ஆன்மிகம்

சங்கடங்கள் தீர்க்கும் லயன் சித்தி விநாயகர் + "||" + Layan Chiththi Vinayakar to solve difficulties

சங்கடங்கள் தீர்க்கும் லயன் சித்தி விநாயகர்

சங்கடங்கள் தீர்க்கும் லயன் சித்தி விநாயகர்
இந்தியர்கள், மலேயர்கள், சீனர்கள் என மூன்று நாட்டினர் சங்கமிக்கும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்வது சிங்கப்பூர். இங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வழிபடும் தெய்வமாக விளங்குபவர், லயன் சித்தி விநாயகர். இக்கோவிலை சிங்கப்பூர் நகரத்தார் சமூகம் எழுப்பி, நிர்வாகம் செய்து வருகிறது.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பிழைப்புத் தேடி வருகின்றனர். ஆனால் நகரத்தார் சமூகத்தினர் வட்டித் தொழிலைச் செய்து வந்தனர். காலனியத்திய ஆட்சி நடந்த பர்மாவில் செய்து வந்த வட்டித் தொழில் ஆதரவைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் வட்டித் தொழில் மேற்கொண்டு கடன் வழங்கும் வணிகம் செய்தனர். ஆங்கிலேயர்களுக்கே பணம் தந்து வணிகம் செய்யும் அளவுக்கு அவர் களின் தரம் உயர்ந்திருந்தது. இதற்குச் சான்றாக இன்றும் ரபேல் சதுக்கத்தில் நகரத்தார் நிதி வணிகம் செய்யும் காட்சியாக வெண்கலச்சிலை நிறுவப்பட்டிருப்பதை காணலாம்.

வட்டித்தொழில் செய்து வந்த நகரத்தார், தெய்வ வழிபாட்டிலும் சிறப்பானவர்களாக விளங்கினர். முருகப்பெருமானின் தீவிர பக்தர்களாக விளங்கும் இவர்கள், தாங்கள் சென்ற இடமெல்லாம் முருகன் ஆலயங்களை எழுப்பி வழிபடத் தொடங்கினர். அவ்வாறு எழுப்பப்பட்டதே, சிங்கப்பூர் தண்டாயுதபாணி ஆலயம். இதன்பின் துணைக் கோவிலாக எழுந்த ஆலயம், ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம்.

ஆலயத் தோற்றம்

நகரத்தார் சிங்கப்பூரில் கி.பி. 1820-ம் ஆண்டு முதல் குடியேறத் தொடங்கினர். என்றாலும், கி.பி.1859-ம் ஆண்டுதான் முதன்முதலாக தண்டாயுதபாணி கோவில் எழுப்பப்பட்டது. இதன்பிறகு கி.பி. 1925-ம் ஆண்டு எழுப்பப்பட்டதே லயன் சித்தி விநாயகர் கோவில்.

இந்தக் கோவிலில் உள்ள மூன்று விநாயகர் விக்கிரகங்களில், மூலவிக்கிரகமாக விளங்குவது லயன் சித்தி விநாயகர் ஆவார். கி.பி. 1925-ம் ஆண்டு சிங்கப்பூர் நகரில் இந்தக் கோவில் எழுப்பப்பட்டபோது, பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர், மூல விக்கிரகத்தை நகரத்தாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரிடம் தந்த வாக்குறுதியின்படி, அவர் வழங்கிய சிலையோடு புதிய கருங்கல் விக்கிரகத்தை இந்தியாவில் இருந்து வரவழைத்து பிரதிஷ்டை செய்தனர். ‘சிப்பாய் லயன்’ என்ற குடியிருப்புப் பகுதியில் இருந்து வந்த விநாயகர் என்பதால், இவருக்கு ‘லயன் சித்தி விநாயகர்’ எனப் பெயர் ஏற்பட்டது.

மார்க்கெட் அருகில் உள்ள நகரத்தார் கிட்டங்கிகள், நகர மேம்பாட்டுக்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது. அப்போது மூன்றாவது பிள்ளையார் சிலையை நகரத்தார் இக்கோவிலுக்கு வழங்கினர். 1975 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆலயம் மறு சீரமைக்கப்பட்டு, 2007-ம் ஆண்டு ஆலயத்தின் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆலய அமைப்பு

ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக காட்சி தர, பெரிய சுற்று மண்டபம், பல்நோக்கு அரங்கம், ஊழியர் தங்குமிடம் என ஆலயம் விஸ்தாரமாக அமைந்துள்ளது.

இக்கோவிலில் தெய்வ வழிபாடுகளுடன் சமூகத் தொண்டும் ஆற்றப்பட்டு வருகிறது. தங்களின் சொந்த நலன் என்பது, பிற சமூகத்தின் நலன் சார்ந்தது என்பதை உணர்ந்த இந்த ஆலயத்தின் நிர்வாகம், தமிழ்ப் பள்ளிகள் நடத்துதல், மாணவர் களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம்கள், அன்னதானம், தேவார வகுப்புகள் என பல்வேறு சமூகச் சேவைகளைச் செவ்வனே செய்து வருகின்றது.

இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியும், தைப்பூசமும் மிகவும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசம் அன்று தேங் ரோட்டில் உள்ள தண்டாயுதபாணி உற்சவர் புறப்பாடு ஆகும். மார்க்கெட் தெரு வழியாக உலா வரத் தொடங்கும் முருகப்பெருமான், தனது அன்னை மாரியம்மனை தரிசித்து, தன் அண்ணன் லயன் சித்தி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, மீண்டும் தன் ஆலயம் திரும்புவார். ஆவணி மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி, விநாயகருக்கான முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் இங்கு வெகு விமரிசையாக நடைபெறுகின்றன. விழாக் காலங்களில் மாலையில் வளாகத்திற்குள் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

எந்த விதமான நல்ல நோக்கம் கொண்ட வேண்டுதலையும், எளிதில் நிறைவேற்றித் தருபவர் இந்த ஆலயத்தில் இருக்கும் லயன் சித்தி விநாயகர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இவரை 108 முறை வலம் வந்து வழிபடுவோர், எண்ணம் எளிதாக ஈடேறும் என்பது ஐதீகமாக உள்ளது.

தண்டாயுதபாணி ஆலயத்தைப் போலவே, லயன் சித்தி விநாயகர் ஆலயமும் நகரத்தார் சமூகத்தினரால் நல்ல முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

சிங்கப்பூரின் சைனா டவுன் பகுதியில், லயன் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. கியோங் செய்க் சாலை மற்றும் கிரேத்தா ஆயர் சாலை சந்திப்பில் இவ்வாலயம் இருக்கிறது. இதன் அருகே ஊட்டரம்பார்க் மெட்ரோ மற்றும் சைனா மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன.

- பனையபுரம் அதியமான்