எசாயா


எசாயா
x
தினத்தந்தி 4 Jun 2019 2:50 PM GMT (Updated: 2019-06-04T20:20:58+05:30)

விவிலியத்தில் உள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்க தரிசன நூல் எசாயா நூல் தான். 1948 -ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது.

அது கி.மு. 100-ம் ஆண்டைச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத்தன்மையை உறுதியாக்கியிருக்கிறது.

எசாயா நூலைப் பிரித்திருப்பதிலும் ஒரு சுவாரசியம் உண்டு. நூலில் 66 அதிகாரங்கள் உண்டு. விவிலியத்தில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கையும் 66. (இணை திருமறைகள் தவிர). அந்த அதிகாரங்களும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் 39 அதிகாரங்கள் ஒரு பிரிவு, அடுத்த 27 அதிகாரங்கள் இரண்டாவது பிரிவு. சுவாரசியம் என்னவென்பது புரிந்திருக்கும். பழைய ஏற்பாட்டு நூல்கள் 39, புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 என்பது இந்த அதிகாரங்களின் எண்ணிக்கைகளோடு ஒத்துப்போகிறது.

அது வெறும் எண்ணிக்கைக் கணக்கோடு முடியவில்லை. முதல் முப்பத்தொன்பது அதிகாரங்களில் பழைய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் அடுத்த இருபத்தேழு அதிகாரங்களில் புதிய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். அதிலும் குறிப்பாக ‘குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்’ எனும் வார்த்தையோடு இரண்டாவது பாகம் தொடங்குவது வியப்பு. அது புதிய ஏற்பாட்டில் இயேசுவை வரவேற்க யோவான் கூறிய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், ஒட்டு மொத்த பைபிளின் ஒரு சுருங்கிய வடிவமாக இந்த நூலைச் சொல்லலாம். கி.மு. 740 -க்கும் 680- க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பணி செய்தார். இவரை ‘மெசியானிக் இறைவாக்கினர்’, ‘பழைய ஏற்பாட்டின் பவுல்’, ‘இறைவாக்கினர்களின் ஷேக்‌ஸ்பியர்’ என்றெல்லாம் புகழ்வதுண்டு.

மிகவும் அழகான இலக்கியத்தரத்தோடும், கவிநயத்தோடும் எழுதப்பட்ட நூல் எசாயா. ஆன்மிகச் செறிவும், அழகியலும் கலந்த நூல் இது. இந்த நூலில் 1292 வசனங்களும், 37,044 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.

‘எசாயா’ எனும் பெயருக்கு ‘கடவுள் மீட்கிறார்’ என்பது பொருள். இயேசு, யோசுவா என்ற பெயர்களைப் போலவே பொருளுடைய பெயர் இது. யூதர்கள், மோசே, எலியா போன்றோரோடு எசாயாவையும் இணைத்துப் பார்க்கின்றனர்.

“இவர் நல்ல ஆன்மிகப் பெற்றோரின் மகனாகப் பிறந்தவர். யோவாஸ் மன்னனின் பேரன். உசியாவின் உடன்பிறவா சகோதரன். நல்ல செல்வமும், படிப்பும், புகழும் உடையவர். ஆன்மிகத்தில் ஆழமாய் இருந்தவர்” என்றெல்லாம் இவரைப்பற்றி வரலாற்றாசிரியர் ஜோசபஸ் குறிப்பிடுகிறார்.

இவரது மனைவியும் ஒரு இறைவாக்கினராய் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருந்திருக்கலாம் என்பது வரலாறு. இறைவனின் புனிதத்தன்மையைப் பார்த்தபின் அவரால் தனது அழுக்குகளை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. உதடுகளை சூடுவைத்துக் கொண்டவர் இவர்.

“யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்” என பேசும் இறைவார்த்தையின் மூலமாக இறைவனின் “மூவொரு தன்மை”யை வெளிப்படுத்தியவர் எசாயா. இறைமகன் இயேசுவின் பிறப்பும், அவரது வாழ்வு, மரணமும் இவரது நூலில் அழகாக வெளிப்படுகிறது.

எசாயாவின் காலத்தில் பல முக்கியமான மன்னர்கள் ஆட்சி செலுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் இறைவனின் செய்தியையும், எச்சரிக்கையையும் எசாயா வழங்கினார்.

உசியா மன்னன் 52 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். நல்லமுறையில் ஆட்சியைத் தொடங்கிய அவர் பின்னர் வழி விலகிப் போனார். யோத்தாம் பத்தொன்பது ஆண்டுகள் ஆண்டார். நல்லவராக இருந்த மன்னர்களில் ஒருவர் இவர். ஆகாஸ் இருபது ஆண்டுகள் மோசமான ஆட்சியை நடத்தினார். எசேக்கியா நல்ல ஆட்சியை இருபத்தொன்பது ஆண்டுகள் கொடுத்தவர். மனாசே ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் மோசமான ஆட்சியை வழங்கினார்.

இவர்கள் எல்லோருடைய காலத்திலும் எசாயா வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நூலின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. சிலர் இதை இரண்டாம் எசாயா எழுதினார் என்று கூட சொல்வதுண்டு.

உதாரணமாக முதல்பாகம் அதிகமான கெட்ட செய்தியைச் சொல்கிறது, இரண்டாம் பாகம் நல்ல செய்திகளை அதிகமாய் பேசுகிறது. முதலாவது பாவம், பழிவாங்குதல் போன்றவற்றைப் பேசுகிறது. இரண்டாவது மீட்பையும், காப்பாற்றுதலையும் பேசுகிறது. முந்தையது நீதியையும், அடுத்தது இரக்கத்தையும் பேசுகிறது. முந்தையது யூதர்களையும் பிந்தையது பிற இனத்தாரையும் பேசுகிறது. முந்தையது நிகழ்காலத்தையும், பிந்தையது எதிர்காலத்தையும் பேசுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

எசாயா நீண்டகாலம் வாழ்ந்தார் என்பதும், பல காலகட்டங்களில் வாழ்ந்தார் என்பதும், பலவகையான சூழல்களில் அவர் இறைவாக்குரைத்தார் என்பதும் தான் இந்த நூலின் பன்முகத் தன்மைக்குக் காரணம். இறைவனின் தெளிவான வெளிப்பாடை இவர் பெற்றிருந்தார் என்பதற்கு கடைசி இருபத்தேழு அதிகாரங்கள் மிகச் சிறந்த சான்று.

பெரிய இறைவாக்கினர்களில் முதலானவர் என அழைக்கப்படும் எசாயா நூலை அதன் இறைத் தன்மைக்காகவும், நிலைத் தன்மைக்காகவும், இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம்.

(தொடரும்)

Next Story