புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்


புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
x
தினத்தந்தி 21 May 2019 7:46 AM GMT (Updated: 2019-05-21T13:16:23+05:30)

அற்புதப் படைப்புகளை பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாகப் பார்த்து வருகிறோம்.

உக்கிரசேனர்

வட இந்தியாவிலுள்ள மதுராவின் மன்னனாக இருந்தவர், உக்கிரசேனர். இவர் யது குலத்தைச் சேர்ந்தவர். கம்சனின் தந்தையும், கிருஷ்ணரின் தாய்வழி பாட்டனாரும் இவரே. உக்கிரசேனர் ஒரு கட்டத்தில் தனது மகன் கம்சனாலேயே சிறையில் அடைக்கப்பட்டார். நெடுங்காலமாக சிறையில் வாடி வந்தார். கிருஷ்ணர், மல்யுத்தப் போட்டியில் வென்று, கம்சனை வதம் செய்தபிறகு, சிறையில் இருந்த உக்கிரசேனரை விடுவித்தார்.

மேலும் அவரையே மதுராவின் அரசராக மீண்டும் அரியணையில் ஏற்றிவைத்தார். கிருஷ்ணரின் தந்தையும், உக்கிரசேனரின் மருமகனுமான வசுதேவருக்கு இளவரசர் பட்டம் வழங்கப்பட்டது. குருசேத்திரப் போருக்குப் பின்னர், துவாரகையில் கிருஷ்ணரின் மூத்த மகன் சாம்பன், முனிவர்களிடம் பெற்ற சாபத்தால், அவரது யது குலத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு இறந்தனர். மேலும் கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புப்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்திகளை அறிந்த உக்கிரசேனர், மனவேதனையால் இறந்துபோனார்.

உபமன்யு

புகழ்பெற்ற முனிவரான வியாக்ரபாதரின் மகன்தான் உபமன்யு. இவர் ஒரு முறை வேறொரு முனிவரின் மடத்தில் இருந்து பசுவின் பாலைப் பருகினார். பின்னர் வீட்டிற்கு திரும்பி வந்த அவர், தனது தாயாரிடம் பால் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அங்கு அதற்கான வசதிகள் எதுவும் இல்லாததால், உபமன்யுவின் தாயார், மாவில் தண்ணீரைக் கலந்து பால் என்று கூறி அவரிடம் கொடுத்தார். அதை ஏற்றுக்கொள்ள உபமன்யு மறுத்து விட்டார். மகனின் வேதனையை புரிந்து கொண்ட அந்த தாய், “நாம் வேண்டும் செல்வச் செழிப்பு உள்ளிட்ட அனைத்தையும், சிவபெருமானால் மட்டுமே தர முடியும்” என்று கூறினார்.

இதையடுத்து உபமன்யு சிவபெருமானை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார். ஆனால் சிவபெருமான் தான் முதலில் செல்லாமல், தேவர்களின் தலைவனான இந்திரனை அனுப்பிவைத்தார். வரம் அளிக்க வந்த இந்திரனிடம், “நான் சிவபெருமானை நோக்கியே தவம் செய்தேன். அவர் நேரில் வந்து தரிசனம் தந்தால்தான் என் தவம் பூர்த்தியாகும்” என்று உபமன்யு கூறிவிட்டார். இதையடுத்து சிவபெருமானே நேரில் தோன்றி, உபமன்யுவுக்கு தேவலோக பதவி வழங்கினார்.

துளசி


வைணவ தலங்களில் பெருமாளுக்கு உகந்த இலையாக இருப்பது துளசி. லட்சுமிதேவியே துளசிச் செடியாக பூமியில் உருமாறி நிற்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த துளசியை இந்துக்கள் புனிதமான ஒரு பொருளாக பார்க்கிறார்கள். நமது நாட்டில் இந்து சமயத்தில் விருட்ச (மர) வழிபாடு என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒன்று.

துளசி வழிபாடு என்பது அவற்றுக்கெல்லாம் தலையாயது என்கிறார்கள். துளசியை ஒவ்வொருவரும் அவர்களது வீட்டின் மாடத்தில் வைத்து பூஜித்து வருவது பல நன்மைகளை வழங்கும் என்பது ஆன்மிக சான்றோர்களின் அறிவுரை. பெருமாள் ஆலயங்களில் தரப்படும் துளசி தீர்த்த பிரசாதம், பக்தர் களின் நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

திருணாவர்த்தன்


குழந்தைப் பருவத்தை கோகுலத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணனைக் கொல்ல, பல அரக்கர்களை அனுப்பினான் கம்சன். ஆனால் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தொடர்ந்து திருணாவர்த்தன் என்ற அசுரனை, கிருஷ்ணனை கொல்வதற்காக அனுப்பிவைத்தான், கம்சன். கோகுலத்திற்கு வந்த அந்த அசுரன், சூறாவளியாக மாறி கிருஷ்ணரைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தான். அங்கு வைத்து குழந்தை கிருஷ்ணனை இறுக்கி கொல்ல முடிவு செய்தான்.

ஆனால் கிருஷ்ணன், தன்னுடைய உடல் எடையை அதிகப்படுத்தியதுடன், அசுரனின் கழுத்தை இறுக்கமாக பிடித்து அழுத்தத் தொடங்கினான். கிருஷ்ணனின் எடை பாரத்தையும், கழுத்தில் அழுத்தியதையும் தாங்க முடியாத அந்த மலை போன்ற அசுரன் பூமியில் விழுந்து இறந்தான்.


Next Story