருகின்றன. ஆடி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆதிசங்கரர் இக்கோவிலை நிறுவியதாகக் கருதப்படும் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் கோவில் நிறுவிய நாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆலயத்தில் ஆதிசங்கரர் நடத்திய பூ மூடல் வழிபாடு மிகச் சிறப்புமிக்க வழிபாடாக இருந்து வருகிறது. இவ்வழிபாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு அனைத்துச் செல்வ வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள முன்பதிவு செய்து கொள்ள வேண்டுமென்கிற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பூ மூடல் வழிபாட்டிற்கு 2045-ம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பெற்றுள்ளதால், தற்போது இந்த வழிபாட்டுக்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்பெற்றுள்ளதாக கோவில் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இக்கோவிலில் இருக்கும் இறைவியை, காலை வேளையில் வித்யா துர்கா (சரஸ்வதி) வடிவிலும், மதிய வேளையில் வனதுர்கா (துர்கா) வடிவிலும், மாலை வேளையில் ஆதி துர்கா (லட்சுமி) வடிவிலும் வழிபாடு செய்யப்படுகிறார். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், கல்வி, செல்வம், வீரம் என்று தங்கள் தேவைக்கேற்ப, வேளைகளைத் தேர்வு செய்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தின் வழியாகச் செல்லும், கோழிக்கோடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது வேட்டிச்சிரா என்ற ஊர். இங்கிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் காடம்புழா இருக்கிறது. திரூர் என்ற இடத்தில் இருந்து 19 கிலோ மீட்டர் தொலைவிலும், மலப்புரம் நகரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஊர் உள்ளது. இந்த இரண்டு ஊர்களிலும் இருந்து காடம்புழா செல்ல ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.

முட்டறுக்கல் வழிபாடு

மனிதர்களுக்கு வரும் கஷ்டம், இடையூறுகள், நோய் உள்ளிட்ட பல்வேறு தடைகளை நீக்குவதற்காக ‘முட்டறுக்கல்’ எனும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த வழிபாட்டிற்குப் பக்தர்கள் கொடுக்கும் தேங்காயைப் பெற்றுக்கொள்ளும் அர்ச்சகர், பக்தரின் வேண்டுதலைக் கேட்டு, அதனை அம்மன் முன்பாகத் தெரிவித்து, அந்தத் தேங்காயை இரண்டாக உடைத்து, தேங்காய் உடைவதற்கேற்றபடி பக்தர் களுக்குப் பலனைச் சொல்கிறார். இக்கோவிலில் ஒவ்வொரு நாளும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான முட்டறுக்கல் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆடி மற்றும் தை மாதம் வரும் வெள்ளிக்கிழமை நாட்களில் 25 ஆயிரம் முட்டறுக்கல் வழிபாடுகள் நடை பெறுவதாகச் சொல்கின்றனர்.

‘முட்டறுக்கல்’ என்பதைத் தமிழில் ‘தடைகள் நீக்கும்’ என்று பொருள் கொள்ளலாம். இங்கு தேகமுட்டு, கர்ம முட்டு, பூமி முட்டு, கிரக முட்டு, வித்யா முட்டு, மாங்கல்ய முட்டு, சந்தான முட்டு, சத்ரு முட்டு, வாகன முட்டு என்று பல்வேறு தடைகளை நீக்குவதற்கான வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

- தேனி மு.சுப்பிரமணி



Next Story