பைபிள் கூறும் வரலாறு : சபை உரையாளர்-21


பைபிள் கூறும் வரலாறு : சபை உரையாளர்-21
x
தினத்தந்தி 21 May 2019 8:02 AM GMT (Updated: 21 May 2019 8:02 AM GMT)

புத்தகம் விவிலியத்தில் எப்படி இடம்பெற்றது என வியக்க வைக்கும் ஒரு நூல் ‘சபை உரையாளர்’.

புத்தகம் எழுதிய காலகட்டத்தில் கடவுளை விட்டு விலகிய ஒரு வாழ்க்கை வாழத் தொடங்கியிருந்தார். வாழ்வின் முதுமை வயதில் இந்த நூலை அவர் எழுதுகிறார். ‘மகனுக்கு அறிவுரை கூறுவது போல’ சிறப்பான‌ நீதிமொழிகள் எனும் நூலைத் தந்து சிலிர்ப்பூட்டிய அவர், இந்த நூலில் தந்திருப்பது வாழ்வின் நிலையாமை குறித்த தத்துவங்களை.

வாழ்க்கை வீண் எனும் சிந்தனையும், இந்த உலகத்தில் வாழும் வரை நன்றாக உண்டு குடித்து வாழவேண்டும் எனும் சிந்தனையும் அவரை நிரப்பியிருந்தன. எனவே ஒரு தத்துவ நூலைப் போல இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். இந்த நூலில் 21 அதிகாரங்களும், 222 வசனங்களும், 5584 வார்த்தைகளும் உள்ளன. இந்த நூல் கி.மு. 935 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

சாலமோன் மன்னன் மிகப்பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். வெற்றிகளை ரசித்தார். இறைவனின் முழுமையான ஆசீர்வாதத்துடன் வாழ்ந்தார். ஞானத்தில் நிரம்பினார். உலக செல்வங்களெல்லாம் மன்னர்கள் அவரது காலடியில் கொண்டு வந்து கொட்டினர். எண்ணவோ, நிறையிடவோ முடியாத அளவு தங்கம், வெள்ளி எல்லாம் அவரது அரசில் நிரம்பியது.

அவருக்கு எதிலும் திருப்தி கிடைக்கவில்லை. கலைகளில் நுழைந்தார். அங்கும் திருப்தியில்லை. மனைவியர், வைப்பாட்டியர் என ஆயிரம் பேரை கொண்டிருந்தார். எனினும் வாழ்வில் திருப்தியில்லை. சிற்றின்பம், மது போதை என பாதை மாறினார் எதிலும் திருப்தியில்லை. எல்லாவற்றையும் கடந்து முதுமை நிலையில் அவர் எழுதுகிறார், “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்..” இறைவனை விட்டு விலகினால் வாழ்வின் அத்தனை விஷயங்களும் வீணானவையாய் மாறிவிடும் எனும் ஆழமான சிந்தனையை இந்த நூல் நமக்குத் தருகிறது.

இதில் பல உலக சித்தாந்தங்களை நாம் காணலாம். ‘எது நடக்க இருக்கிறதோ, அது நடக்கும்’ எனும் விதிவச சித்தாந்தம். ‘இந்த நொடியில் இன்பமாக வாழவேண்டும்’ எனும் இருத்தலியல் சித்தாந்தம். ‘பெண்ணை விட ஆணே சிறந்தவன்’ எனும் ஆணாதிக்க சித்தாந்தம். ‘இன்பமே வாழ்க்கையின் தேவை’ எனும் ஹிடோனிச சித்தாந்தம். ‘நல்லதாய்த் தோன்றும் விஷயங்கள் கூட நல்லதல்ல’ எனும் வெறுப்பு மனப்பான்மைச் சித்தாந்தம். ‘எல்லாமே மோசமாய் தான் நடக்கும்’ எனும் அவநம்பிக்கைச் சித்தாந்தம். இவற்றையெல்லாம் சபை உரையாளரின் எழுத்துகளில் காணலாம்.

‘இறைவன் படைப்பில் ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்’ என தொடங்கி அவர் எழுதும் மூன்றாம் அதிகாரம் மிகப் பிரபலம். எல்லாவற்றையும் இறைவன் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவரது நேரத்தில் எல்லாம் சிறப்பாய் நடக்கும் எனும் சிந்தனையை இதில் நாம் காணலாம். நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே இறைவனின் விருப்பப்படி நடக்கின்றன எனும் ஆறுதல் இந்த வரிகளில் மிளிர்கிறது.

சாலமோன், ‘கடவுளை நினையுங்கள், கடவுளுக்கு அஞ்சி நடங்கள்’ என்றும் கூறுகிறார். “உயிரைக் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம், ஆன்மாவைக் கொல்பவர்களுக்கே அஞ்சுங்கள்” என்று இயேசுவும் குறிப்பிட்டிருந்தார். ஆன்மா அழிந்தால் வாழ்க்கை நரகத்துக்குச் செல்லும் என்பதையே இயேசு தனது போதனையில் தெளிவு படுத்தினார்.

தான் கடவுளுக்கு அஞ்சி நடக்கவில்லை எனும் உறுத்தல் சாலமோனுக்கு உருவாகியிருக்க வேண்டும். எனவே தான் ‘கடவுளுக்கு அஞ்சி நடங்கள்’ என குறிப்பிட்டார். கடவுளுக்கு தான் கீழ்ப்படியவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். வேறு இன பெண்களை மணந்து, வேறு தெய்வங்களையும் சார்ந்தவர் அவர். எனவே இப்போது புத்தி தெளிந்தவராய், “கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றும் போதிக்கிறார்.

அறிவையும் புத்தியையும் வளர்த்துக் கொண்டே போவதால் ஆன்மிகம் வளராது. மனதுக்குள் வெற்றிடமே உருவாகும் என்பதையும் இவரது நூல் கற்றுத் தருகிறது. இந்த நூல் பைபிளில் இடம் பெறுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு.

ஒன்று, எத்தனை தான் இறை ஆசீர் பெற்ற மனிதராய் இருந்தாலும் கடவுளை விட்டு விலகினால் வாழ்க்கை வெற்றிடமாகும், பாவத்தின் பிறப்பிடமாகும், நிம்மதியற்ற வெறுமையாகும் என்பதைப் புரிய வைக்க.

இரண்டாவது, உலக தத்துவங்களைச் சார்ந்து வாழாமல் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் வாழவேண்டும் என்பதைப் புரிய வைக்க. எதையும் விண்ணக வாழ்க்கை எனும் கண்ணோட்டத்தில் அணுகாவிட்டால் இத்தகைய தடுமாற்றங்கள் நிச்சயம் உருவாகும். சாலமோன் இந்த நூலை மண்ணகக் கண்ணோட்டத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார்.

சாலமோன் போன்ற ஞானிகளுக்கே இந்த நிலையெனில் சாதாரண மக்கள் நிச்சயம் அழிவுக்குள் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை. கவித்துவமும், தத்துவமும், அது புரியவைக்கும் ஆன்மிகப் புரிதலுமாய் சபை உரையாளர் நூல் ரொம்பவே வசீகரமாய் இருக்கிறது.

- சேவியர்


Next Story