வாழ்வை வளமாக்கும் பிரார்த்தனைகள்


வாழ்வை வளமாக்கும் பிரார்த்தனைகள்
x
தினத்தந்தி 13 Jun 2019 9:30 PM GMT (Updated: 2019-06-13T15:46:06+05:30)

விதியை வெல்ல முடியுமா? நிச்சயம், விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள் எல்லோரும். ஆனால் அது எப்படி என்று கேட்டால் எல்லோரும் சற்று யோசிப்பார்கள்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் தான் இஸ்லாம் துல்லியமாக நமக்கு இரண்டு வழிகளைக் காட்டுகிறது. ஒன்று ‘துஆ’ எனும் பிரார்த்தனை. மற்றொன்று ‘ஸதகா’ எனும் தான தர்மம். இந்த இரு வழிகளையும் நாம் கைவிடாது மேற்கொள்கிறபோது, நிச்சயம் நம்முடைய தலைவிதிகள் யாவும் மாறும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.

‘துஆ’ எனும் இறைஞ்சுதலை, கெஞ்சிக்கேட்பதை அல்லாஹ் மிகவும் விரும்புகிறான். நாம் அவனிடம் துஆ கேட்பது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ‘யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

கேட்டால் கோபப்படுபவன் மனிதன். கேட்காவிட்டால் கோபப்படு பவன் இறைவன். எனவே நாம் நமது பிரார்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது குறித்து திருக்குர்ஆன் வசனம் 40:60 இப்படிக் கூறுகிறது:

“உங்கள் இறைவன் கூறுகிறான்: என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்”.

இவ்வசனம், பிரார்த்தனை அது ஒரு வணக்கம்; அதை விடுவது பெருமையடிக்கும் செயல்; அதனால் நரகம் கிடைக்கக் கூடும். எனவே நாம் நமது பிரார்த்தனை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை வெகுஅழகாகக் கூறுகிறது.

ஆகவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் “பிரார்த்தனை: அது ஒரு வணக்கம்” என்று கூறினார்கள். அதாவது தொழுவது எப்படி ஒரு வணக்கமோ அதுபோல பிரார்த்தனை செய்வதும் ஒரு வணக்கம் தான்.

பிரார்த்தனை செய்யும் போது நாம் கேட்பது நிச்சயம் நமக்கு கிடைக்கும் என்ற மிக உறுதியான உள்ளத்துடன், மனம் உருகிக் கேட்க வேண்டும். அப்போது தான் நாம் கேட்பது நமக்கு கிடைக்கும். இல்லை எனில் நமது அன்றாடப் பிரார்த்தனைகளில் எவ்விதப் பலனும் இருக்காது.

அடுத்து, தர்மம். இதுவும் இன்றைக்கு முழுமையாக நிறைவேற்றப் படுவதில்லை என்பது தான் மிகுந்த வேதனைக்குரியது. நாம் மட்டும் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் நம்மை நம்பி வரும் அந்த இறையடியார்களுக்கு மட்டும் கஞ்சத்திலும் கஞ்சமாய் வடிகட்டி ஓரிரு சில்லறைக்காசுகளை தூக்கிப்போட வேண்டும். கோடான கோடிச் செல்வமும் அல்லாஹ் நமக்கு போட்ட பிச்சை என்பதை ஏனோ நாம் அவ்வப்போது மறந்து போய் விடுகிறோம்.

இதனால் தான் இறை வசனம் செல்வங்களைக்குறித்துப் பேசும் போதெல்லாம் “நாம் கொடுத்ததிலிருந்து...” என்று அடிக்கோடிட்டுக் காட்டிச் செல்கிறது.

“நீங்கள் நேசிக்கும் பொருள்களி லிருந்து தானம் செய்யாதவரை நிச்சயமாக நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்”. (திருக்குர்ஆன் 3:92)

நாம் விரும்பியதை கொடுக்காதவரை நமக்கான நன்மைகளை நிச்சயம் நாம் பெற்றுக்கொள்ள முடியாது என்று பேசும் இவ்வசனம் நமது அன்றாட தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிகத்தௌிவாக சொல்லிச் செல்கிறது.

ஆனால் நாம் இன்றைக்கு எப்படியிருக்கிறோம்? ஒன்றுக்கும் உதவாத பொருட்களை தர்மம் என்ற பெயரில் கொடுக்கிறோமே அது எந்த வகையில் நியாயம்? தான தர்மம் என்பது அது ஏதோ அடுத்தவர்களுக்கு அள்ளிக்கொடுப்பது; தூக்கிக் கொடுப்பது என்பது மட்டுமல்ல. அதையும் தாண்டி அடுத்தவர்களையும் வாழவைப்பது என்பதும் தர்மம் தான்.

எனவே நாம் கொடுக்கும் தர்மம் கட்டாயம் பயனுள்ளதாக, சிறப்பானதாக, உயரியதாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் உங்களுக்கு எதை விரும்புவீர்களோ அதையே நீங்கள் மற்றவர்களுக்கும் விரும்புவதாக இருக்க வேண்டும். இப்படி செய்வது தான் உண்மையில் மிகச்சிறந்த தர்மமாகும்.

துஆவும், ஸதகாவும் அதாவது பிரார்த்தனையும், தர்மமும் மனிதனின் தலைவிதியை எப்படியோ புரட்டிப்போட்டு விடுகின்றன. அப்படியானால் அவ்விரண்டின் மகிமை என்ன என்பதை நம்மால் நன்கு புரிந்து கொள்ளமுடிகிறது.

வாருங்கள், தர்மங்களையும், நல்ல பிரார்த்தனைகளையும் செய்வோம்.

மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3

Next Story