கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்


கோவில் கொடிமரத்தின் முக்கியத்துவம்
x
தினத்தந்தி 21 May 2019 2:50 PM IST (Updated: 21 May 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

மனித உடலே கோவிலாகவும், உள்ளமே கருவறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது

மனித உடல் வடிவமைப்பை அடிப் படையாக கொண்டு, கோவில்கள் அமைக்கப்பட்டு, வழிபாட்டு தலங்களாக அமைக்கப்பட்டதாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன. மனித உடலே கோவிலாகவும், உள்ளமே கருவறையாகவும் உருவகம் செய்யப்பட்டுள்ளது. சித்தர்களின் கூற்றுப்படி, தலை என்பது கோவிலின் கருவறை, புருவ மத்தி என்பது கருவறை வாசல், முகம் - அர்த்த மண்டபம், மார்பு பகுதி - ஸ்நான மண்டபம், வயிற்றுப் பகுதி - மகா மண்டபம், கணுக்கால் - ஆஸ்தான மண்டபம், பாதம் - கோபுரம் என்று கருதப்படுகிறது. ராஜகோபுரம் என்பது இறைவனின் பாதமாக குறிப்பிடப்படுகிறது.

கொடிமரம் என்று சொல்லப்படும் ‘துவஜஸ்தம்பம்’, கோவில் திருவிழா காலங்களில் கொடியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட மரமாகும். அடிப்பகுதி சதுரம், அதற்கு மேல் எண்கோண வேதிகை அமைப்பு, தடித்த உருளை பாகம் என, கொடிமரம் மூன்று பாகங்களை உடையது. இதில் சதுரப்பகுதி பிரம்மா என்றும், எண்கோண அமைப்பு மகாவிஷ்ணுவையும், உருளை அமைப்பு சிவனையும் குறிப்பதாக ஐதீகம்.

* கொடிமரம் மற்றும் பலிபீடம் ஆகியவற்றுக்கு பின் பகுதியில் கீழே விழுந்து வணங்குவதற்கான இடம் இருக்கும். கோவிலில் இப்பகுதியில்தான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும்.

* கிழக்கு நோக்கிய கோவில்கள் மற்றும் மேற்கு நோக்கிய கோவில்கள் ஆகியவற்றில் வடக்கு பக்கம் தலை வைத்து நமஸ்காரம் செய்வது முறை.

* தெற்கு நோக்கிய கோவில்கள் மற்றும் வடக்கு நோக்கிய கோவில்களில் கிழக்கு பக்கம் தலை வைத்து நமஸ்காரம் செய்வது முறை.

* கிழக்கு திசை அல்லது வடக்கு திசை ஆகிய பகுதிகளில் கால்களை நீட்டியவாறு நமஸ்காரம் செய்வது கூடாது.

* ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வது முறை.

* ஆண்-பெண் நமஸ்காரங்கள் 3, 5, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் இருக்க வேண்டும் என்பதை ஆன்மிக சான்றோர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர்.


Next Story